மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கதை

மோதினார் நல்லாப்பா
- T.A. இப்ராஹீம், ஜூன் 16-30


 
பிலால்(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் பொழுதே, அமீரகத்தின் பாங்கோசை ராகமாய் மேலெழும்பி விண்ணை முட்டி மோத, கிளைச் சிந்தனையுடன் எதிர்வீட்டு மோதினார் நல்லாப்பாவின் ஞாபகம் வந்தது. தெப்பக் குளத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பவர்கள் தொடங்கி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருப்பவர்கள், கடையில் மும்முரமாக வியாபாரத்தில் இருப்பவர்கள், மத்தியானச் சாப்பாட்டு மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் என்று ஏதேதோ செயல்களில் மூழ்கிக் கிடக்கும் மக்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டு, ‘தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது. எழுந்து வெற்றியின் பக்கம் வாருங்கள்’ என்று தொழுகைக்காக அழைப்பது மோதினாரின் பணி.

எனக்கு விவரம் தெரியும் பொழுது நல்லாப்பாவின் வயது தொண்ணூறைத் தொட்டிருந்தது. எப்போதும் வெள்ளை நிற உடையில் இருப்பார். ஒரு மாதிரி காப்பிக் கலரில் காய்ச்சல் டானிக் போல மங்கிய நிறத்தில் பெரிய சைஸ் கண்ணாடி போட்டிருப்பார். தொளதொளவென்ற வெள்ளை ஜிப்பாவும், நாசி மணம் கமழும் அத்தரும் ஏகப்பட்ட ஸ்டாக் இருக்கும் அவரிடம்.

காலை பத்துமணிக்கு ஒரு கையில் கைத்தடியும், மறுகையில் குடையும் பிடித்தவாறு தெருவில் அவரைக் காணலாம். யௌவனத்தில் ஓங்கு தாங்கலான ஆளாக இருந்திருப்பார் என்பதை அவரின் முதுமை காட்டிக் கொடுக்கும். அவரின் வீடு, பள்ளிவாசலை விட்டும் தூரமாய் இருந்தது. ஆனாலும் ஐந்து நேரத் தொழுகைக்கு எங்கிருந்தாலும் ஆமை நடையில் பள்ளிக்கு வந்து விடுவார். வளைந்த முனை கொண்ட அவர் கைத்தடியின் அடியில் குதிரைக்கால் போன்றதோர் லாடம் அடிக்கப்பட்டிருக்கும். டொக் டொக்கென்று அவர் தெருவில் நடந்து வந்தால் சமையற்கட்டில் நிற்பவர்களுக்கும் கேட்கும்.

பாங்கு சொல்வது மட்டுமல்லாமல் பள்ளிவாசலுக்கு வசூல் பிரிப்பது, மோட்டர் போடுவது, மதரஸா சம்மந்தப்பட்ட இதர வேலைகள் எல்லாமுமே அவரே செய்வார். நல்லாப்பாவின் கைத்தடி ஊன்றுகோலாக மட்டுமின்றி ஜும்ஆ தொழுகையில் பேசிக் கொண்டிருக்கும் சின்னப் பயலுகள் மண்டையில் டொக்கென்று போடவும் செய்யும்.

சில நேரம் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பொழுது அவர் பக்கம் விழும் கிரிக்கெட் பந்தினை எடுக்க சிறுவர்களுக்குள் வாக்குவாதம் நடக்கும். அவரின் சொந்தக்கார பேரப்புள்ளைகள் போனால் அவருக்கு எப்படியோ தெரிந்து விடும். இதுவே வேறு யாரேனும் போனால் ‘எடுடே’ எனச் சொல்லிவிட்டு கண்டு கொள்ளாதது போலிருந்து, நல்லபாம்பு அடிப்பது போல் பொசுக்கென்று தடியை வீசி விடுவார். அவர் அடியில் தப்பித்து விட்டு தெருவில் நின்று கெக்கரிப்பதைக் கண்டு அவரும் மெல்லமாய்ச் சிரிப்பார். கீழறங்கி அவர்களோடு விளையாட முடியவில்லை எனினும் அந்த ஒரு நொடிக்கு நல்லாப்பா சின்னப் புள்ளைகளுக்குச் சேக்காளியாகி விடுவார்.

தொழுகை நேரம் போக மீதி நேரங்களில், எதிர் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு தஸ்பீஹ் எண்ணிக் கொண்டிருப்பார். திண்ணையில் இருக்கும் சமயங்களில் தெருவில் போவோர், வருவோர் யாரையும் விடமாட்டார். யாரேனும் கண்ணில் தட்டுப்பட்டால் முதலில் யாரென்று விசாரிப்பார். இன்னார் மகன் என்று தெரிந்ததும் ‘உங்க வாப்பா சவுரியமா இருக்காகளாடே?’ என விசாரித்துக் கொள்வார். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவரின் கைகள் ஜிப்பாவில் நோண்டிக் கொண்டிருக்கும். பின்னர் ‘பள்ளிவாசலுக்குப் போய் மோட்டர்போட்டுப் போயிடேன்’ என உள்ளிருந்து எடுத்த சாவியை நீட்டுவார்.

பள்ளிவாசல் சார்பில் மாதச் சந்தாவாக ஒண்ணாம் தேதிக்கு தெருவில் உள்ள எல்லோர் வீட்டிலும் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று வசூலிக்க வேண்டும். எந்த வீட்டுக்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்று தனி ரசீதும் உண்டு. நல்லாப்பாவிற்குத் துணையாக யாரேனும் சிறுவர்கள் மாட்டுவார்கள். நாளைக்குத் தருகிறேன் என்று சொல்லும் வீட்டை ஞாபகம் வைக்க, கொடுத்த ரசீதைத் திரும்பி வாங்கி வரச் சொல்வார். ‘ஏ வாப்பா! ரசீதைக் குடுத்துட்டு நாளைக்குத் துட்டு வாங்க வேண்டியது தானே? வூட்டைக் கொண்டுட்டு ஓடிறவா போறோம்’ என்பார்கள் வட்டாரத்துப் பெண்கள்.

அவருடன் வசூலுக்குச் சென்றால் ஐம்பது, அறுபது வீடுகளில் வசூலிக்க இரண்டு மணி நேரம் பிடிக்கும். காசு விஷயத்தில் நப்பி. அவருடன் துணைக்குப் போவதைத் தவிர வேறெந்த ஃபாயிதாவும் அதில் இருந்ததில்லை.
‘நல்லாப்பா! பாவு ஆத்துற கம்பை எடுத்துக் கொடுத்தாலே துட்டு தருவாங்க. மதரஸா போகாம உன்கூட வந்தா அம்பைசா கூட தர மாட்ற’ என்று கேட்டால் ‘பேசாம வாடே! எனக்கு ரூவா வந்ததும் தாரேன்’ என்பார்.
‘அதான் பத்து, பத்து ரூவாயா இவ்ளோ வசூல் வாங்கிருக்கியே, அதுல இருந்து கொடுத்தா என்னவாம்?’

‘ம்ம்ம் ஹ்ஹ்ம். இது பைத்துல்மால்

துட்டு எடுக்கக் கூடாது’ என்று கறாராய்ச் சொல்லிவிடுவார்.

பள்ளிவாசல் விஷயத்தில் காசு தரமாட்டாரே தவிர நகவெட்டி விட்டால், சாப்பாடு வாங்கி வந்தால் எப்போதேனும் சில்லறைகள் தருவார். மோதினார் பணியில் நீண்ட காலமாய் இருப்பதால் சுற்று வட்டாரத்தில் நன்கு பரிச்சயமான ஆளும், நம்பிக்கையான ஆளும் கூட..!

நல்லாப்பாவின் சொந்தங்கள் யாரேனும் பெண் கேட்டுப் போகையில் ஆட்டோ பேசி அவரையும் ஏற்றிப் போவார்கள். எந்த வீட்டுக்குப் போனாலும் கதவின் பக்கமாய் சேர் போடச் சொல்லி அங்கே கொடுக்கும் ஒரு சாயாவை வாங்கி மெல்லமாய் குடிப்பாரே தவிர, நல்லாப்பா எதுவும் பேச வேண்டிய அவசியம் இருந்ததில்லை. அவரின் இருப்பே போதும், எந்தக் காரியமாயினும் சுபமாய் முடியும்.

வயதானவர்களின் நடவடிக்கையில் யானையின் சூதானம் தெரியும் என்பதை நான் அவரிடம் பலமுறை பார்த்திருக்கிறேன். பள்ளிவாசலுக்கு ஏறும் முன்பு கடப்பாக் கல் வழுக்கி விடாமல் இருக்க லேசாக அதில் தடியை வைத்துச் சோதித்துப் பார்ப்பார். அவர் சாப்பிடும் பொழுது குடிப்பதற்கு வெந்நீரை வலது புறமும், கை கழுவும் தண்ணீரை இடது புறமும் வைக்க வேண்டும். மாற்றி வைத்தால் வசவு விழும்.

நாற்பது வயதிலேயே அவர் மோதினாராக வந்தவர். நாளுக்கு ஐந்து பாங்கு என கணக்குச் செய்தாலும் எண்ணிக்கை தொன்னூறாயிரத்துக்கு மேல் செல்லும். ஒருமுறை உடல்நிலை சரியின்றி எங்கோ இடித்து விட்டு வந்தார். காய்ச்சலுடன், காலில் காயம் ஏற்பட்டதும் வலி தாங்காமல் எதிர் வீட்டில் படுத்துக் கொண்டார். நல்லாப்பா கிடந்த கிடையைப் பார்த்து அவசரமாக டாக்டருக்கு போன் செய்து சொன்னார்கள். டாக்டர் வந்ததும் ஒரு ஊசியும், ட்ரிப்பும் போட்ட பின்னர் ‘பெரியவரே! இன்னைக்கு மட்டும் ரெஸ்ட் எடுங்க’ எனச் சொல்லிச் சென்றார்.

லுஹர் தொழுகைக்கு வேறு யாரோ பாங்கு சொன்னார்கள். தொழுகைக்கு நல்லாப்பாவைக் காணவில்லை என்பதால் தொழுகைக்கு வந்தவர்கள் வாசலேறி விசாரித்துப் போனார்கள். அவ்வாறு வந்தவர்கள் எல்லோர் கண்களிலும் கவலையின் ரேகை.

இரண்டு மணிக்குக் கோழிக்குஞ்சு போல் கண் திறந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். சாப்பிட ஆரம்பித்தார். தண்ணீர் கேட்டார், வெந்நீர் கேட்டார். ரசத்தில் புளி அதிகம் என்றார். ம்மாவுக்குக் கோபம். தூங்கி எழுந்த சிறு பிள்ளைகள் நேரம் ஆக ஆக வெறித்து வருவது போல் நல்லாப்பாவும் மாறுவது தெரிந்தது.

‘அஸர் முடிந்ததும் ஆட்டோ வரச் சொல்லிருக்கேன் அது வரை தூங்குங்க’ என்று முன்னேமே சொல்லி இருந்தார்கள். ஆனால், யாருக்கும் தெரியாமல் நைசாக எழுந்து பள்ளிக்குச் சென்றார் நல்லாப்பா. ‘அல்லாஹும்ம ஸல்லி....’ என நல்லாப்பா தனது ஆழமான குரலில் பாங்கு சொல்வதற்கு முன்னால் ஓதும் ஸலவாத்தை ஓதினார்.

‘இன்னைக்கு ஒருநாள் படுக்கச் சொல்ல வேண்டியதான.. என்ன அநியாயத்தைச் சொல்ல?’ என்று கீழ்வீட்டு ம்மா மூக்கில் விரல் வைத்தாள். நல்லாப்பா வெறும் குரல்வளம் மட்டுமின்றி அதனைத் தாண்டிய ஒரு திறமை யைப் பெற்றிருந்தார். அவரால் தம் கட்டி மூன்று நிமிடங்கள் வரை நீட்டி முழக்கிச் சொல்ல முடியும். ஜும்ஆவில் கண்களை மூடிக் கொண்டு, கைகளை காதில் அடைத்து அவர் அழைக்கும் பொழுது தரைக்கும், வானத்திற்குமிடையே அவர் மிதப்பது போலாகத் தோன்றும்.

அரபி வார்த்தைகளை மெல்லிசையாக வாசிப்பது முதல் ஒவ்வொரு சொற்றொடரின் ஏற்ற இறக்கம் வரை, அவரது அழைப்போசை போகும் பாதை யாவும் பக்தி யில் மூழ்கியது. அவரது அந்தக் குரலின் பின்னால், அவருக்கு முன் இருந்த எங்கள் முஹல்லாவின் எண்ணற்ற முஅத்தின்களின் எதிரொலிகளும், தலைமுறையின் இரகசியங் களும் மறைந்திருந்தது.

காலமும், மூப்பும் அவரையும் விட்டு வைக்கவில்லை. தினசரி பள்ளிவாசலுக்கு வருபவர் வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு மட்டும் வந்து போனார். புது ஜிப்பாவும், தலைப்பாகையும் கட்டி ஜும்ஆவில் அவர் உட்காரும் பொழுது அரபு நாட்டு மன்னரின் மிடுக்கிருக்கும். காலம் நகர, அவரின் வரவு மெல்லமாய் குறைந்து அவரின் குரல்வளம் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனது.

திடுமென வாட்ஸப்பில் வந்த மோதினார் நல்லாப்பாவின் வபாத் செய்தி கேட்டு மனவருத்தம். அமீரகத்தில் எங்கு பாங்கோசை கேட்டாலும் சில நாள்கள் அவருடன் சேர்ந்து ஊர் நினைவும் வந்து போனது.

எங்கள் முஹல்லா பள்ளியிலிருந்து ராகமாய் வரும் வயதான குரலை இனி கேட்கவே இயலாது என காலம் ஒரு கசப்புச் செய்தியை வாட்ஸ் அப்பில் சொல்லிப் போனது போலிருந்தது.

நல்லாப்பா முடங்கிய பின் வட்டாரத்துப் பெரியவர்கள் ஆளுக்கொரு பக்கமாக பள்ளிவாசல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் பாங்கு சொல்வதற்கென தனியாக ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பதால் விரும்புவோர் எல்லோருமே பாங்கு சொல் லிக் கொண்டிருந்தார்கள். பொறுப்பாக ஆள் இல்லை என்பதால் அடிக்கடி பாங்கு சொல்வது தாமதமாகியது குறிப்பாக அஸர் நேரத்தில்!

இதற்கிடையில் ஒருவர் வந்தார், அவருக்குச் சம்பளம் கட்டுப்படி ஆகவில்லை என பாதியில் போய்விட்டார். இந்தப் பிரச்னை தீர கட்டாயம் ஒருவர் வேண்டுமென்று பேசி மோதினாரை நியமித்தார்கள். பள்ளியில் மறுபடியும் ஒரு மோதினாரின் புதுவித ராக பாங்கோசை கேட்டது.

உலகில் ஒலிக்கும் பாங்கொலிகளில் பிலால்(ரலி) அவர்களின் ஆதி அழைப்புக் குரல் கலந்திருப்பதைப்போல எங்களூர் பாங்கில் மோதினார் நல்லாப்பாவின் குரலும் மெல்லக் கரைந்து காற்றின் திசையெங்கும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

‘அல்லாஹு அக்பர்.. அல்லாஹு அக்பர்..’


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்