நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மறுமை நாளில் நம்பிக்கையாளனின் தராசில் வைக்கப்படுகின்றவற்றில் மிக அதிகமான எடை கொண்டது நன்னடத்தையாகத்தான் இருக்கும்.1 மேலும் மானக்கேடான விஷயங்களைப் பேசுகின்ற, வெட்கங் கெட்டவற்றைக் கதைக்கின்ற மனிதனை அல்லாஹ் வெறுக்கின்றான்; பகை கொள்கின்றான்.2
அறிவிப்பாளர்:. அபூதர்தா(ரலி) நூல்: திர்மிதி, அபூதாவூத்
1. மனிதனிடம் விரும்பப்படுகின்ற பண்புகளிலேயே அசலானதும், அடிப்படையானதும் நன்னடத்தைதான். மற்றவை அனைத்துமே அதனோடு தொடர்பு டையவை தாம். நன்னடத்தை எந்த அளவுக்குப் பரந்துவிரிந்தது, வானளாவியது என்பதையும் அதன் பெரும் பரப்பையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
2.இங்கே நபி(ஸல்) அவர்கள் எடுத்துக்காட்டு ஒன்றைக் கொண்டு ஒரு மனிதனிடம் நன்னடத்தை இல்லாமல் போகும் போது அவன் எப்படிப்பட்ட மோசமான கதிக்கு ஆளாகின்றான் என்பதையும் அத்தகைய மனிதனின் வாய்ப்புக் கேடுகளும் போதாமைகளும் விழிப்பு உணர்வு, நல்லியல்பு கொண்ட மனிதர்களை எந்த அளவுக்குக் குலைநடுங்கச் செய்துவிடக் கூடியவையாய் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
ஒரு மனிதனிடம் நன்னடத்தை இல்லாமல் போகின்ற போது அவன் மானக்கேடான விஷயங்களைப் பேசுபவனாக, வெட்கங்கெட்டவற்றைக் கதைக்கின்றவனாக இருப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவனுடைய வண்டவாளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அவனைத் தொற்றிக் கொள்கின்ற அருவருப்பான, கேவலமான குணங்கள் இந்த நபிமொழியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இந்த இரண்டு கேடுகளோடு முற்றுப் பெறுவதில்லை.
அப்படிப்பட்ட மனிதனை என்னென்ன கேடுகளெல்லாம் தொற்றிக் கொள்ளும் என்பதை உணர்த்துவதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இங்கு நினைத்துப் பார்த்தாலே குமட்டுகின்ற, அருவருப்பான, கேவலமான நடத்தையின் வெளிப்பாடுகளாக எல்லோராலும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளத்தக்க இந்த இரண்டு கேடுகளை மட்டும் நபி(ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா