மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

கவிதை

காவிய நாயகர் முஹம்மத் (ஸல்)
கவிஞர் மு.மேத்தா, 1 - 15 OCTOBER 2022


 

மனிதர்களில்
இவர் ஒரு
மாதிரி
அழகிய முன்மாதிரி!


உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம்


காலடியில் மகுடங்கள்
காத்துக் கிடந்தன
இவரோ ஓர்
ஏழையாகவே
இறுதிவரை வாழ்ந்தார்!


உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம்!


எல்லாரும்
வாயிற் கதவுகளைத்
தட்டிக்கொண்டிருந்தார்கள்
இறுதி நபியாய்
எழுந்தருளிய இவர்தான்
தாழிட்ட மனக்கதவைத்
தட்டினார்.


அகதியாய் இதயங்கள்
அலைந்து
கொண்டிருந்தபோது
இவருடைய
தோள்களே மானுடத்தைத்
தூக்கிக் கொண்டன.

கை கொடுத்த இவருடைய
"கை'
தொழுகை!
எழுதப் படிக்கத்
தெரியாதவர்தான்
ஆனால்
இவர்தான்
பூமியின் புத்தகம்!


சிம்மாசனங்களில் இவர்
வீற்றிருந்ததில்லை
அண்ணலார்
அமர்ந்திருந்த
இடமெல்லாம்
அரியணையானது!


கிரீடங்களை இவர்
சூட்டிக் கொண்டதில்லை
பெருமானார்
தலையில் தரித்ததெல்லாம்
"மணிமகுடம்' என்றே
மகத்துவம் பெற்றது!


மக்கத்து மண்ணை இவர்
போர் தொடுத்து வென்றார்
அகில உலகத்தையும்
போர் தொடுக்காமலே
வெற்றி பெற்றார்!


கவலைகளால் இதயம்
கனக்கும் வேளையில்

பெருமானாரின்
நினைவுக்குளத்தில் நான்
நீராடுவேன்
இதயக் கவலைகள்
எடை இழந்து போகும்!


நடைபயிலும் கால்கள்
எங்கேனும்
நாட்காட்டி ஆனதுண்டோ?
மக்காவிலிருந்து
மதீனாவுக்கு
இவர் நடந்தார்
ஹிஜ்ரீ என்னும்
ஆண்டுக் கணக்கு
ஆரம்பமானது!


இவர்
இறைவனின் துறைமுகம்!
இங்கேதான் திருமறை
இறக்குமதியானது!


இவர்
இறைவனின் துறைமுகம்
இங்கிருந்துதான்
திருமறை
எல்லா நாடுகளுக்கும்
ஏற்றுமதியானது!

 

(நாயகம் ஒரு காவியல் நூலிலிருந்து...)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்