மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

கதை

இறந்தவனுக்குப் பெயரில்லை
ஆரூர் புதியவன், 1-15 மார்ச் 2023


முகத்தில் பெரும் சோகத்தையும் அகத்தில் அளவிலா ஆனந்தத்தையும் அன்வர் சாதாத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தது அந்த இறப்புச் செய்தி. ’இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்' என்றான்.

அதிர்ச்சியான செய்திகளைக் கேட்கும்போது ’இறைவனிடமிருந்து வந்தோம், அவனிடமே மீள்பவர்களாய் உள்ளோம்' என்ற பொருள்படும் திருக்குர்ஆன் வசனத்தைச் சொல்வது நபிகள் நாயகம் காட்டித் தந்த வழி. அதனால் அன்வர் அதைச் சொன்னான். ஆனால் உண்மையில் அந்தச் செய்தி அவனுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

வாழும் காலத்திலேயே அவன் கேட்டுவிட வேண்டும் என ஆசைப்பட்ட செய்தியே அந்த இறப்புச் செய்தி. ஓர் இறப்புச் செய்தியை இன்பச் செய்தியாகக் கருதுவது சரிதானா? என்று அவன் மனசாட்சி பழித்தது. எதார்த்த மனமோ அந்த மனசாட்சியை எதிர்த்தது.

அன்வருக்கு மட்டுமல்ல நூற்றுக்கணக்கானோரின் மனங்களில் இப்படி ஒரு பட்டிமன்றத்தை உருவாக்கி விட்டது அந்த இறப்புச் செய்தி. ’அவன் முகத்தில் செத்தாலும் விழிக்க மாட்டேன்' என்று மௌன சபதம் செய்திருந்தான் அன்வர் சாதாத்.

உள்ளூரில் இருந்துகொண்டு போகாமல் இருந்தால் உலகம் தவறாக நினைக்கும் என்ற ஒரே காரணத்தால் அன்வர் நல்லடக்க நேரத்திற்காவது செல்லலாம் என்று முடிவெடுத்தான். அவனைப் போலவே அனைவரும் முடிவு செய்திருந்ததால் இறப்பு நடந்த வீடு வெறிச்சோடிக் கிடந்தது. வேலைக்காரர்களும், வேறு வழியில்லாமல் சில உறவினர்களும் வேண்டா வெறுப்பாக அங்கே சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் பழனி.

மதியம் அருகிலிருந்த சுக்குபாய் பிரியாணி கடையில் பீஃப் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு வெளியே வந்தான். பழனி, தன் நண்பன் விஜய்யிடம் ’இன்னைக்குதான்டா எனக்கு தீபாவளி, உண்மையான நரகாசுரன் செத்துட்டான்டா' என்றான்.

’சரி எங்கே அவசரமா போறே..?' என்ற விஜய்யிடம், ’நரகாசுரனை சவக்கோலத்துல பார்க்க எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? அங்கதான் போறேன்' என்றான் பழனி.

நல்லடக்கத்திற்கு முன்பு உடலைப் பார்க்க வந்த பலரும் பழனி வந்த அதே நோக்கத்தில்தான் வந்திருந்தனர். தொலைதூர ஊரில் பணியாற்றும் மனைவி, விட்டுப் பிரிந்து போன பிள்ளைகள். வீட்டில் தனிக்கட்டையாக இருந்த அந்த எஜமான் உடன் வசிப்போர் அடிக்கடி மாறுவர்.

’எப்படிச் செத்தாராம்..?'

’தெரியலையே..!'

’பக்கத்து வீடுகளில் மோசமான வாடை வந்ததை வச்சு கண்டுபிடிச்சு வீட்டை உடைச்சு திறந்திருக்காங்க. எப்ப செத்தாருன்னு கூடத் தெரியல..!'

ரசாயனங்களால் பதனம் செய்யப்பட்ட அந்த பூதத்தின் வெடித்த உடல், குளிர்ப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தது.

’அந்தக் கொடுங்கோலனை கண்ணாடிப் பெட்டியில் வைக்கும்போது மேலே துடைப்பான்களையும் பொருத்தி விடுங்கள் வருவோர் காறித் துப்பிவிட்டுப் போகும் எச்சிலைத் துடைக்க உபயோகமாகயிருக்கும்' என்று யாரோ எழுதிய கவிதை அப்போது ஏனோ நினைவுக்கு வந்தது.

மாலை நேரம் மய்யத் வீட்டுக்கு புறப்பட்டான் அன்வர் சாதாத். அங்கே ஹாஜி வாசலில் நின்றிருந்தான். இலஞ்சம் தர மறுத்ததால் பணி நிரந்தரம் செய்யப்படாமல், செத்துக் கிடப்பவனால் வெளியேற்றப்பட்டவன் அல்லவா இந்த ஹாஜி. அவன் எப்படி இங்கு வந்தான்?

சற்று தூரத்தில் நகீப் நின்றிருந்தான். அவன் மனைவியின் வேலையைக் காலி செய்தவன் அல்லவா செத்துப்போனவன். இவன் எப்படி வந்தான்?

சோகத்தை வலிந்து பூசிக்கொண்டு நின்றார் அய்யூப். அவர் பணி ஓய்வு பெறும்போது பழிவாங்கி எந்தப் பயனும் கிடைக்காமல் அடித்தவனல்லவா இப்போது செத்துப் போனவன்..?

தூரமாய் நடந்து போவது அந்தப் பெண்ணா? என்ற ஐயம் வந்தது. நல்லவேளை அது அவள் இல்லை. ஆனால் அவளது சாபங்கள் அங்கே சுழன்று கொண்டிருப்பது போலத் தோன்றியது. அன்வர் சாதாத் இப்போதிருக்கும் ஓர் உயர்ந்த நிலைக்கு வர செத்துப்போனவன் ஒரு காரணம்.

அந்த அரை அரசு (Quasi Government) நிறுவனத்தில் இப்போது இறந்திருப்பவன் முக்கியப் பதவியில் வீற்றிருந்தபோது, அன்வர் சாதாத் தனது தாயாருடன் புனிதப் பயணமாக மக்கா, மதீனா சென்று வந்தான்.

புனிதப் பயணம் முடித்துத் திரும்பியவனுக்கு பணி நீக்க உத்தரவும், காவல்துறை விசாரணையும் காத்திருந்தன.

வெளிநாடுகளில் இயங்கிவரும் சர்வதேச தீவிரவாத அமைப்புகளோடு அன்வர் சாதாத்துக்குத் தொடர்பு இருப்பதாகவும், அடிக்கடி புனிதப் பயணம் என்ற போர்வையில் வெளிநாட்டில் சதியாலோசனைக்குப் போவதாகவும் மேலிடங்களுக்கும், உளவுத்துறைக்கும் கொளுத்திப் போட்டவன் மேற்படியான். முடிவில் அன்வர் சாதாத்துக்கு அந்த வேலை போனது.

வேலை போன நேரத்தில் கண்ணீரும் கவலைகளும் இறைவனிடம் அவன் பேசும் உரையாடல்களாய் மாறின.

எதிர்பாராத திருப்பமாய் அந்த ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி இவனை மேலாளராய் அழைத்து, இப்போது தொழிலில் பங்காளியாகவே ஆக்கிவிட்டார்.

இறந்தவன் செய்த தீமையை இறைவன் இவனுக்கு நன்மை ஆக்கிவிட்டது ஓர் வியப்பு. அருட்கொடையும்கூட! ஆனால் அத்தனை பேருக்கும் அன்வர் சாதாத்துக்குக் கிடைத்த பேறுபோல கிடைத்து விடுமா? குழு குழுவாய் அந்த வீதியில் நின்று செத்தவன் செய்த சிறுமைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

செத்தவன் யாருக்காக இந்த அநியாய அக்கிரமங்களை எல்லாம் செய்தானோ அந்த ஆசாமி ஏனோ சாவுக்கு வரவில்லை. அவருக்குப் பக்கவாதம் அடித்து படுக்கையில் கிடப்பதாக பாபு, அவன் நண்பன் அப்துல் ரஹீமிடம் சொல்லிக் கொண்டிருந்தான். சந்தூக்கில் உடலை வைத்து, தொழுகை முடித்து, மண்ணறையில் அடக்கம் செய்யும் வேளையில் பலரும் இறைவனிடம் மனமுருக இறைஞ்சினார்கள்.

’இறைவா எங்களுக்கு சொல்லொனாத் துன்பங்களைத் தந்தவன் உன்னிடம் வந்துள்ளான். எங்களை அவன் சிறுமைப்படுத்தி நயவஞ்சகம் செய்து துடிதுடிக்க வைத்ததை உன்னிடம் முறையிடுகிறோம்' என்று சிலர் இறைஞ்சியது அன்வர் சாதாத்தின் செவிகளில் விழுந்தது. அன்வர் இரு கைகளையும் ஏந்தினான். இவனும் அவனைச் சபிக்கப்போகிறானா? இல்லை.

’இறைவா! யாருக்கும் அநீதி இழைக்கும் குணத்தை எனக்குக் கொடுத்து விடாதே..! என் விருப்பத்துக்கு மாறாக நிர்பந்தத்தால் பிறருக்கு அநீதி இழைக்கும் நிலையிலும் என்னை வைத்துவிடாதே..! பிறரின் சாபங்களோடு இவ்வுலகில் வாழும் சூழலைத் தந்துவிடாதே..! பிறரை நேசிப்பவனாய் பிறரால் பெரிதும் நேசிக்கப்படுபவனாய் என்னை வாழச் செய்..! மக்கள் என்னை நேசிக்கும் நிலையில் உனது திருப்தியை நான் பெற்றுள்ள நிலையில் என்னை உன்புறம் அழைத்துக் கொள்'

அன்வரின் கண்ணீர் உள்ளங்கையை நனைத்தது. வானிலிருந்து விழுந்த சிறு தூறல்கள் அவனை நனைத்தன. அன்வர் சாதாத்தை ஆசுவாசப்படுத்தி வெளியே அழைத்து வந்தார் மண்ணறையில் குழி வெட்டும் ஊழியர் அப்துல் லத்தீப்.

எல்லோருடைய பெயரையும் சொல்லி விட்டு இறந்து போனவனின் பெயரை ஏன் கடைசி வரை சொல்லவே இல்லை என்கிறீர்களா?

அவன் பெயர் யாருக்கும் தெரிய வேண்டாம்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்