விருந்துகள்
நடந்து கொண்டே இருக்கின்றன எங்கெங்கிலும்
எப்போதும்
கல்யாண விருந்துகள்
மறு வீடு விருந்துகள் புது வீடு விருந்துகள்
கேளிக்கை விருந்துகள்
கொண்டாட்ட விருந்துகளென
பாத்திரங்கள் உலையேற்றப் பட்டு
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்
சமையல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
உணவுண்பதைத் தவிர இங்கு
வேறு வேலை இல்லையோவென
கேட்கும் படியாய் இங்கும் அங்கும் எங்கெங்குமாய் உணவுகள்
உண்டு தீர்க்கப்படுகின்றன
வயிறுகளும் வாய்களும் அசைத்தும்
செரித்தும் முடித்து அடுத்த
விருந்துக்கான உணவை எதிர்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
இந்தத் தீராத தீனி விளையாட்டை
தின்று ஆடிக் கொண்டிருக்கிறது
உண்டு கொழுத்த மனங்களின்
நுகர் பண்ட வெறி
உணவுண்ணும் போது எப்போதேனும்
காய்ந்த வயிறுகளைப் பற்றிய
நினைவு வந்ததுண்டா
வயிறு நிரம்பியிருக்க உணவுண்பவன்
திருடனென்ற
உண்மை உணர்ந்ததுண்டா
என்றாவது அண்டை வீடுகளின்
வாழ்நிலை என்ன என்கிற
அக்கறை வந்ததுண்டா
நாமிப்போது உண்பது
அவர்களின் உணவு என்ற
நாணமாவது வந்திருக்க
வேண்டாமா?
வெளியே
வயிறெரியப் பசித்த மானிடம்
கொதித்துக்
குமுறிக் கொண்டிருக்கிறது