"வீட்டுக்கு வீடு வாசல்படி' என்ற சொலவடை எல்லா வீடுகளிலும் பிரச்னைகள் இருப்பதைக் சுட்டிக்காட்டும். வீடு என்று ஒன்றிருந்தால் வாசல்படி இருப்பதைப்போல குடும்பம் என்று ஒன்றிருந்தால் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்தப் பிரச்னைகளை வீட்டிற்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும். அது படி தாண்டக் கூடாது. ஆனால் சில பிரச்னைகள் படியிறங்கி பக்கத்து வீடுகளில் போய் அமர்ந்து கொள்கிறது. இன்னும் சில வீதியிலிறங்கி நிற்கிறது. தீர்க்கப்படாத பிரச்னைகள், உரிய கவனம் பெறாத பிரச்னைகள் நீதிமன்றப் படி வரை சென்று விடுகிறது. எந்த ஒரு பிரச்னையையும் பேச்சுவார்த்தை மூலம் சற்றே அமைதிப்படுத்த முடியும். சில பிரச்னைகள் பேச்சுவார்த்தையில் தீர்வை எட்டிவிடும். குறிப்பாக கணவன் மனைவி பிரச்னைகளை இருவரும் மனம்விட்டுப் பேச வேண்டும். அதிலும் தீரவில்லையெனில் ஒரே வீட்டில் தனித்திருக்கலாம். அதன்பிறகு சமாதனக் குழு அவர்களிடம் சமாதானம் செய்ய முயற்சிக்க வேண்டும். இப்படியான ஒரு அமைப்பு இருந்தால் பல பிரச்னைகளைத் தீர்த்திருக்க முடியும்.
தீர்க்கவியலா பிரச்னைகள் என்று எதுவுமில்லை. இஸ்லாம் பிரச்னைகளுக்கான தீர்வை வழங்குகிறது. ஆனால் அந்தத் தீர்வை நோக்கி நகர்பவர்கள் குறைவு. பிரச்னைகளை ஊதிப்பெருக்குவதற்கு நிறையப்பேர் இருக்கின்றார்கள். ஏதோ ஒரு குடும்பத்தில் நடைபெறும் பிரச்னை என்று ஒதுங்கியிருந்தால் அது வீதி தாண்டி நீதி கேட்டு நீதிமன்றப் படி ஏறும்போதுதான் அது ஒரு சமுதாயப் பிரச்னையாக முன்னெடுக்கப்படுகிறது. அண்மையில் ஒரு சகோதரி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது பிரச்னையைக் கூறி "சட்டத்தை மாற்றுங்கள்' என்று கண்ணீர் மல்கக் கூறினார். உடனே சில அமைப்புகள் அந்தப் பெண்ணைச் சந்தித்து விளக்கம் கேட்டபோது அவர் அறியாமையினால் சொன்னதாகச் சொல்லிவிட்டு ஒரு செய்தியை அழுந்தச் சொன்னார். " எனக்குப் பிரச்னை என்றதும் நான் எல்லாரிடமும் சென்று முறையிட்டேன். எங்கள் ஜமாஅத்திடம் கூட முறை யிட்டேன். எவருமே கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது எல்லோரும் வருகின்றார்கள்' என்றார். முஸ்லிம் சமுதாயத்தின் குடும்பவியல் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளும் அமைப்பு ஒவ்வொரு பகுதியிலும் இருந்தாலே பெரும்பாலான பிரச்னைகள் தீர்வுக்கு வந்துவிடும். எந்த ஒரு நீதிமன்றமும், காவல்துறையும் ஒவ்வொரு வீடாக வந்து கதவைத் தட்டி "உங்கள் வீட்டில் என்ன பிரச்னை' என்று கேட்பதில்லை. நாம்தான் நீதிமன்றக் கதவைத் தட்டுகிறோம். அவர்கள் சமுதாயத்தின் தலையில் கொட்டுகிறார்கள்.
முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் நமது பிரச்னைகளை நாமே தீர்த்துக் கொண்டால் "பொது சிவில் சட்டப் பூச்சாண்டி' பல்லிளித்து நிற்கும். நீதிமன்றமும், காவல்துறையும் இருக்கும்போது பன்மைச் சமூகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாயத்தினர் தங்களுக்குள்ளே பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது சரிதானா? என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றார்கள். ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இதற்கு அனுமதி அளித்திருக்கிறது. சிவில் சட்டங்களை உள்ளூரில் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது. ஆனால் குடும்பவியல் சட்டங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குகள் நிரம்பி வழியும் சூழலில் "வாய்தா'வில் வாழ்க்கையை நடத்திச் செல்லும் இன்றைய நிலையில் இத்தகைய ஷரீஅத் பஞ்சாயத் நீதிமன்றத்தின் சுமையைக் குறைக்கின்றது. இந்த ஷரீஅத் பஞ்சாயத் என்பது கட்டப் பஞ்சாயத்தோ, கட்டாயப் பஞ்சாயத்தோ அல்ல. இதற்கான வழிமுறைகளும், விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் நடைபோட்டால் இதனை வெற்றிகரமாக நடத்த முடியும்.
இதெல்லாம் நடைமுறைச் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு பீஹார் பதிலளிக்கிறது. பீஹாரில் 1930களில் நெருக்கடியான சூழல் நிலவியபோது இறையச்சமிக்க மார்க்க அறிஞர்கள் ஒன்று சேர்ந்து பாட்னாவில் பூல்வாரி செரிஃபில் இமாரத்தே ஷரீஅத் ( ஷரீஅத் பஞ்சாயத்) ஒன்றை நிறுவி நடத்தி வருகின்றனர். இந்த இமாரத்தே ஷரீஅத்தின் வரலாற்றைக் குறித்து மௌலானா முஹம்மத் ஜஃபீருத்தீன் மிஃப்தாஹி நூல் ஒன்றை எழுதியுள்ளார். வரலாற்று ஆவணமாகத் திகழும் இந்த நூலில் இமாரத்தே ஷரீஅத்தின் அமீராக பல்லாண்டு பணியாற்றிய மௌலானா மின்னத்துல்லாஹ் ரஹ்மானி இந்த ஷரீஅத் பஞ்சாயத் குறித்து " முஸ்லிம்கள் தமது வாழ்வின் அனைத்து பிரச்னைகளையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அணுகவும், இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் முயலவேண்டும். இத்தகைய சட்டங்களை ஷரீஅத் பஞ்சாயத் மூலம் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷரீஅத் பஞ்சாயத்தின் தேவை இன்று அதிகரித்துள்ளது. சமுதாயத் தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் இதுகுறித்து அதீத கவனம் செலுத்த வேண்டும். ஷரீஅத் பஞ்சாயத்தின் தேவையையும், அவசியத்தையும் சமரசம் 16 31 அக்டோபர் 1999 ஆம் ஆண்டு முகப்புக் கட்டுரையாக வெளியிட்டது.
18 ஆண்டுகள் உருண்டோடி விட்டபோதும் அது குறித்து நாம் விழிப்பு உணர்வு பெறவில்லை. இப்போதாவது அதுகுறித்து நாம் யோசிக்க வேண்டும். நடைமுறைப்படுத்த முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஷரீஅத் பஞ்சாயத் எப்படி இருக்க வேண்டும்? என்பதையும் சமரசம் தெளிவுபட விவரித்துள்ளது. இந்த இதழின் பரண் உங்களுக்கு மீண்டும் அதனை நினைவூட்டுகிறது.