திறந்து கிடந்த ஒற்றைத் தாளை
புரட்டப் புரட்ட
புதிய பக்கங்கள் உருவாகத் தொடங்கின
புதிய பக்கங்களுக்குள்
யாரோ மறைந்திருப்பதாக
உணர்ந்த நான்
சொற்களாக மாறி
அங்கு மறைந்திருப்பது
யாரென அறிய விரும்பினேன்
அப்போது அது எனக்கு
முக்கிய நிமிடமாகத் தோன்றியது
ஒவ்வொரு பக்கமாக
தேடும் போதெல்லாம்
வெவ்வேறு பக்கங்களுக்குள்
மறைவதாக உணர்ந்தேன்
களைப்பு ஏற்படவே
இதுவரை இரண்டு
தேநீர் பருகியிருப்பேன்
என்ன செய்யலாம்
என யோசித்தபோது
புத்தகத்தின் ஒரு பக்கத்தை
ஓய்விற்காக எடுத்துக் கொண்டேன்
சூரியன் உச்சியை அடைந்திருந்தது
நிழல் நகரும்போது
அந்த உருவமும் நகரத் தொடங்கியது
ஆயினும் நான் விடுவதாக இல்லை
பின் தொடர்ந்தேன்
அனைத்துப் பக்கங்களுக்குள்ளும்
வெவ்வேறு உருவமாக மறைவதை
அவதானித்தேன்
எந்த நேரத்திலும்
எதுவும் நடக்கலாம்
திறந்திருக்கும் ஒரு பக்கத்தினூடாக
பெரும் மழை பெய்யத் தொடங்கியது
சொற்களாக இருந்த நான்
அழிந்து கொண்டிருந்தேன்
முழுமையாக அழிய விரும்பாததால்
வீடு திரும்பிவிட்டேன்.
ஏ.நஸ்புள்ளாஹ்