என்ன செய்வதாய் உத்தேசம்?
அம்மு , July 16 -31 2023

கதை சொல்ல வேண்டும்
அந்தக் கதையை
நிஜம்போலச் சொல்லத் தெரியவேண்டும்
நீங்கள் காவல்துறை
வேலையைத் தேர்ந்தெடுக்கலாம்
நன்றாகப் பொய்பேச வேண்டும்
பொய் என்று தெரிந்தும்
அதை மெய்யாக்கிக் காட்ட வேண்டும்
இந்தச் சாமர்த்தியம் உங்களிடமிருந்தால்
நீங்கள் வழக்கறிஞராவது சுலபம்
மனுநீதி தெரிந்திருந்தால் போதும்
ஆட்சியாளரின் விருப்பங்களை மதித்து
கூட்டுமனசாட்சியை அறியும் ஆற்றல் இருந்தால்
நீங்களே நீதிபதி
இழுத்தடிக்க வேண்டும்
பேரம் பேசும் வல்லமை வேண்டும்
சோம்பல் தூக்கம் அரட்டை போதும்
அரசு அலுவலராகலாம் நீங்களும்
அறிக்கை விடத் தெரிய வேண்டும்
மாற்றிமாற்றிப் பேசும் நாவன்மை வேண்டும்
போலி வாக்குறுதிகளைக் கூசாமல்
சொல்ல வேண்டும்
வாரிசாக இருந்தால் இன்னும் நல்லது
இல்லையேல் சினிமா வெளிச்சம் கைகொடுக்கும்
தேவைப்படும்போது நெஞ்சுவலி வரவேண்டும்
இந்தத் தகுதிகள் அமையப்பெற்றால்
அரசியல்வாதி நீயேதான்
உரத்துப்பேச
மடக்கிப் பேசத் தெரியுமா? உண்மையை உதறித்தள்ளி
பொய்யை ஊதிப்பெருக்க வேண்டும்
தொலைக்காட்சிச் சேனலுக்கு நீ
பொருத்தமானவன்
எதுவும் தெரியவில்லையா
ஓரமாய்ப் போய் நில்
வாக்களிக்க நீயும்
வரிசையில் வரலாம்
உங்கள் கருத்தை இங்கே பகிரவும்
கருத்துகளின் தொகுப்பு