மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கதை

அய்த்த சீரு!
நஸ்ரத் ரோஸி, 16-28 பிப்ரவரி 2025



‘மைனி..... ஏ ராசாத்தி எம்புட்டு நாளாச்சு ஒங்கொரலக்கேட்டு... என்னப் பெத்தாளேய்! நல்லாருக்கியா? நாங்க போன் அடிச்சாத்தேன் பேசுவியா? பொங்கலுக்கு குடுத்துட்ட காகறி எல்லாம் நல்லாருந்துச்சா?’

‘இருக்கேம்புள்ள! எல்லாம் ஆக்கித் திண்ணு கழிச்சாச்சுப்புள்ள, என்ன செய்யிற?’

‘இந்தா... ஒம்மருமகதேன் குத்தவச்சிட்டா? தண்ணிய ஊத்தி குச்சுல உக்கார வச்சிருக்கேன்..!’

‘அடிசக்க! பெரிய மனுசி ஆயிட்டாளா? இனி ஒங்கூட்டுல தெனந்தெனொ நாத்துனாச் சண்டதேன் நடக்கப்போகுது’

‘ஆமா, இப்ப மட்டும் சும்மாவா இருக்குறா...? என்னோட எந்நேரமும் மல்லுக்குத்தேன நிக்கிறா? அவுகப்பா என்னமோ ஒலகத்துல இல்லாத ஓவியத்தப் பெத்துப்புட்டாப்புல அவ சொல்லுறதுக்குலாம் ஆடுறாக, இந்தாங்க பேசுங்க ஒங்க ஒடம்பொறப்பு பேசுறாராம்..!’ எனக்கூறி அண்ணாமலையண்ணனிடம் நீட்ட

ரெங்கம் கையில் கிடந்த வளையச்சத்தம் அலைப்பேசி கை மாத்தும் போது கடகடவென கேட்டது! காதில் வைத்திருந்த அலைப்பேசியை விலக்கி விட்டு லேசாக அடுப்படியை எட்டிப் பார்த்துக்
கொண்டாள் எதிர்முனையில் ரோஸா. அவள் வீட்டுக் குக்கரில் இப்போது தான் லேசாக ஆவி வர ஆரம்பித்திருந்தது.

‘ஆத்தா..! நல்லாருக்கியா? புள்ள பெரிய மனுசியாயிருச்சு, போன ரெண்டு வருசமா வாரோம் வாரோனுட்டு நீயும் மச்சானும் நம்மள தாக்காட்டிப்புட்டியா? நம்ம மருமயென் மூத்தவரு வந்தா பைக்
கேப்பாருண்டு ஒரு பைக்கும் சின்னவரு வந்த விளையாடக் கேப்பாருண்டு ஆட்டுக்குட்டில்லாம் புடிச்சிக் கட்டிப் போட்டிருந்தோம். நீங்கதேன் வரல’

‘இனி நீங்க ஏமாத்த முடியாது. புள்ளக்கி விசேசம் வச்சிருக்கிறேன். ஒழுங்காத்தொறயா வந்து சீர் செஞ்சிட்டு போயிருங்க ஆமா சொல்லிப்புட்டேன். மச்சானுக்கு போனப்போட்டேன் ஏதோ பாசையில பேசுது, எங்கன நிக்கிறாராம் அவரு... ஏத்தா?’

‘சரிண்ணே! வர்றோம். அவரு அஞ்சு நாளா ஊர்ல இல்லண்ணே, பெங்களூரு பக்கம் போயிருக் குறாரு. வரவுட்டு சொல்லுடுறேன்.’

‘சரித்தா... சரித்தா! விசேசத்துக்கு வரலைண்டாலும் சரி மச்சானை திருவ்லாவுக்கு வரச்சொல்லிருத்தா. மச்சான் காசுலதேன் கெடயே வாங்கணும்’ எனச் சொல்லி சத்தமாகச் சிரித்தார்அண்ணாமலை யண்ணன்.

‘ஏண்ணே! நாம இப்புடி தொப்புள்கொடி உறவா இருக்குறோம், ஆனா இவங்க எதை நெனச்சு நம்மள பிரிக்கப்பாக்குறாக, நேத்து பூரா மனசே கேக்க லண்ணே!’

‘யாம்த்தா..? என்ன ஓம்மனசுல சொல்லு அண்ணன்ட்ட’

‘இல்லண்ணே! சிக்கந்தாமல பெரச்சனையத்தேன் சொல்றேன், தாயாப்புள்ளயா இருக்குற நம்மள என்னென்னமோ சொல்லி பாகுபடுத்துறா களே? இவுகளுக்கு நாம என்ன பாவம் பண்ணுனோம்?’

‘அட! விடுத்தா..! கெடக்குறானுக. இவனுகளுக்கு வேற வேலக்கழுதயில்ல, அண்ணனைலாம் சைவந்தேன் சாப்பிடணும்னு சொன்னா அந்த நிமுசமே அண்ணே இஸ்லாத்துக்கு ஓடியாந்துருவேன் என்றவர் ரோஸா சிரிப்பதை கவனித்தவர்... பெறவு? இவனுக கூட யாரு கீரையும் கத்திரிக்காயும் திண்டு மாரடிக்கிறது’ என்றவர் முன்பைவிட பலமாகச் சிரித்துவிட்டு... சரி தாயி ஒனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு...

அந்த அல்லா பெரியாண்டவர்ட போய் ஒரு வேண்டுதலப் போட்டு வேண்டிக்கிட்டு வந்துர்றேன்...!’

‘எனக்கு நம்ம மனுச மக்க எல்லாரும் ஒத்துமையா, நிம்மதியா நல்லாருக்கணும்ணே, நமக்குள்ள எதுவும் நடந்துடக்கூடாது.’

‘அம்புட்டுத்தானத்தா... இந்தா நாளைக்கே போய் பள்ளா சல்ல நிண்டு ஒரு வேண்டுதல போட்டுர்றேன் அவளதானே... நீ மனசப் போட்டு ஒழப்பாம இருத்தா.. அப்புடிலாம் ஒன்னும் பாரதூரமா நடந்துறாது.. என நிதானமாக ரோஸா விடம் கூறினார்.

‘இந்த பாருத்தா! வித்தியாசப்படுறோம், நாமல்லாம் பேருலதேன் அண்ணென்லாம் வேற எதையுமே பாக்கமாட்டேன், மனுசெய்ங்க நல்லவய்ங்களான்டு தேன் பாப்பேன். நீ மனசப் போட்டு பெசத்தாதத்தா! என்ன? சந்தோசமா இரி. அண்ணனுக்கு அதான் வேணும். சரி இந்தாத்தா அவள்ட்ட பேசு’ என்று தன்மையாக கூறியவர் கையிலிருந்து மீண்டும் அலைப்பேசி கைமாறியது.

‘ஏ! மைனி! பைத்தியாரி.. அந் தாளே ஒரு மாதிரியான மனுசெ, அவரிட்ட போயி நீ தருகா சங்கதிய சொல்றிய, ஒனக்கு மண்டையில மசாலா இருக்குதா? அப்படி எதுவும் ஒன்னுண்டா நாங்க சும்மா விட்ருவமா? எதுக்கு சும்மா வெசனப்பட்டு கெடக்குற?’

‘இல்லடி ரங்கம்! நாட்டு நடப்புலாம் பார்த்தா ஒன்னும் நல்லாத்தெரியல, திடீர் திடீர்னு என்னத்தையாவது கௌப்பிவிட்டு வேடிக்கை பாக்குறியாங்க! நான்லாம் ரெம்ப பயந்துட்டேன்டி ரங்கோ..’

‘அடப்போ மைனி! நீ ஒன்னு. இவய்ங்க பேச்ச ஆரு கேக்கப்போறது. நம்மளுக்குத் தெரியும் நம்ம ஒறமொற என்னாண்டு. நீ அவர விடு என்னமுண்டா நானே எறங்கிறமாட்டேன்...’ என அவள் அனலாகச் சொல்லிய போது செல்பேசியே சற்று சூடானது போலொரு சிலிர்ப்பு.

‘சரி அதவிடு. அய்த்த நீ கொண்டுவர்ற சீர் சேலையத்தேன் எம்மக மங்கல நாளுக்கு உடுத்துவாளாம், அதையும் சொல்லிப்புட்டா. மச்சாமாரு வருவாய்ங்கன்னு மயி லிறகு, உண்டிவில்லு எல்லாம் வாங்கி வச்சு ஆட்டுக்குட்டி, கலர்க் கோழிக்குஞ்சு எல்லாம் வாங்கிக்கேட்டு அடம்பண்ணி உக்காந்திருக்குறா’

‘நீ அண்ணே இல்லாம வரமாட்ட எங்களுக்குத் தெரியும், அதனால என்ன செய்யிற, எம்மகளுக்கு சேலை, காப்பு, கொலுசு எல்லாம் வாங்கி மொத சீரா ஒம்பூட்டுச்சீர எங்களுக்கு அனுப்பிவுடுற சரியா?’

‘எம்மகள மருமயனுக்குக் கட்டத்தேன் மாட்ட! சீராவது குடுத்துவுடு என்ன?’ என்றவளுடைய குரலில் அப்படியொரு ஏக்கம்.

‘இஞ்சவாரு... ஒம்மருமகதேன் ஒன் னைய வரச்சொல்லி அடம்புடிக்கிறாண்டா இங்கிட்டு எந்தம்பி அத்தாச்சிய வரச் சொல்லு மாப்புள பசங்களப் பார்த்து ரெம்ப நாளாச்சுன்னு துடுச்சிக்கிட்டு கெடக்குறியான், ஒருமொற வந்து பாத்துட்டு போ மைனி’

‘என்னதேன் நம்ம கெழவி பொன்னாத்தா ஏழு, எட்டு வயசுல இஸ்லாத்துக்கு போயி நீங்க தாய்வழியா இஸ்லாமானவரா மாறிட்டாலும் எல்லாரும் நாம மலையாண்டி கூட்டம் தான மைனி. மலையவிட்டு பள்ளத்துக்கு இறங்கையில நம்ம பரயும் பரணும் ஒன்னு மண்ணுமாத்தான கையப் பிடிச்சு இறங்கி வந்தாக, பேரை மாத்திக் கிட்டா ரத்தம் மாறிருமா?’

‘அப்படிச் சொல்லுடி ஏ ரங்கோம், ஏ பத்தரமாத்து தங்கோம்....! சரிபுள்ள எம் மருமகளுக்கு எல்லாம் வந்து சேந்துடும் சரியா?’

இருவருக்குள்ளும் பூத்த புன்னகையுடன் அலைப்பேசி துண்டிக்கப்பட்டது. அலைப்பேசியை வைக்கவும் குக்கரில் மூன்று விசில் அடிக்கவும் சரியாக இருக்க, குக்கரில் அவிந்த ஆட்டிறைச்சி போலவே ரோஸா மனசில் கொத்தாக பாரிஜாதம் பூத்திருந்தது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்