மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

கவிதை

திருமறையின் பக்கம் திரும்புங்கள்!
கவிஞர் கே.எம்.முஹம்மத், 16-30 OCTOBER 2022


 

மறுமைப் பெருவாழ்வில்
மகத்தான வெற்றி பெற
இம்மைதான் தேர்வுக்களம்
ஆனால் இங்கே
குர்ஆன் எனும்
பாடப்புத்தகம்
படிக்கப்படுவதில்லை

"பரக்கத்' எனும் அருள்வளம்
வேண்டி குர்ஆன்
ஓதப்படுகிறது


உதடுகள் உச்சரித்து
ஓதுவதற்கு மட்டுமா
இறைவேதம்?


தகடுகளில் வரைந்து
சுவர்களை அலங்கரிப்பதற்கா
தாஹா நபியின் இதழ்
மொழிந்த வேதம்?


தாயத்துகளில் எழுதி
கழுத்தில் கட்டுவதற்கா
ஆயத்துகள் இறங்கின?


ஒட்டகத்தின் எலும்புகளை
நொறுக்கிடும் சுமையாய்
அருள் பெட்டகமாய்
இறங்கிய வசனங்கள்
இறைக்கட்டளையாய்
வந்தது


சாம்பிராணிப்புகை மணக்க
சிலாகித்து ஓதுவதற்கல்ல

ஆதிக்க சாம்ராஜ்ஜியங்களின்
பகை வீழ்த்தி
சரித்திரம் படைப்பதற்கு


வேத வசனங்களால்
வாழ்வுக்கு உயிரூட்டாமல்
உச்சரிப்பதோடு
நிறுத்திக்கொண்டதால்
ஆதிக்க சக்திகளின்
அச்சுறுத்தலுக்கு
இலக்கானோம்

நாம் "ஹைர உம்மத்'
சிறந்த சமுதாயம் என
அருளப்பட்ட வசனத்தின்
பொருள் விளங்காமல்
துயர உம்மத்தாய்
துவண்டு கிடக்கின்றோம்


அறியாமை இருளில்
வழியறியா மக்களுக்கு
வெளிச்சம் காட்டவந்த
இறைவேதத்தை நமது
இனவேதமாய் மாற்றினோம்


அதனால் சிலர்
வெறுப்பு நெருப்பை மூட்டி
வெளிச்சம் காண்கின்றனர்
நாமோ
விளக்கேற்றத் தெரியாமல்
விளங்காமல் நிற்கின்றோம்

அன்றாட வாழ்வோடு
மன்றாடிக்கொண்டு
அருளாளன் தந்த
மார்க்கத்தைத்
துண்டாடுகிறோம்


அதனால் சோதனையில்
திண்டாடுகிறோம்
வணக்கச் சட்டங்களுக்கு
வளைந்து கொடுக்கின்றோம்
வாழ்க்கைச் சட்டங்களை
வளைத்து விடுகின்றோம்


சுயநலம் பார்த்துச் சிலரோடு
இணங்கிப் போகின்றோம்
சொந்த பந்தங்களோடு
பிணங்கி நிற்கின்றோம்


தொழுகையின் சட்டங்களை
துல்லியமாய் பார்க்கின்றோம்
வணிகச் சட்டங்களை
துச்சமாய் காண்கின்றோம்


புலால் உணவில்
"ஹலாலை' தேடுகின்றோம்
பொருள் தேடலில்
அது சாத்தியமில்லை
என்கின்றோம்


இறைத்தூதரின் முன்மாதிரியை
வழிபாடுகளில்
கொள்கின்றோம்
அறச்செயலிலும்
அரசியலிலும்
ஆதாயங்களைத்
தேடுகின்றோம்


உள்ளத்தில் ஈமான் உண்டு
இல்லத்தில் குர்ஆன் உண்டு
அந்தக் குர்ஆனோடு
தோழமை கொண்டு
ஈமானுக்கு உரமூட்டுவோம்


அதற்கு முன்
குர்ஆனின் பக்கம்
திரும்புவோம்!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்