தொப்பியும் தாடியும்
விபத்தை ஏற்படுத்தவல்ல
அடையாளங்களல்ல
விபத்திலிருந்து காப்பவர்களாய்த்தான்
அந்த அடையாளக்காரர்களின்
வரலாறு இருந்திருக்கிறது
சுனாமி பேரழிவிலும்
சென்னைப் பெருவெள்ளத்திலும்
கொரோனா பெருந்தொற்றிலும்
தொப்பிக்காரர்களும்
தாடிக்காரர்களும்
களம் நின்றார்கள்
பசி தீர்த்தார்கள்
உயிர் மீட்டார்கள்
பயங்கரவாதிகள்
தீவிரவாதிகளின் முகங்களாக
ஊடகச் சித்திரிப்புகள் விரிந்தாலும்
இஸ்லாத்திற்கு எதிரான தீவிரவாதிகள்
தொப்பி தாடி வைத்திருந்தாலும்
பொதுவாழ்வின் தொப்பி தாடிகள்
அவ்வாறு ஒருபோதும் இருந்ததில்லை
பெரும்பாலான தொப்பி தாடிகள்
தீவிரவாதிகளிடமிருந்து
சுற்றுலாப் பயணிகளைக் காக்கும்
பெரும் போராட்டத்தில்
உயிர்த் தியாகம் செய்த
சையத் ஆதில் ஷாக்களுடையவை
உயிர்காக்க ஓடிய
ஓட்டுநர்கள்
முஸாஃபிரும், சமீரும்
அப்துல் வாஹித் கானும்
காயம்பட்டவர்களைத்
தோள்களில் சுமந்த
சால்வை வியாபாரி சஜ்ஜாதும்
தொப்பி அணிபவர்கள் தாம்
பேரன்பைப் பொழிந்தாலும்
உயிர் காக்க நின்றாலும்
பெரும்பழி சுமந்து
போலி வழக்குகளில்
வேட்டையாடப்பட்டுக்
கொண்டே இருக்கும்
தொப்பியும் தாடியும்
அத்தனை பழிச் சொல்லுக்கிடையேயும்
இன்னும் ஒரு பெருமழைக்காலத்திற்கும்
பேரிடருக்கும்
பிரதிபலன் பாராது
ஓடிக்கொண்டே இருக்கும்
தொப்பியும் தாடியும்
ஆடைகளால் அடையாளம்
காணுங்கள் என்றார்கள்
அடையாளம் காண வேண்டியது
வெறுப்புக் களங்களில் அல்ல
அன்பின் களங்களில்