நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தம்முடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.' மக்கள் வினவினார்கள் : 'இறைத்தூதரே! எந்த மனிதராவது
தன்னுடைய பெற்றோரைத் திட்டுவாரா?'
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஆம். ஒரு மனிதர் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றார். அதற்குப் பதில் தரும் விதத்தில் அவர் இவருடைய தந்தையைத் திட்டுகின்றார். மேலும், இவர் அவருடைய தாயைப் பழிக்கின்றார். அப்போது அவரும் இவருடைய தாயைத் திட்டுகின்றார்.'
அறிவிப்பாளர்: அம்ரு பின் அல்ஆஸ்(ரலி) நூல் : முஸ்லிம்
திட்டுவதில் எவர் முந்திக் கொண்டாரோ அவர் தம்முடைய பெற்றோரைத் திட்டுவதற்கான வாய்ப்பை மற்ற வருக்கு உருவாக்கித் தருகின்றார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் திட்டியது அந்த இரண்டாமவர் அல்லர்; இவரே தம்முடைய பெற்றோரைத் திட்டியவர் ஆகின்றார்.
உண்மை என்னவெனில் எந்தவொரு வேலை நடப்பதற்கும் காரணமாக அமைகின்றவரே அவலநிலைக்குப் பொறுப்பாகின்றார். ஓர் அவைக்குச் சென்றால் அவல நிலைக்கு ஆளாவது உறுதி எனில் அந்த அவைக்குச் செல்வதைத் தவிர்ப்பது கட்டாயமாகும். திருடுவதையும் கொள்ளை அடிப்பதையும் தொழிலாகக் கொண்டவரிடம் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தை வழங்குவது எந்த வகையில் சரியாகும்?
- நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா