பூக்களில்
எண்ணற்ற நிறங்கள்
பற்பல மணங்கள்
சின்னதாய் பெரிதாய் பூக்கள்
மலைகள் காடு மேடு
பள்ளங்கள் சமவெளிகள்
பல இடங்களில் பூக்கள்
உயர்ந்த மலைகளிலும்
நெடுக வளர்ந்த மரங்களிலும்
கூடமைக்கும் தேனீக்கள்
பூக்களின் சர்க்கரை
வயிற்றில் நாள்கள் தங்கி
வாய் வழி வெளிவந்து
தேனடையில் தேனாய்த் தஞ்சம்
பல்லாயிரம் தேனீக்களால்
மகரந்தம் சேகரிக்கப்பட்டு
தேனின் உருவாக்கம்
தேன் கூடு
பல்லாயிரம் தேனீக்களின் வீடு
அலைந்து திரிந்து
உழைத்துக் கட்டிய வீடு
எந்தப் பூவின் மகரந்தம்?
எந்த இடத்தின் பூவிது?
எந்தத் தேனீ கொண்டு வந்தது?
எந்தத் தேன் துளி?
எதுவும் தெரியாத
ஆதியும் அந்தமும்
அறியாத தேன்துளி
எந்த நிறத்துப் பூ
கொடுத்த தேன் துளியிது
எந்த மணம் கொண்ட பூ
கொடுத்த தேன் வாசனையிது
பூவின் இடத்தால் - அளவால்
பிரிக்க முடியுமா தேனை?
மொத்தத்தில் அது தேன்
சுவையான தேன்
யாரும் அதற்குச் சொந்தமில்லை
உழைத்த தேனீக்களைத் தவிர
படைத்த இறைவனைத் தவிர
சாதி மத இன நிற
பேதமில்லை தேனீக்களிடம்
ஏற்றத்தாழ்வுகள் இல்லை
யார் கட்டிய தேன்கூடு
கட்டிய கூட்டை நம்மால்
கலைக்க மட்டுமே முடியும்
கலைத்த கூட்டை நம்மால்
மீண்டும் உருவாக்க முடியுமா?
மனிதனுக்கு நிவாரணமாய்
இறைவனின் ஏற்பாடு தேன்
சுறுசுறுப்பாய் இயங்கும்
இராணித்தேனீயே தலைவர்
ஆண் தேனீக்கள்
வேலைக்காரத் தேனீக்கள்
முத்தான மூன்று வகைகள்
தன் எடையளவில்
மூன்றிலொன்றைச் சுமக்க
விமானமே சிரமப்படும்
தன் முழு எடையளவு
பூக்களின் மகரந்தத்தைச் சுமக்கும்
சுமைதூக்கிகள் தேனீக்கள்
வாழும் காலமெல்லாம்
உழைப்பைத் தவிர
ஒன்றுமறியா அப்பாவிகள்