சொற்களால்
சிற்பம் செதுக்குபவர்களை
அறிவேன் நான்
இன்னும் சிலர்
சொற்களைத் தூரிகை
ஆக்குவதுண்டு
சொற்களால் காவடி தூக்குவோர்
நிரம்ப உண்டு
சொற்களை மயான ஊர்தியாக்கி
மகிழ்வோரை என்ன சொல்ல?
சொற்களின் தோளில்
கை போட்டு நடப்பதில்
சிலருக்குக் கவுரவம்
சொல்லைச் சிநேகிதியென்று
ஏமாற்றித் திரிவதில்
உச்சம் தொட்டவர் உண்டு
பவுர்ணமிச் சொற்களைக்
கனாக் கண்டு
அமாவாசையில்
முகம் துடைப்பவர்களும்
சொற்களின் ஊழி வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டவர்களும்
அந்தகாரச் சொற்களின்
ஜால வித்தைக்காரர்களும்
அடுத்தவர் சொற்களின்
‘காக்காக் கடி’ வித்தகர்களும்
இருக்கவே செ#கிறார்கள்
ஆயினும்
உச்சி மரத்தில் கூடு கட்டும்
பறவைகள் போல்
சொற்களுக்காக
ஊசி முனைத் தவம் செ#யும்
கவிஞர்கள்
மூலிகை போல அரியரென்றாலும்
அவர்களால்
உண்டாலம்ம உயரிய கவிதை