மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

நாளைய தூண்களுக்கு..!
ஆரூர் புதியவன், செப்டம்பர் 16-30, 2025


மாணவனே
மாணவனே
சமூக முகம்
ஆனவனே

உன் மகத்தான
ஆற்றலினை மறந்தாயா? இல்லை
உன் சமூகப்பொறுப்பு உணர்வைத்
துறந்தாயா?

ஏற்ற மிகு இலட்சியத்தை
ஏற்று நடக்காமல்
உனக்குள்ளேயே நீ இறந்தாயா? இல்லை
பாழ்பட்ட பாலாகித் திரிந்தாயா?

பரட்டைத்தலை உனது
பாதி முகம் மறைக்க
அரட்டையில் திளைக்கும் உன்
ஆடையை நீ கிழித்திருக்க

நீண்ட நகங்களுக்குள்
நெடுங்கால அழுக்கிருக்க
தூண்டில் மீன் போலத்
துடிதுடிக்கும் நடை இருக்க

இடுக்கண் அகற்ற வகையறியா
உன் காதில் கடுக்கண் அமர்ந்திருக்க
கைகளிலே
சங்கிலிகள், காப்புகள், கயிறுகள்

உன் உடுப்போ அது
பண்பாட்டில் போர்த்துகிற
சவக்கோடி
தடுப்பில்லா உன் வாழ்வில்
தவறுகளோ பல கோடி

படிக்கின்ற வயதினிலே
பரிணமிக்கும் பொழுதினிலே
துடிப்போடு முன்னேற
துள்ளலுடன் பணியாற்ற
வெடித்துக் கிளம்புகிற
வீரிய தருணத்தில்
குடித்துக் கெடலாமா
குற்றங்களில் விழலாமா?

போதையின் வலை வீழ்ந்து
புலன் அழிய விடலாமா?
தம்பி உன் போதையினால்
தடுமாறும் சமுதாயம்

ஒழுக்கத்தை நீ மறந்து
ஒளி இழந்து திரிந்தாலோ
வழுக்கி விழுந்து விடும்
வளமார்ந்த நம் நாடும்

தோற்றத்தை வைத்தே
தோற்றதென உன் வாழ்வை
மாற்றார் நினைக்கும்படி
மாணவனே இருக்காதே

துள்ளும் உன் பொன்விழிகள்
தூய கனவுகளை
விள்ளும் விளக்காக
வீரியனே நீ விழிப்பாய்

நடை உடை பாவனையில்
நனி சிறந்த பண்பாட்டை
படை வீரன் போல
பான்மையுடன் பாவிப்பாய்

புத்தகக் கருத்துகளைப்
புத்தியிலே வைப்பதோடு
வித்தகம் வளர்ப்பதற்கு
வெளியுலகும் படித்துக் கொள்

அலைகடல் போல் அலைப்பேசி
மாணவன் நீ மீனவனாய்
வலைவீசி அறிவு பிடி

வலையில் நீ வீழாதே
அலைப்பேசிக்கடல் விழுந்து
ஆழத்தில் தொலையாதே

மூடத்தை அழி
முப்போதும் விழி
பாடத்தைத் தெளி
படைத்திடு வழி

சுமை தாங்க வேண்டிய நீ
சுமையாக மாறாதே
நமை தாங்கும் நாட்டுக்கு
நாளைய தூண் நீ அன்றோ


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்