இறுதி வரியை எட்ட முடியாத
கவிதை தவிக்கிறது
கவிதைக்கு
உயிர் கொடுக்கும்
அந்த வார்த்தை
தப்பித்துக் கொண்டே இருக்கின்றது
கடும் பிரயத்தனம் செய்த பின்
கையில் சிக்குகிறது
அந்த வார்த்தை
உனக்காகவா
இந்தக் கவிதை?
அடுத்தவருக்கானதா
இந்தக் கவிதை?
கேட்டுச் சிரித்த
அந்த வார்த்தைக்குப்
பதில் அளிக்கத் தெரியவில்லை
யோசித்துக் கொண்டிருக்கையில்
அந்த வார்த்தையே சொன்னது
இது உனக்கானது அல்ல
மற்றவர்களுக்காக
புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு
புனைந்து கொண்டிருக்கிறாய்
இல்லை
என் ஆன்ம திருப்திக்காகவும்
அடுத்தவரின் ஆன்மாவை
உலுக்குவதற்காகவும் என்றேன்
முடிவு தெரியா வாழ்க்கையின்
உச்சத்தை எட்டாத நீ
அடுத்தவரின் அகத்தை
சுத்திகரிக்கின்றாயோ?
கடந்து போகும் நாள்களில்
உதிர்ந்த கடமைகளைக்
கழிக்காத உன் கவிதைகள்
காகிதக் குப்பையே
எனப் பரிகசித்துத்
தப்பி ஓடியது அந்த வார்த்தை
இறுதி வரியை
எட்ட முடியாத
அந்தக் கவிதை தவிக்கிறது