அந்திமாலை மயங்கி மஹ்ரிப் தொழுகை நெருங்கிக் கொண்டிருந்தது. சரீபு உப்பாவின் கணீர்க் குரலில் நமபாளி பள்ளிவாசலில் இருந்து ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்ற பாங்கோசை ஒலிக்கத் தொடங்கியது.
ஜசீமா மன்சிலில் மைமூன் கிழவி ஒளுச் செய்து மக்ரிப் தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அவள் கவனம் எல்லாம் வீட்டின் வடக்குப்புறம் உள்ள ஓலைப்புரையில் இருக்கும் கோழிக்கூடு, ஆடு கட்டும் இடங்களும் பக்கத்தில் இருக்கும் விறகுப்பிரை மீதும் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வழியாய் ஒளுச் செய்தது பாதி செய்யாதது பாதியாக, புலம்பிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். ‘குட்டியே ஆயிஷா.. குட்டியே ஆயிஷா..’ என்று அழைத்துக் கொண்டே வீட்டினுள் அங்கும் இங்கும் தொழுகைப் பாயைத் தேடினாள். அவள் தேடிக்கொண்டிருக்கும்போதே பாயைக் கொண்டு வந்து விரித்துப்போட்டாள் மைமூன் கிழவியின் பேத்தி ஆயிஷா.
பாயில் நின்றவுடன், ‘என்ன குட்டி நேரம் வெளுத்து இது வர என்ன வேலை செய்யிறியோ? ஆட்டுப்பிரை, விறகுப்பிரை எல்லாம் கிடக்கச் சேலா பார்த்தா எக்கு சகிக்குதில்லே! பத்து பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத புள்ளியோ… இப்லீசு! நேரம் காலம் பாக்காம வெட்டிவிளுங்குதுக்கு மட்டும் அறியிலாம் இப்லீசு லெக்னத்து’ எனத் திட்டிக்கொண்டே மஹ்ரிபு தொழுகைக்குத் தயாரானாள்.
கடந்த பல ஆண்டுகளாக இவை எல்லாம் கண்டும் கேட்டும் சலித்துப்போன ஆயிஷா, சிறிதும் சட்டை செய்யாமல் வீட்டின் தெரு வராந்தாவை ஒட்டிய சேரில் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆயிஷா பரீது உப்பாவின் மகள் ஜசீமாவின் ஒரே மகள். மைமூன் கிழவியின் மகன் அரேபியாவில் வேலை செய்த சம்சு ஜசீமாவை நிக்காஹ் செய்து அவளின் வாப்பா பரீது உப்பா சீதனமாக மக்களுக்குக் கொடுத்ததுதான் ஜசீமா மன்ஸில். என்ன கொடுப் பினையோ பிரசவத்தில் ஜசீமா உயிர் போனது. பிஞ்சுக் குழந்தை ஆயிஷா மட்டும் உயிர் தப்பியது.
தனது பத்து வயதில் அவள் வாப்பா சம்சும் அரேபியாவில் வாகன விபத்தில் பலியாக, பின்னர் பதினாறு வயது வரை அவள் உப்பா பரீது அரவணைப்பில் வாழ்ந்து அந்தத் தெருவில் அதிகமாய் பத்தாம் வகுப்பு வரை படித்து செல்லமாய் வாழ்ந்தாள்.
மேற்படி படிக்கும் நேரத்தில் சோதனையாக பரீது உப்பா திடீரென இறைவனடி சேர்ந்தார். அன்று தொடங்கியது ஆயிஷாவின் கெட்ட நேரம். மைமூன் கிழவியின் திட்டும் பங்கமும் வாடிக்கையாயின. ஆயிஷா அடிக்கடி நினைத்துப் பார்ப்பாள். பாவம் உப்பாவும் உம்மாவும் என்ன பாடுபட்டிருப்பர்கள் இந்தக் கிழவியிடம்! நல்லவேளை நேரமோடு போய்ச் சேர்ந்தார்கள் என எண்ணிப் பெருமூச்சு விட்டாள். மைமூன் கிழவி மக்ரிப் தொழுகையை தொழுது முடித்திருந்தாள். ஆடிக்காற்று மிகப் பலமாக அடித்துக்கொண்டிருந்தது. ஜசீமா மன்சிலினின் ஜன்னல் கதவுகள், வாசல் கதவுகள் காற்றின் அசைவுக்கு ஏற்ப ‘மடார் மடார்’ என அடித்து சட்டங்கள் உடைந்து போகும் அளவிற்கு ஓசை வந்து கொண்டிருந்தது. இதைக் கவனிக்காது தெருவில் வருவோர் போவோரை வாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆயிஷா. மைமூன் கிழவி தொழுகையை முடித்தவுடன் திட்ட ஆரம்பித்தாள். ‘குட்டி ஆயிஷா! இப்லீசே! நிக்க செவி அடைஞ்சா போச்சு. கதவு கிடந்து அடிக்கறத பார்த்தியா சைத்தான்!’ மொந்தி நேரம் ஒளுச்செய்து குரான் ஓதுக்கோ தொழுகை செய்யவோ வக்கில்லாத லெக்னத்து பெற்ற தாயையும் தகப்பனையும் தின்னுட்டு வந்து நிக்குது எனத் திட்டித் தீர்த்தாள்.
‘கதவிலும் ஜன்னலிலும் கிடந்து அடிச்சு பகளம் வக்கிறத பாத்தியாடி சைத்தான். கதவைப் போய் நல்ல சாத்திட்டு வா சைத்தான்! வல்ல கபுராளிகளுக்கயும் வேலையா இருக்கும். நிக்க மரிச்சுப் போன வாப்பாயோ உப்பாயோ தான் இருக்கும். இந்த அடி அடிக்குதுவோ கதவில கிடந்து! இழவு எடுத்துப் போனதுவோ மரிச்சாலும் கிடயில்லா ஆள்களை நிம்மதியாக் கிடக்க விடுவதில்லை’ ஆடிக்காற்றைப் பழிப்பதற்குப் பதில் இறந்து போன உப்பா வையும் உம்மாவையும் திட்டித் தீர்த்துக் கொண்டாள்.
‘குட்டி சைத்தானே! ஆயிஷா பால் இருக்காட்டி..! பாலில பழமும் வெட்டிப் போட்டுக் கொண்டு வா! ஒரு சீரணி வச்சு இந்த முசீபத்து கபுராளிகளுக்குப் பேரில ஒரு யாஸீன் ஓதட்டு’ என ஆயிஷாவை விரட்டினாள்.
‘பால் கொஞ்சம் தான் உண்டு. அது மஹ்மூதா மாமி பட்டணத்துக்குப் போய் மூணு நாளாச்சு! அந்த மிஸ்ரி பூச்சை பட்டினி கிடக்கு. அதுக்கு வச்சிருக்கேன்’ என்றாள். அதைக் கேட்டவுடன் யாஸீன் ஓதத் தொடங்கிய மைமூன் கிழவி பாதியில் நிறுத்தி விட்டு வசை பாடத் தொடங்கினாள். ‘சைத்தான்! இப்லீசு! இங்கே ஆள்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வெள்ளம் இல்லை. அவ அவளுக்கு உம்மாக்கா மாப்பிளைக்கா பூச்சைக்குப் பால் கேட்குதாம்’ என வைது கொண்டே யாஸீன் ஓதிக் கொண்டிருந்தாள். ஆயிஷா இதனைச் சட்டை செய்யாமல் கிழவிக்குப் பசி வந்தால் பைத்தியம் பிடிக்கும் எனத் தெரிந்து, இருந்த பாலில் அதிக அளவில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து பழமும் வெட்டி நேர்ச்சை தயார் செய்து கொடுத்தாள்.
இது கிழவியின் நிரந்தர வாடிக்கை. ஏதேனும் சாக்குக் கூறி பாவம் இறந்தவர் பெயரில் பண்டம் வைத்து வயிறு நிரப்புவது வழக்கமாய் நடப்பதுதான். இந்தச் செயலை நினைத்து மனதுக்குள் சிரித்தாள் ஆயிஷா.
அத்தனை பாலும் பழமும் சாப்பிட்டுவிட்டு ஆயிஷாவிடம் நாக்கு நனைக்கக் கொடுப்பாள். ‘இது யாருக்கு.. எனக்கு வேண்டாம்’ என ஆயிஷா சொன்னாள். ‘எடி நிக்கம்பே! சைத்தான்! இது வயிறு நிறைக்க அல்லடி. நேர்ச்சை! நேர்ச்சை போல் தின்னும் அல்லாத நிக்க கொழுப்பு பசியாற அல்ல’ என வசை பாடுவாள்.
‘எதுக்கு இந்த டிராமா? மரிச்ச ஜனம் பெயரில்..! பசிச்சா சொல்ல வேண்டியது தானே? அல்லாமல் இறந்து போன உப்பா உம்மா பெயரில் என்ன இது நாடகம்’ எனக் கேட்டாள்.
‘இழவே..! சைத்தான். நீ பாத்தியாடி இந்த நேரம் வரை கதவு ஜன்னல் போட்டு அடிச்சு சட்டம் ஒடையற மாதிரி சவுண்டு வச்சத.! நான் பாலும் பழமும் வச்சு யாஸீன் ஓதினப்போ எங்கே போச்சு! பதிரீங்க பெயரில் நான் ஓதினப்போ எல்லாப் பேயும் ஓடியாச்சு கபருக்கு!’
‘மருந்துக்கு எங்கிலும் பள்ளிக்கூடம் போனா இல்லியா தெரியும். ஆடி மாசம் காற்று அடிக்கும்!’ என்றாள் ஆயிஷா.
‘இப்போ சத்தம் வராத காரணம் நான் எல்லா ஜன்னல் கதவும் கொழுத்து போட்டுப் பூட்டினது அல்லாமல் உங்க பாலும் பழமும் நேர்ச்சயில் ஆரும் ஓடவில்லை. உங்க பசிதான் ஓடி இருக்கும்’ என்றாள் ஆயிஷா. திரும்பவும் திட்டத் தொடங்கினாள்
மைமூன் கிழவி. ‘சும்மா நல்ல தொழுகை பாயில் இருந்து கொண்டு இப்படி அல்லாஹ்வுக்குப் பிடிக்காத விசயத்தைச் செய்யாது குரான் மட்டும் ஓதி தொழுது பாருங்கோ’ எனச் சொன்ன ஆயிஷாவை அடிக்காத குறைதான் மைமூன் கிழவி.
கிழவி திரும்பவும் திட்டத் தொடங்கினாள். ‘சைத்தான் இப்லீசே!’ என்று, இது வாடிக்கை என ஆயிஷா இடம் நகர்ந்தாள். மைமூன் கிழவி ஏதேனும் ஒரு விசயத்தை தினம் திட்டுவதற்கு வைத்திருப்பாள். கிழவி தினமும் தொழுகைப் பாயில் இஷா தொழுகைக்குப் பின் வயிறார உண்டுவிட்டு பக்தியோடு பத்ர் பாட்டும் மன்கூஸ் மவ்லீதும் பாடி மறுநாள் சூரிய உதயம் வரை தூங்கிப் போவாள். சுபுஹ் தொழுகையை ஒருநாள் போலும் அவள் தொழுததும் இல்லை எழுந்ததும் இல்லை.
மறுநாள் சுபுஹ் முடிந்து பக்கத்து வீட்டில் கீரைக்காரி மேரியின் சத்தம் கேட்டு ஆயிஷா எழுந்த போதும் ‘சைத்தானே சாயா எங்கே?’ எனக் கேட்கும் கிழவி எழுந்தபாடில்லை.
என்னடா தினம் தினம் ‘இப்லீசு, குட்டி சைத்தான்’ என காலையிலே அர்ச்சனை தொடங்கும் கிழவிக்கு என்ன ஆச்சு’ என பக்கத்தில் சென்று அழைத்துப் பார்த்தாள்.
எந்தச் சத்தமும் பதிலும் இல்லை. தொட்டால் கோபம் வரும். சரி வந்தால் வரட்டும் எனத் தொட்டு அழைத்துப் பார்த்தாள். கிழவியிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
உடலெல்லாம் குளிர்ந்து மரத்துப் போய் விறைப்பாய் படுத்திருந்தாள். ஏதோ நடந்து விட்டது என உணர்ந்த ஆயிஷா ஓடிப்போய் தெக்குத் தெரு வீட்டில் சல்மா மாமியை அழைத்து வந்து பார்த்தாள். கிழவி தூக்கத்தில் மவுத்தாகிப் போனது தெரிந்தது.
‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ என்றாள் சல்மா மாமி. சில மணி நேரத்தில் கிழவியின் மகளும் சில தூரத்து உறவுகளும் வந்து பெயருக்கு ஒப்பாரி வைத்து அசருடன் மைமூன் கிழவியின் ஜனாஸா எடுக்கப்பட்டது. ஜனாஸா கொண்டு சென்றபின் வந்த மகள் கிழவியின் கால்பெட்டியும் அலமாரியும் தேடிக் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஊர் போய் சேர்ந்தனர். இதெல்லாம் ஒன்றுமே நடக்காதது போல் வேடிக்கை பார்த்து தூங்கிப் போனாள் ஆயிஷா.
மறுநாள் அதிகாலை பாங்கு ஒலி கேட்டு கண்விழித்த நேரத்தில் அடுத்த வீட்டின் மஹ்மூதா மாமி வடக்குவாதில் தட்டி அழைக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் ஆயிஷா.
‘மக்களே ஆயிஷா! பாங்கு போட் டாச்சு. தொழுது வாங்கோ சாயா தாரேன்’ என அழைத்தாள் மஹ்மூதா மாமி. மஹ்மூதா மாமியின் அழைப்பு இதுவரை ‘சைத்தான் இப்லீசு’ எனக் கேட்டுக் கேட்டு வழக்கமாய்ப் போனவளுக்கு வியப்பாய் இருந்தது. அதிசயம் தான். இப்லீசும் சைத்தானும் நேற்று அசரோடு மைமூன் கிழவியோடு மண்ணறைக்குக் கொண்டுபோனது ஞபாகம் வந்தது ஆயிஷாவுக்கு!