ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்குச் சப்தம் கேட்டவுடன் எழுந்து சுயதேவைகளை முடித்து விட்டு பள்ளிக்குச் செல்ல தயாரானார் பஷீர் பாய். வழக்கம் போல பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள டீக்கடைச் சுவரில் தொங்கவிடப்பட்ட அன்றைய நாளிதழின் வால்போஸ்டைப் பார்த்தார். சற்று பதற்றமானவராய்மீண்டும் பார்த்தார். ‘இன்று பந்த் எதிர்க்கட்சிகள் அறிவிப்பு’ தங்கள் கட்சித் தலைவரை அமலாக்கத்துறை விசாரணை செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பந்த் அறிவிக்கப்பட்டது. சற்று குழப்பத்துடன் பள்ளிக்குச் சென்று தொழுது முடித்துவிட்டு வேகமாக வீடு திரும்பியவர் மனைவி ஹாஜராவிடம் ‘இன்றைக்கு பந்தாமே’ என்றார்.
‘ஆமா! நேற்றே டிவில சொன்னாங்க. நீங்கதான் பார்க்காம சீக்கிரமா தூங்கப் போய்டீங்க. இப்ப என்ன பேசாம லீவ போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. அரசாங்கம் வேற பஸ்ல கல் எறிஞ்சிடுவாங்களோன்னு பயந்துட்டு பஸ்ஸும் ஓடாதுன்னு முன்கூட்டியே அறிவிச்சுட்டாங்க!’ஆனால் அதைக் கேட்டும், காதில் போட்டுக் கொள்ளாமல் தனது பைக்கினைத்தூசி தட்டி துடைத்துக் கொண்டிருந்தார் பஷீர்.
‘ஹாஜரா..! நான் இன்னைக்கு சைக்கிள்ல வேலைக்குப் போறேன். எனக்கு லஞ்ச் ரெடி பண்ணி வை. நான் குளிச்சு ரெடியாகி வர்றேன்’ என்று பாத்ரூமுக்குள் சென்றார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் கிளார்க் பஷீர் பாய்என்ற ஐவி பஷீர் பாய்(ஐவி அலுவலகத்தில் அவருக்குச் சூட்டியது) தனது சைக்கிளில் 10 கி.மீ. தொலைவில் தரமணியில் உள்ள தமிழ்நாடு மாற்று வாரிய அலுவலகத்தை அடைந்தார். அன்றைக்கு பந்த் என்பதனால் 50 பேர் பணிபுரியும் அலுவலகம் வெறிச் சோடிக் கிடந்தது.
மூன்று பேரைத் தவிர, பஷீர் பாய், பியூன் மாடசாமி, இயக்குநர் மகுடீஸ்வரன் ஆகியோர் இருந்தனர். பஷீர் பாயைப் பார்த்தவுடன் பியூன் மாடசாமிக்கு ரொம்ப மகிழ்ச்சி. ‘அய்யா எங்க நீங்களும் வராம லீவு போட்டுடுவீங்களோன்னு நினைச்சேன்’ என்றார்.
‘என்ன மாடசாமி! என்ன விஷயம்?’
‘இல்ல சார், என் மகளுக்கு அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயமாயிருக்கு! அதுக்காக பி.எஃப் லோன் போட்டிருந்தேன். அதை இன்னைக்கு பில் செக்ஷன் கிளார்க் ரெடி பண்ணித் தாரேன்னு சொன்னார். ஆனால் பந்த்னு அவர் லீவு போட்டுட்டார். அதனால நீங்களா பார்த்து அதை ரெடி பண்ணிக் கொடுத்தீங்கன்னா நான் கருவூலத்தில் கொடுத்து இன்னைக்கே பணத்தை வாங்கிடுவேன். உங்களுக்கு கோடிப் புண்ணியமாப் போகும் சார்’
பிறர்க்கு உதவுவதை அல்லாஹ்வுக்கு செய்யும் வழிபாடாகக் கருதும் பஷீர் பாய், ‘அதனால் என்ன மாடசாமி.. உடனே ரெடி பண்ணித் தாரேன்’ என்று சொல்லும் போதே இயக்குநர் பஷீர் பாயை இன்டர்காமில் அழைத்தார்.
இயக்குநர் அறைக்குள் நுழைந்தவரிடம், ‘பாய்..! நாளைக்கு தலைமைச் செயலகத்தில் மந்திரியுடன் ஓர் அவசர மீட்டிங் இருக்கு. அதுக்கு இந்த பிராஜெக்ட் சம்பந்தப்பட்ட ரிப்போர்ட் தேவைப்படுது. அதை ரெடி பண்ண வேண்டிய சூப்பிரண்ட் ஆனந்தன் இன்னைக்கு லீவு. அதனால் என்ன செய்வியோ தெரியாது, சாயந்தரம் 4 மணிக்கு இந்த ரிப்போர்ட் என் டேபிள்ல இருக்கணும். புரியுதா’ என்றார்.
‘சரிங்க சார்..!’ என்ற பஷீர் பாய்தன் இருக்கையில் அமரும் போது மணி 11.
மாடசாமி சம்பந்தப்பட்ட பி.எஃப் அப்ளிகேஷனை ரெடி பண்ணி கவர் போட்டு மாடசாமியை கூப்பிட்டு ‘இந்தாப்பா.. இதை உடனே கருவூலத்திற்குக் கொண்டு போய்கொடுத்து பணத்தை வாங்கிக்கோ..!’ என்ற பஷீர் பாயை ஆனந்தக் கண்ணீருடன் பார்த்தார் மாடசாமி. சற்று சோம்பல் முறித்தவாறு மணியைப் பார்த்தார் பஷீர் பாய்மணி 1. உடனே எழுந்து அவசர அவசரமாக பக்கத்து பள்ளிக்குச் சென்று லுஹர் தொழுகையை நிறைவேற்றி விட்டு, தனது இருக்கைக்கு வந்து மதிய உணவை முடித்து விட்டு இயக்குநர் சொன்ன அந்த ரிப்போர்ட்டைத் தயார் செய்வதில் மூழ்கினார் பஷீர்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சற்றும் தளராத பஷீர் பாய்சரியாக 4 மணிக்குள் அந்த ரிப்போர்ட்டை ரெடி பண்ணி இயக்குநர் டேபிளில் கொண்டு போய்வைத்தார். மிகவும் மகிழ்ந்த இயக்குநர் மகுடீஸ்வரன், ‘பாய்நீங்க சைக்கிள்ல வந்திருக்கீங்க அதனால இப்பவே கிளம்புங்க..!’ என்று அனுமதி கொடுத்தார். மறுநாள் வழக்கம் போல அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்திருந்தனர். பஷீர் பாய்அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவுடன் தனது இருக்கையில் லஞ்ச் பேக்கை வைத்து விட்டு, கையொப்பமிட இயக்குநர் அறைக்குச் சென்றவர் அங்கே தாழிட்ட அறைக்குள் நடந்த உரையாடலைக் கவனிக்கத் தவறவில்லை.
சூப்பிரண்ட் ஆனந்தன் இயக்குநரிடம், ‘என்ன சார் நான் தான் நேற்றைக்கு லீவாச்சே. இப்படி பல கோடி ரூபாய்மதிப்புள்ள இந்த ப்ராஜக்ட் சம்பந்தமான இந்த ரிப்போர்ட்டை எப்படி ரெடி பண்ணீங்க?’
‘அதான் நம்ம ஐவி பஷீர் பாய்இருக்கார்ல. அவர் நேற்று டியூட்டிக்கு வந்தார். அவர வைச்சு வேலையை முடிச்சிட்டேன்..!’
இதனைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த பஷீர் பாய்இயக்குநர் மகுடியைப் பார்த்து புன்னகை புரிந்தவாறு வெளியே வந்தார். பஷீர் பாயின் கையைப் பிடித்து கண்ணீர் விட்டவராக நன்றி சொன்னார் பியூன் மாடசாமி. அந்த நேரத்தில் பஷீர் பாயின் போன் ரீங்காரமிட்டது.‘எல்லாப் புகழும் இறைவனுக்கே! அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு..!’