மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

முழுமை

மரணமும் மறுவாழ்வும்
மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான், Aug 16 - 31 2023


Quran Inner Image.

 

மேலும், 'நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?' என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள்.  20

அத்தியாயம் 32 அஸ்ஸஜ்தா• திருவசனம்: 10

தஃப்ஹீமுல் குர்ஆன் • மௌலானா மௌதூதி (ரஹ்) • தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

 

20. முந்தைய வாசகத்துக்கும் இந்த வாசகத்துக்கும் இடையில் நீண்டதொரு காவியமே உள்ளது. அது சொல்லப்படாமல் வாசகரின் கற்பனைக்கு விட்டு விடப்பட்டிருக்கின்றது. முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இறைமறுப்பாளர்களின் ஆட்சேபம் எந்த அளவுக்கு அபத்தமானதாக, அர்த்தமற்றதாக இருந்ததெனில் அதனை மறுத்துரைப்பதற்கான அவசியமே உணரப்படவில்லை. அதனை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை பதிவு செய்து விடுவதே அதன் அபத்தத்தை வெளிப்படுத்துவதற்குப் போதுமானதாகக் கருதப்பட்டுள்ளது.

ஏனெனில் அவர்களின் ஆட்சேபம் எந்த இரண்டு கூறுகளை உள்ளடக்கி இருந்ததோ அந்த இரண்டுமே முழுக்க முழுக்க அறிவுக்குப் பொருத்தமற்றவையாய் இருந்தன.

'நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு' என்கிற அவர்களின் கூற்றுக்கு என்னதான் பொருள்? 'நாம்' என இங்குக் குறிப்பிடப்படுகின்ற பொருள் எந்தச் சந்தர்ப்பத்தில் மண்ணோடு மண்ணாய்க் கலக்கின்றது? எந்த உடலிலிருந்து இந்த 'நாம்' வெளியேறி விடுகின்றதோ அந்த உடல்தானே மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிடுகின்றது. கலந்து, கரைந்து விடுகின்ற அந்த உடலுக்குப் பெயர் 'நாம்' இல்லையே. மனித வாழ்வின் பல்வேறு கட்டங்களில் இந்த உடலின் உறுப்புகள் அறுக்கப்படுகின்ற போது மேல் உறுப்புகள் தாம் அறுக்கப்படுகின்றனவே தவிர, அந்த 'நாம்' அறுபடாமல் முழுமையானதாய் நீடிக்கத்தானே செய்கின்றது.

அந்த 'நாமின்' எந்தவொரு பகுதியும் அறுபட்ட உறுப்போடு வெளியேறுவதில்லை. மேலும் இந்த 'நாம்' ஒருவரின் உடலிலிருந்து வெளியேறி விடுகின்ற போது ஒட்டுமொத்த உடலும் அங்கேயே இருந்தாலும் அந்த உடலின்மீது அந்த 'நாமின்' இம்மியளவு சுவடு கூட இருப்பதில்லையே. இதனால்தான் ஒரு காதலன் தான் உயிரினும் மேலாக நேசித்த காதலி மரணிக்கின்ற போது அவளுடைய சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிடுகின்றான்.

ஏனெனில் அவனுடைய காதலி அந்த உடலிலிருந்து வெளியேறி விட்டாள். மேலும் அவன் தன்னுடைய காதலியை அடக்கம் செய்வதில்லை. மாறாக தன்னுடைய காதலி தங்கி யிருந்த அவளுடைய வெற்று உடலைத்தான் அடக்கம் செய்கின்றான். ஆக, இந்த இறை மறுப்பாளர்களின் முதல் வாதமே எந்தவிதமான அடிப்படையும் இல்லாததாகும்.

'அதன் பிறகு நாம் மீண்டும் புதி தாகப் படைக்கப்படுவோமா? என்கிற அவர்களின் அந்த ஆட்சேபத்தின் இரண்டாவது பகுதியைப் பொறுத்தவரை, இந்த ஆட்சேபத்தைக் கிளப்புகின்ற பேர்வழிகள் சற்றே அந்த 'நாம்'-ஐயும், அந்த 'நாம்' படைக்கப்பட்டார்கள் என்பதன் பொருளையும் ஒரே ஒரு நிமிடம் சற்றே ஆய்ந்து பார்த்திருப்பார்களேயானால் அவர்களின் இந்தக் கேள்விக்கும் வியப்புக்கும் சற்றும் இடம் இல்லாமல் போயிருக்கும்.

இந்த 'நாம்'-இன் தற்போதைய பிறப்பே எப்படி நிகழ்ந்தது ? ஓரிடத்திலிருந்து கொஞ்சம் கரியையும், வேறொரிடத்திலிருந்து கொஞ்சம் இரும்பையும், இன்னோர் இடத்திலிருந்து கொஞ்சம் சுண்ணாம்பையும் மேலும் இவ்வாறு மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மற்றெல்லா உட்கூறுகளையும் ஒன்று திரட்டி, அந்த மண்ணாலான உடலுக்குள் இந்த 'நாம்' போய் குடியேறி விடுகின்ற போது நடந்ததுதானே அதன் தற்போதைய பிறப்பு! இதற்கு இதனைத் தவிர வேறு என்ன விளக்கம் தர முடியும்?

அடுத்து, இந்த 'நாம்'-இன் மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கின்றது? அந்த மண்ணாலான உடலிலிருந்த 'நாம்' வெளியேறிய உடனே அது குடியிருந்த வீட்டைக் கட்டுவதற்காகத் தரையிலிருந்து திரட்டப்பட்ட மண்ணின் வெவ்வேறு உட்கூறுகள் அனைத்துமே மீண்டும் அதே மண்ணிற்குத் திரும்பிச் சென்றுவிடுகின்றன.

இந்த ‘நாம்'-க்காக முதலில் வீடு ஒன்றை எவன் கட்டிக் கொடுத்தானோ அவனால் மறுபடியும் அதே மூலப்பொருள்களைக் கொண்டு அது குடியிருப்பதற்கான மற்றோர் வீட்டைப் புதிதாகக் கட்டிக் கொடுத்து அதில் அந்த 'நாம்'-ஐ மறுபடியும் குடியமர்த்த முடியாதா என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி.

இவ்வாறு நடப்பது இதற்கு முன்பு சாத்தியமாக இருந்தது; உண்மையில் நடை முறை வாழ்வில் நடக்கவும் செய்ததெனில், மறுபடியும் அப்படி நடப்பது சாத்தியமாவதையும் உண்மையிலேயே நடந்தேறுவதையும் எதனால்தான் தடுக்க முடியும்? எதுதான் அதற்குத் தடையாக முடியும்? சிறிதளவு அறிவுத்திறனைக் கொண்டவராலும் எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்கதாய் இந்த விவரங்கள் அனைத்தும் இருக்கின்றன.

இந்த நிலையில் இவர்கள் ஏன் இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்ப்பதற்குத் தங்களின் அறிவுத் திறனைப் பயன்படுத்து வதில்லை? கொஞ்சங்கூட யோசிக்காமல் சிந்தித்துப் பார்க்காமல் மரணத்துக்குப் பிந்தைய வாழ்வையும் மறுமையையும் மறுத்து இப்படி அபத்தமான ஆட்சேபங்களை இவர்கள் எழுப்புவதன் காரணம்தான் என்ன? நடுவில் இருக்கின்ற இந்த விவாதங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அவர்களின் இந்தக் கேள்விக்கு வல்லோன் அல்லாஹ் தன்னுடைய இரண்டாவது வாசகத்தில் இதே கேள்விக்கான பதிலை அளிக்கின்றான்: 'உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப் பவர்களாய் இருக்கின்றார்கள்'.

அதாவது மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம் என்பது விந்தையான தாய், சாத்தியமே இல்லாததாய், தம்மால் புரிந்துகொள்ளவே முடியாததாய் இருப்பது அசல் விஷயம் அல்ல. அதற்கு மாறாக இந்த உலகத்தில் சுதந்திரமாக மனம் போன போக்கில் பாவச் செயல்களில் உழன்று வாழ்ந்து அனுபவிக்கின்ற சுதந்திரம் வேண் டும்; அதன் பிறகு இங்கிருந்து கிளம்பினாலும் யாராலும் எதற்காகவும் கேள்வி கணக்குக்கு ஆளாகாத நிலையில் (Scot - free) இங்கிருந்து வெளியேறி விடவேண்டும்; என்ன, ஏது, ஏன் என்கிற எந்த விசாரணைக்கும் ஆளாகக் கூடாது; இங்கே நாம் செய்தவை அனைத்துக் கும் எந்தவிதமான கணக்குவழக்கையும் எவருக்கும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது' என்கிற ஆசைதான் அவர்களை அந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள விடாமல் தடுக்கின்றது.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்