மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கதை

ஒட்ட முடியாத கிளைகள்
நஷீஹா பின்த் இப்ராஹீம் அலீ 12ஆம் வகுப்பு, தாருல் இல்ம் அரபிக் கல்லூரி, சேலம், 16 - 31 டிசம்பர் 2023


ஒட்ட முடியாத கிளைகள்

சலீம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி கெட்டிக்காரன். அனைத்திலும் எப்போதும் முதலிடம் சலீமுக்குத் தான் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு அவன் மிகுந்த திறமைசாலி. ஆனால் அவனிடம் இருந்த ஒரே பிரச்னை எதற்கெடுத்தாலும் எரிமலையின் தீக்குழம்பு வெடிப்பதைப் போல் கோபம் கொள்வான். இதனால் அவனுக்குப் பெரிய நட்பு வட்டாரங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. திறமைகளாலும் கடின முயற்சியினாலும் கிடைத்த நல்ல பெயரும் புகழும் ஆசிரியர்களிடமும் சரி மாணவர்களிடமும் சரி கெட்டு விட்டது.

சலீமின் மீது அன்பு கொண்ட நண்பன் அவனுடைய கோபம் குறித்தும் அதனால் அவனுக்கு ஏற்படும் தீய விளைவுகளைக் குறித்தும் சலீமின் வாப்பாவிடம் கூறினான். இதைக்கேட்டதும் மிகுந்த கவலையடைந்த அவர் மிகவும் தீவிரமாகச் சிந்தனை செய்ய ஒரு யோசனை கிடைத்தது. உடனே தன் மகனை அழைத்து ‘சலீம் இனிமே உனக்குக் கோபம் வந்தால் அதை நீ வெளிப்படுத்தக் கூடாது. பதிலா நம்ம வீட்டு வாசலில் அந்த அழகான மரம் இருக்குதுல அதன் கிளைகளை வெட்ட வேண்டும்’ என்று சொன்னார்.

அதற்கு சலீம் ‘வாப்பா! அந்த மரத்த எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்து அதுலதான் ஊஞ்சல் கட்டியும், ஏறியும் விளையாடுவேன். இன்னும் என் நண்பர்களும் மரத்துல விளையாடத்தான் நம்முடைய வீட்டிற்கு வராங்க! அதப்போய் வெட்டச் சொல்றீங்களே!’ என்றான். ‘அதெல்லாம் ஒன்னும் கிடையாது. நீ கோபம் வரும்போது அந்த மரத்தோட கிளைகளை வெட்டு’ என்று கட்டாயப்படுத்திச் சொன்னார்.

பிறகு அவனும் கோபம் வரும்போதெல்லாம் அதன் அழகான கிளைகளை வெட்ட ஆரம்பித்தான். ஆனால் அவனுக்குக் கிளைகளை வெட்ட விருப்பமில்லை, வெட்டக் கடினமாக இருந்தது. அதனால் அடுத்தடுத்த தினங்களில் வெட்டுவதைக் குறைத்துக் கொண்டான். பின் தனக்கு விருப்பமான மரத்தின் கிளைகளை வெட்டுவதற்குப் பதிலாகக் கோபத்தைக் குறைத்துக் கொள்ள முடிவெடுத்து விட்டான். ஆரம்பத்தில் ஐந்து கிளைகளை வெட்டியவன் தற்போது அதனை ஒன்றாகக் குறைத்துக் கொண்டான். பின் நிறுத்திவிட்டான்.

‘வாப்பா நான் இனிமே கோபப்பட மாட்டேன். அதனால் நான் இனிமேல் மரத்தின் கிளைகளை வெட்டத் தேவையில்லல!’ எனக் கேட்டான். அதற்கு வாப்பா ‘அப்படியா! மிகவும் மகிழ்ச்சி, நீ வெட்டிய கிளைகளை இப்போ போய் ஒட்டி விடு’ என்றார். அதற்கு சலீம் திருதிருவென முழித்துவிட்டு ‘அத எப்படி ஒட்ட முடியும்?’ என்று கேட்டான்.

‘உனக்குக் கோபம் வரும் போது மரத்தோட கிளைகள வெட்டின சரிதானே! அதேபோலத் தான் உன்னோட வாழ்க்கைல பெற்றோர்கள், நண்பர்கள், உறவுகள் என எல்லாத்தையும் வெட்டி விடுற. அந்த மரத்தப் பாரு! கிளைகள் இல்லாம அழகிழந்து கிடக்குது. அப்படித்தான் உன்னோட நிலையும் ஒரு நாள் ஆகிடும்’ என்றார் வாப்பா.

தொடர்ந்து ‘எப்படி எரிமலையில் பூ பூக்காதோ, அப்படித்தான் கோபம் எனும் தீ சுமக்கும் இதயத்தில் அன்பு மலராது. இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் சொன்னாங்க கோபம் சைத்தானுடையது என’. தனது தவறை உணர்ந்த சலீமும் ‘வாப்பா என்னோட தவறை உணர்ந்துட்டேன். என்னை மன்னிச்சிருங்க. இனிமே உண்மையிலேயே என்னுடைய கோபத்தைக் குறைச்சுக்கிறேன் இன்ஷா அல்லாஹ்’ என்று கூறி அதன்பின் தன் வாழ்வில் மாபெரும் பொறுமைசாலியாக மாறினான். இதனால் அவன் இழந்த அனைத்தையும், அவனுடைய திறமைகளால் புதிதாகப் பல நண்பர்களையும் நற்பெயரையும் பெற்றான்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்