மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கதை

மீண்டான் அப்துல்லாஹ்
மொய்தீன், அக்டோபர் 16-31, 2024


நகர்புறத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்துல்லாஹ். பள்ளியில் நன்றாகப் படிப்பது மட்டுமின்றி தொழுகையிலும் குர்ஆன் ஓதுவதிலும் ஆர்வம் உடையவனாக இருந்தான். அப்துல்லாஹ்விற்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். நண்பர்கள் வைத்திருப்பது போல் தன்னிடம் ஒரு டிஜிட்டல் அலைப்பேசி (Mobile phone) இல்லையே என்ற ஒரு ஏக்கம் அவனுக்கு இருந்தது. 10ஆம் வகுப்பில் நிறைய மதிப்பெண் எடுத்தால் ஒரு புதிய அலைப்பேசி வாங்கித் தருவதாக அவன் தந்தை கூறினார்.

அதே போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுத்த அப்துல்லாஹ்வுக்கு அலைப்பேசி வாங்கித் தந்தார் அவனுடைய தந்தை. இவ்வாறே 12ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற அறிவுரையுடன் தான் அவனிடம் அதைக் கொடுத்தார். அப்துல்லாஹ்வுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. முதலில் அதற்காகத் தீவிரமாகப் படித்த அவன் காலப் போக்கில் அலைப்பேசியில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினான். இது அவனைக் கல்வியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியது. மட்டுமின்றி வணக்க வழிபாடுகள் உடனான அவனுடைய தொடர்பையும் குறைத்தது.

இதை உணர்ந்த அப்துல்லாஹ் அதில் இருந்து மீள முயன்றான். ஆனால் அது அவனால் முடியவில்லை, இதை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான். அதற்கு அவன் நண்பர்கள் ‘ஒன்னும் இல்லடா, மொபைல் யூஸ் பண்ணிட்டே படிக்கலாம். இந்த வயசுல யூஸ் பண்ணாம வேற எப்போ யூஸ் பண்ணுறது?’ என அப்துல்லாஹ்வுக்கு அறிவுரை கூறினர். காலம் செல்லச் செல்ல அவனுக்குக் கல்வி மீதான ஆர்வம் மங்கிப்போனது. ஆனால் பெற்றோர்கள் அவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.
11ஆம் வகுப்பு முடிந்தது. அதில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தான் அப்துல்லாஹ். இதைக் கண்ட அவனது தந்தை சிறிதும் கோபம் அடையாமல் அவனிடம் ‘என் அருமை மகனே, நீ மருத்துவர் ஆக வேண்டும் என கனவு கண்டாய், நீ அதற்காக உழைத்தாயா? இப்போது நீ அதில் இருந்தும் வணக்க வழிபாடுகளில் இருந்தும் விலகி இருக்கிறாய்.

‘இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும் அன்றி வேறொன்றுமில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ, இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!’ (திருக்குர்ஆன் 29:64) என்ற குர்ஆன் வசனத்தைக் கூறி விட்டுச் சென்று விட்டார். இதைக் கேட்டவுடன் உணர்வு மிகுதியால் அழ ஆரம்பித்தான் அப்துல்லாஹ்.

பின்னர் அவன் தந்தையிடம் சென்று ‘அப்பா, நான் தவறு செய்து விட்டேன். நான் இதிலிருந்து மீள விரும்புகிறேன்’ எனக் கூறினான். அதற்கு அவனுடைய தந்தை ‘என் மகனே நிச்சயம் உன்னால் இதில் இருந்து மீள முடியும்’ என அப்துல்லாஹ்வுக்கு அறிவுரை வழங்கினார். ‘உனக்கென்று ஓர் இலக்கை வைத்து, இறைத்தொடர்பை வலுப்படுத்தி விடாமுயற்சி எடு! நிச்சயமாக நீ உன் இலக்கை அடைவாய்’ என்றார்.

அலைப்பேசி அடிமைத்தனத்தில் இருந்து மெல்ல மெல்லத் தன் தந்தை உதவியுடன் மீண்டான் அப்துல்லாஹ். அவன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவக்
கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு அறிவுரை வழங்கிய அவனது நண்பர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து கிடைத்த கல்லூரியில் சேர்ந்தனர்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்