உங்களுடைய ஆசை என்ன?
என்று
குழந்தைகளிடம்
கேட்கப்பட்டது
உலகின்
ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்தாலும்
குழந்தைகளின் பதில்கள்
எரியும் மெழுகில் உருகும் மெழுகாய்
ஒவ்வொன்றும் ஒரு வகையாய்
இருந்தது
நீச்சல் குளத்துடன் வீடு
என்றது ஒரு குழந்தை
ஹார்லி டேவிட்சன் வாகனம்
என்றது மற்றொரு குழந்தை
பல லட்சங்கள் வேண்டும்
என்றது ஒரு குழந்தை
வந்து விழும்
குண்டு மழைக்கு இடையில்
உருகிய மெழுகில்
ஒட்டிக்கிடக்கும் ஒற்றைத் திரியாய்
ஃபலஸ்தீன மழலைகளின்
ஆசைகள் வேறானது
ஒருவேளை உணவாக
ரொட்டித்துண்டு வேண்டும்
என்றது ஒரு குழந்தை
இழந்த தந்தையோடு
உறங்கவேண்டும்
என்றது மற்றொரு குழந்தை
உருக்குலைந்த வீட்டில்
உறவுகளுடன் இருக்க வேண்டும்
என்றதோர் குழந்தை
விருப்பங்களின்
பெருங்கடலில்
சில இதயங்கள்
துடிக்கவே ஆசைப்படுகிறது