ரமளானின் தலைப்பிறை
வெடிகுண்டுப் புகைமண்டலத்தின் நடுவே
காஸாவில் தென்படவில்லை
நான்குமாதப் பட்டினியைத்
தொடர்ந்து இப்போதும்
ஃபலஸ்தீன் பசித்திருக்கிறது
இப்படித்தான்
அவர்கள் வாழ்வில்
ரமளான் மலர்ந்தது
ஃபலஸ்தீன நோன்பாளிகள்
பசியைத் தின்று
ஸஹர் செய்யும்போது
ஆற்றாமையின் பெருங்கோபத்தை
ஒரு மிடறு விழுங்கிக் கொள்கின்றனர்
நோன்பு திறக்க
பேரீச்சங்கனிகளின்றி
டாங்கிகளை எதிர்கொள்ளும்
பொடிக்கற்களைக் கை நிறைய
வைத்திருக்கின்றார்கள்
அபாபீல் சிறுவர்கள்
காஸாவில் ஸஹர் முடித்த
நோன்பாளிகள் பலர்
சொர்க்கத்தில்
நோன்பு துறக்கச் சென்றுவிட்டார்கள்
ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த
லைலத்துல் கத்ர் இரவில்
இறங்கும் வானவர்கள்
நலம் அருளும் நம்பிக்கையில்
ஃபலஸ்தீன் புன்னகைத்திருக்கிறது
உலக முஸ்லிம்களின்
தஹஜ்ஜத்துக் கண்ணீரில்
ஃபலஸ்தீனப் புறாக்களின்
சிறகுகள் படபடக்கின்றன
தென்படும் பெருநாள் பிறையில்
தங்களின் விடுதலை ஒளி
மின்னுமென்ற தீரா நம்பிக்கையை
இதயத்திலேந்திக் கிடக்கின்றனர்
ஃபலஸ்தீனப் போராளிகள்
உம்மத்தே முஸ்லிமா
காத்திருக்கின்றது
அக்ஸாவிலிருந்து எழும்
பெருநாள் தக்பீருக்காக