நான்
கிழக்கு வானத்தின்
வைகறைப் பொழுதில்
விண்மீன்களைக் கண்டு
விடியலைக் காண்கிறேன்
நீயோ
தொலைக்காட்சிப் பெட்டியில்
சூரிய உதயத்தைக்
காண்கிறாய்
நான் புழுதியில்
கிடக்கும் விதைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
நீயோ
கணினியின்
திரை வழியே
காளை, கரடியின்
ஏற்ற இறக்கத்தினை
எதிர் நோக்குகிறாய்
குளிர்சாதனக்
கூட்ட அரங்கினுள்
"விவசாயி' நாட்டின்
முதுகெலும்பு என்கிறாய்
நானோ
விலா எலும்புகளால்
என் நிலத்தைக்
கீறிக்கொண்டிருக்கிறேன்
நீயோ
பீட்சாவும், பர்கரும்
பேரின்பம் என்கிறாய்
நானோ
நேற்றைய பொழுதின்
சோற்றுப் பருக்கைகளின்
எச்சத்தை அமிர்தமாக
எண்ணி ஆனந்தம்
அடைகிறேன்
வாசனைத்
திரவியங்களோடு
பழக்கப்பட்ட நீங்கள்
ஆடை களைந்த எங்கள்
கருத்த மேனியில்
உதிர்த்த வியர்வைத்
துளிகளின் வாடையை
நுகர்ந்ததில்லை
கடன் மீறிப் போனால்
கண்டம் மாறுவதில்லை
நுகத்தைப் பூட்டும் கயிறே
எங்கள் கழுத்தைப் பூட்டும்
நமக்குள்
உலகம் வேறாகினும்
என் உலகத்தில்தான்
நீங்கள்
வாழ்ந்தாக வேண்டும்
நாங்கள் சேற்று மொழி
பேசினால்தான்
நீங்கள் சோற்றுமொழியைச்
சொந்தமாக்க முடியும்.
கவிஞருடன் பேச:
9047864247