சாலை வியாபாரியான அன்வர் தன் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு காலை ஒன்பது மணிக்கு பைபாஸ் ரோட்டில் உள்ள தனது ஹெல்மெட் கடையைத் திறக்க வந்துவிடுவார். அதேபோல் இன்றும் வழக்கம்போல் பொருட்களை வைத்துள்ள சிறிய குடோனைத் திறந்து, பொருள்களை தள்ளு வண்டியில் ஏற்றி சர்வீஸ் ரோட்டைக் கடந்து மரத்தடிக்கு வந்து பெட்டியைப் பிரித்து ஹெல்மெட்களை ஒவ்வொன்றாக டேப்கட்டிலிலும் தள்ளு வண்டியிலும் அடுக்கத் தொடங்கினார்.
அடுக்கிக் கொண்டிருக்கும் போதே வாடிக்கையாளர் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ‘ஹெல்மெட் எவ்வளோ பாய்? ஒரு ஹெல்மெட் வேணும் பாய்!’ என்றார். அதற்கு ‘மாடலுக்குத் தகுந்த விலை தான். 450 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வர நம்ம கிட்ட ஹெல்மெட் இருக்கு!’ என்றார் அன்வர்.
‘நல்ல தரமானதா மலிவான விலையில் ஒன்று கொடுங்க’ என்றார் வாடிக்கையாளர். ‘இந்தாங்க உங்க வண்டிக்கு இந்த ப்ளூ கலர் ஹெல்மெட்ட எடுத்துக்கோங்க’ என்று 450 ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட்டைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ‘சரி.. கொடுக்கிற விலையச் சொல்லுங்க!’ என்றார் வாடிக்கையாளர்.
அன்வர் பாய் ‘450 ரூபாய் கொடுங்க’ என்றார். ‘அங்க சேட்டா 300 ரூபாய்க்கு கொடுக்கிறான். 450 ரூபாய்லாம் சொல்லாதீங்க பாய். ஒரு 300 ரூபாய்க்கு குடுங்க’ எனப் பேரம் பேசத் தொடங்கினார். ‘300 ரூபாய்க்கு எல்லாம் கட்டுப்படியாகாது. வேணும்னா 50 ரூபாய் கம்மியா குடுங்க! இதுதான் இன்னைக்கு என் முதல் வியாபாரமே!’ என்றார் அன்வர் பாய்.
வாடிக்கையாளர் பிடிவாதமாக ‘300 ரூபாய்க்கு கொடுத்தா குடுங்க, இல்லைனா வேண்டாம்!’ என்று வண்டியை எடுத்துக் கொண்டு வாங்காமலே கிளம்பி விட்டார்.
சற்று தூரத்திலேயே போலீஸ் அவரை ஹெல்மெட் போடாததற்கு நிறுத்தி 1000 ரூபாய் ஸ்பாட் பைன் போட்டனர். வண்டியின் சாவியையும் பறிமுதல் செய்தனர். வேறு வழி இல்லாமல் வேலைக்குப் போகும் அவசரத்தில் பைன் கட்டிவிட்டு மனதிற்குள் ‘ஒழுங்காக பேரம் பேசாம ஹெல்மெட்டை வாங்கி இருந்திருக்கலாம். நமக்கும் நஷ்டம் அந்த பாய்க்கும் கஷ்டம்!’ என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டார்.
கார்ப்பரேட்கள் நடத்தும் பெரிய பெரிய மால்களிலும் நகைக் கடைகளிலும் அவர்கள் ஒட்டி இருக்கும் அதிக விலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் வாங்கும் பலர்; சாலைகளில் மழை வெயில் பாராமல் சிரமப்படும் பூக்காரியிடமும் கீரை விற்கும் பாட்டியிடமும் சாமானியர்களிடமும் ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசுவது சரியா?
ஆண்டிற்கு ஆயிரம் சிறுதொழில்கள் தொடங்கப்படுவதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால் 500 சிறு தொழில்கள் காணாமலும் போய்விடுகின்றது. இதன் காரணம் வாடிக்கையாளர்கள் பேரம் பேசி விலையைக் குறைப்பதை பெரும் சாதனையாகக் கருதுவதும், சிறு வியாபாரிகளையும், சாலையோரக் கடைகளைப் புறக்கணித்து கார்ப்பரேட்களிடம் அதிக விலை கொடுத்து வாங்கிச் சிறு வியாபாரிகளைப் புறக்கணிப்பதும் தான்.
ஒரு கிராமவாசி இடமிருந்து ஒட்டகத் தீனியை விலைக்கு வாங்க நாடிய நபி பெருமானார்(ஸல்) அவர்கள் வியாபாரியிடம் கூறினார்கள் ‘நீங்கள் விரும்பும் அளவுக்கு விலையைச் சொல்லுங்கள்’ உடனே அவர் கூறினார் ‘உம்மைப் போன்று விலைக்கு வாங்கும் நபரை இன்று வரை நான் பார்த்ததில்லை. உமது ஆயுளை அல்லாஹ் நீட்டித் தருவானாக! எந்தக் குலத்தைச் சார்ந்தவர் நீர்?’ அதற்கு நபிகள் ‘குறைஷிக் குலம் என்றார்கள்’. (இப்னு மாஜா, ஹாகிம்)
நபி(ஸல்) அவர்களும் தாராளத் தன்மையோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ்களே ஆதாரம். அன்புச் சிறார்களே..! அன்வர் போன்ற சாமானியர்களின் வாழ்வில் பேரம் பேசாமல் பொருள்களை வாங்கி, அவர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றுங்கள்.