இடிபாடுகளில் சிதறிக்கிடக்கும்
கற்களே
நீங்கள் தான் சாட்சி
நான் படித்த பள்ளிகூடத்தையும்
நான் இருந்த வீட்டையும்
இடித்து விட்டார்கள்
நான் விளையாடிய மைதானம்
என் நண்பர்கள்
என் பொம்மைகள்
என் புத்தகங்கள்
தின்பண்டங்களின் கடை
வெறிச்சோடிக் கிடக்கும் இந்தத் தெருவில்
எதுவும் இல்லாமல்
எப்படி வாழப்போகிறேன் நான்
அரக்கர்கள் உடைத்தது
என் வீட்டை மட்டுமல்ல
வன்நெஞ்சகர்கள்
சுக்கு நூறாக்கியது
என் கட்டிடத்தை மட்டுமல்ல
நேற்று என்னோடு
விளையாடிக்கொண்டிருந்த
என் சகோதரனை
என்னைப் பொழுதெல்லாம்
தூக்கிக் கொஞ்சும் என் தந்தையை
உயிர் சுமந்த என் அன்னையை
அநியாயமாய்க் கொன்றழித்தார்கள்
என் எதிர்காலத்தை
என் குடும்பத்தை
என் வாழ்க்கையை
சிதைத்துவிட்டார்கள்
இந்தக் கட்டிடத்தைப்போல
எங்கள் உலகம்
இருளடைந்துவிட்டது
எங்கள் நாடு
சின்னாபின்னமாகிவிட்டது
வீடிழந்த வீதியில்
எஞ்சியிருப்பது வெறும் கற்கள்
இல்லை இல்லை
இது என் ஆயுதம்
இதைக் கொண்டு
உன் ராணுவத்தை விரட்டுவேன்
உன் பீரங்கிகளைத் துரத்தியடிப்பேன்
இந்தக் கற்களைக் கொண்டு
இனியொரு வீடெழுப்புவேன்
கல்விக் கூடம் உருவாக்குவேன்
ஆக்கிரமித்த என் நிலத்தை
இதிலிருந்து மீட்டெடுப்பேன்