நண்பகல் 2 மணி. அரபிக்கடலில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்த வேளையில் திடீரென 'டமால்!!' என மிகப்பெரும் சப்தம், பிரின்ஸ் ஆஃப் அரேபியா கப்பல் மூழ்கத் தொடங்கியது. 200 பேரைச் சுமந்து வந்த அந்தப் பிரம்மாண்ட கப்பல் கணநேரத்தில் மூழ்கிப் போனது. சுதாரிப்பதற்குள் கப்பலில் பயணித்த முக்கால்வாசிப் பேர் கடலில் மூழ்கி மாண்டனர்.
அந்த இக்கட்டான நேரத்திலும் இரண்டு நபர்கள் இருவேறு தோணிகளில் தப்பித்தனர். முதலில் தப்பித்தவருக்குத் துடுப்புகளையும் அவசர உணவுகளையும் எடுப்பதற்கான அவகாசம் கிடைத்தது. அவர் அனைத்தையும் நிரப்பிக்கொண்டு தப்பித்து விட்டார். ஆனால் இரண்டாமவரோ சுதாரிக்க நேரம் கிடைக்காததால் துடுப்பைக் கூட எடுக்காமல் தோணியில் மிதந்து உயிர் பிழைத்தார். இருவரின் தோணியும் வெவ்வேறு திசைகளில் செல்ல ஆரம்பித்தன.
நாள்கள் கடந்தது. முதலாம் நபர் தான் எடுத்து வந்த உணவுகளை எல்லாம் உண்டு பசியின்றி பயணித்திருந்தார். ஆனால் இன்னொருவர் உணவு, துடுப்பு என எதுவுமின்றி மிகவும் துன்பத்தில் சிக்குண்டு கிடந்தார். இந்தப் பசியையும் துன்பத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத அவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என நினைத்தார்.
தற்கொலையை எண்ணிய அந்த கணப் பொழுதில் இறைவனின் சிந்தனை அவருக்கு வந்தது. இறைவன் இருக்கின்றான், அவன் என்னைக் காப்பான். எனக்கு உணவளிப்பான் என்கிற எண்ணத்துடன் எதுவும் இல்லாத வேளையிலும் நம்பிக்கையுடன் இறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கினார்.
அதேநேரம் முதலாமவரிடம் இருந்த உணவுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. துடுப்பு, அவர் அணிந்திருந்த ஆடைகளை இணைத்து தூண்டில் செய்து மீன்களைப் பிடிக்க ஆரம்பித்தார். தூண்டிலில் மீன்கள் குவிந்தன. அவற்றைச் சாப்பிட்டு அமைதியாகத் தன் நாள்களைக் கழிக்க ஆரம்பித்தார். பெரிதாக அலைகள், புயல் எதுவுமின்றி பாதை அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தது.
இரண்டாமவரின் நிலையோ பசியாலும் புயலாலும் தாறுமாறாக அடித்த அலைகளாலும் கவலைக்கிடமானது. அந்தச் சூழலிலும் இறைவனின் மீது வைத்த அலாதி நம்பிக்கை அவரை உயிருடன் இருக்க வைத்தது. மூன்று நாள்களைக் கடந்தும் உணவு இன்றித் தத்தளித்த நிலையில் கண்களைக் கூடத் திறக்க முடியாமல் மயக்கத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
இப்படியே தான் மயங்கி விட்டால் தோணியில் இருந்து விழுந்து இறந்து விடுவோம் என்பதை அறிந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து தனது ஆடைகளைக் கழட்டி அந்த தோணியுடன் தனது உடலை இறுக்கமாகக் கட்டிக் கொண்டார். பின்பு அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றுவிட்டார்.
முதலாமவருக்கோ தொடர்ந்து மீன்கள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் அதனை எவ்வளவு நாள் தான் பச்சையாகச் சாப்பிட முடியும். மேலும் அந்த நடுக்கடலின் தனிமை அவரைப் பெரிதளவில் பாதித்தது. விரக்தியடைந்து அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
பல மணிநேரங்கள் கடந்தது. திடீரென தென்றல் காற்றின் ஒலியுடன் ஒரு மயான அமைதி நிலவியது. 'நான் மரணித்து விட்டேனா?' என்ற கேள்வி இரண்டாமவருக்குள் எழுந்தது. உச்சத்தில் இருந்த சூரிய ஒளி கண்ணில்படக் கண்விழித்தார். அப்போது தோணி ஒரு தீவில் கரை ஒதுங்கியிருந்தது.
மரத்திலிருந்து கீழே விழுத்து கிடந்த இளநீரை உடைத்துப் பருகி உடனே ஸஜ்தா செய்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார். பின் அங்கிருந்த மக்களைத் தொடர்புகொண்டு மீண்டும் தன் தாயகத்திற்கே சென்று விட்டார்.
ஏதும் இல்லாத நிலையிலும் அவருள் இருந்த ஒளி அவரைக் கரைசேர்த்தது.
எல்லாம் இருந்தும் அவரது இருள் அவரை மூழ்கடித்து விட்டது.