மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

கவிதை

மனிதம் காக்க வந்த புனிதத் தூது
K.M முஹம்மது, September 16-30, 2023


மனிதம் காக்க வந்த புனிதத் தூது

கி.பி ஆறாம் நூற்றாண்டு
உலகில் மனிதம் சிதைந்து
கொண்டிருந்தது

பெண்ணினம் உயிரோடு
புதைந்து கொண்டிருந்தது
கொடுங்கோன்மை ஆதிக்கம்
எளியோரை வதைத்துக்
கொண்டிருந்தது

மூட சகதிக்குள் மானுடம்
மூழ்கிக் கொண்டிருந்தது

அடிமை வம்சங்களும்
ஆதரவற்றோரும்
செல்வச் சீமான்களிடம்
சிறைபட்டுக் கிடந்தனர்

ஒழுக்கம் நேர்மை கருணை
எல்லாம் உயிரற்ற
சொற்களாகக் கிடந்தன

அவ்வேளை தான்
பூமிப் பந்தினுள்
பாலை நிலத்தில்
புனிதம் ஒன்று
மனித வடிவில்
ஆமினா என்னும்
அன்னை மடியில்
புன்னகைத்துத் தவழ்ந்தது

இறைத்தூதெனும்
பேரொளியின்
இறுதி அத்தியாயத்தை
மக்கா மாநகர்
எழுதத் தொடங்கியது

மாநபி எனும்
அகிலத்தின் அருட்கொடை
இறையன்பில் உருகி
தூதுத்துவச் சுமையை
இதயத்தில் ஏந்தி நின்றது

ஓர் இறையை மறந்து
நேர்வழியை இழந்து
சீர்கேட்டில் வீழ்ந்திருந்த தம்
சமூகத்தை நினைத்து
மலைக்குகையில்
தவித்திருந்து
மனம் வெதும்பித்
தவம் இருந்தது

அப்போதுதான்
‘ஹிரா’ வெனும்
தவக் கூட்டிலிருந்து
‘வஹி’யின் வசந்தம்
வீசத் தொடங்கியது

பகுத்தறிவின்
வாசலைத் திறக்க
படைத்தவன் பேரால்
ஓதுவீரெனும் முதல்
வசனத்தை
உம்மி நபியின் உதடுகள்
உச்சரித்தது

மானுடத்தைப் பீடித்திருந்த
மதியீன நோய்களுக்கெல்லாம்
வானகத்திலிருந்து மருந்துகள்
வசனங்களாய் இறங்கின

விண்ணிலிருந்து வசனங்கள்
இறங்க இறக்க
மண்ணில் வாழ்ந்த
மடமைகள் எல்லாம்
மண்ணுக்குள்ளே
புதையத் தொடங்கின

குலம் கோத்திரம்
பகைமை எல்லாம்
ஏகத்துவக் கொள்கை முன்
சகோதரத்துவமாய்
சரணடைந்தது

செல்வத் திமிர்
செருக்கெல்லாம்
ஜகாத் எனும்
கருணையாய் மாறின

அடிமை விலங்கு
பூட்டி இருந்த
பெண்ணினத்தின்
கால்களெல்லாம்
சுவனத்தின்
இருப்பிடமாய் மாறின

வறுமை அச்சத்தால்
வாழ்வு மறுக்கப்பட்ட
பெண் சிசுக்கள்
மறுமை அச்சத்தால்
உயிர் பிழைத்தன

வாழ்வுரிமையே
கேள்விக்குறியான
நிலை மாறி
சொத்தில் வாரிசுரிமை
பெற்றனர்

உன்னதமான வாழ்வுக்கு
முன்னோடிகளாய் ஒரு
சமூகம் அங்கே
உருவெடுத்துக் கொண்டிருந்தது

இறைத்தூதர் முஹம்மத் எனும்
தூதுத்துவ ஜோதியில்
தோன்றிய விளக்குகள்

எத்தனை இஸங்கள் வந்து
வெறுப்புக் காற்றாய் வீசினாலும்
எக்காலமும்
எவ்விடத்தும் பரவி
ஜொலித்துக் கொண்டே இருக்கும்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்