சொகுசாய் தயாரித்த
பஞ்சு மெத்தைகளில்
உறைந்து கிடக்கிறது
பருத்தி விவசாயிகளின்
பட்டினிச் சாவுகள் /
குழந்தைகளுக்கு
நடை வண்டியாய்
பயணிக்க
வாய்ப்புத் தா
வெட்ட வந்தவனிடம்
வேண்டுகோள்
விடுத்தது
வேப்ப மரம் /
எரிபொருள் பற்றாக்குறை
என்றார்கள்
எப்படி எரிந்தது
கொழும்பு /
ஆவேசமாய்
பாய்ந்துவரும்
கடலலைகள்
தோற்றுவிடுகின்றன
அமைதியாய்
படுத்திருக்கும்
கரைகளிடம் /
ஒரு விடுமுறை நாளின்
மகிழ்ச்சியை
மூழ்கடித்து விடுகிறது
அன்புக்குரிய ஒருவரின்
மரணச் செய்தி /
ஒரு பெண்ணுக்கு
இவ்வளவு திமிரா?
கேள்வியில்
நாற்றமெடுக்கிறது
ஆணாதிக்கம் /
தன்னைக் காட்டி
குழந்தைகளுக்குச்
சோறூட்டவில்லையே
என்ற வருத்தத்தில்
தேய்கிறது நிலா /
அலைகடலில்
குதூகலித்த மீன்கள்
செத்து மிதந்தன
அலைகளையும்
வலைகளையும்
அடையாளம் கண்ட
மீன்களுக்கு
கடைசிவரை
தெரியாமல் போனது
அணுக்கழிவுகளின்
அபாயம் /