(விடை பகரப்படும்:) ‘நாம் நாடியிருந்தால் தொடக்கத்-திலேயே ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியைக் காட்டி இருப்போம்.23 ஆயினும், ‘ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரைக் கொண்டும் நான் நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறியிருந்த என்னுடைய வாக்கு நிறைவேறிவிட்டது!24
அத்தியாயம் 32 அஸ்ஸஜ்தா - திருவசனம் : 13
23. இப்படி யதார்த்தத்தைப் பற்றிய பேருண்மையை நேரடியாகக் கண்டுணர வைத்தும் பார்த்து அனுபவிக்கச் செய்தும் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுதலை வழங்குவது நம்முடைய நோக்கமாக இருந்திருக்குமேயானால் உலக வாழ்வில் இத்துணை பெரும் தேர்வுக்குள் உம்மை ஈடுபடுத்திய பிறகு இங்கு உம்மைக் கொண்டு வருவதற்கான தேவை இருந்திருக்காதே! இப்படிப்பட்ட வழிகாட்டுதலைத் தருவதுதான் நம்முடைய நோக்கமாக இருந்திருந்தால் முதல் நாளிலேயே உங்களுக்கு இதனைத் தந்திருப்போமே.
ஆனால் இந்த முறையில் வழிகாட்டுவது தொடக்கத்திலிருந்தே நம்முடைய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. யதார்த்தத்தைப் பற்றிய பேருண்மையை உங்களால் நேரடியாகப் பார்த்துணர முடியாத அளவுக்கும், உங்களின் உணர்வுகளால் உணர்ந்துகொள்ள இயலாத அளவுக்கும் மறைவாகவே வைத்திருந்து உங்களைச் சோதிப்பதுதான் நம்முடைய நாட்டமாக இருந்தது. அவற்றின் மீதான திரையை விலக்கி அவற்றை நேரடியாகக் கண்டுணர்வதற்குப் பதிலாக இந்தப் பேரண்டத்திலும் திரும்பும் திசையெங்கும் உங்களின் உடல் அமைப்பிலும் அந்தப் பேருண்மை தொடர்பான சான்றுகளையும் அடையாளங்களையும் பார்த்து உம்முடைய அறிவுத்திறனைக் கொண்டு அவற்றை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்களா? இல்லையா? என்பதுதான் சோதனையே.
மேலும் நாம் நம்முடைய இறைத்தூதர்கள் மூலமாகவும் இறைவேதங்களைக் கொண்டும் இந்தப் பேருண்மையை அடையாளம் காண்பதில் உங்களுக்கு உதவுகின்ற போது நீங்கள் அந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றீர்களா இல்லையா என்பதுதான் சோதனையே. மேலும் இந்தப் பேருண்மையை நல்ல முறையில் அறிந்து உணர்ந்துகொண்ட பிறகு நீங்கள் உங்களின் மன இச்சைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றீர்களா, மன இச்சைகளின் இழுப்புகளுக்கும் ஆசைகளின் அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் அவற்றிலிருந்து விடுபட்டவர்களாய் இந்தப் பேருண்மையை ஏற்றுக்கொள்கின்றீர்களா, இது முன் வைக்கின்ற வாழ்க்கைத் திட்டத்தின் படி உங்களின் அன்றாட வாழ்வையும் நடப்புகளையும் மாற்றி அமைத்துக் கொள்கின்றீர்களா என்பதுதான் சோதனையே.
இந்தச் சோதனையில் நீங்கள் தோற்றுப் போய் நிற்கின்றீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை ஒன்றன்பின் ஒன்றாக உங்களை அதே சோதனைகளுக்கு ஆட்படுத்துவதால் என்ன பயன்? அது மட்டுமின்றி நீங்கள் இப்போது இங்கே எல்லாவற்றையும் பார்த்தும் அறிந்தும் உணர்ந்தும் இருக்கின்ற நிலையில் தாம் பார்த்தவற்றைப் பற்றிய நினைவுகள் எல்லாம் உங்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற நிலையில் உங்களைச் சோதிப்பது எந்த வகையிலும் சோதனையாகாதே. மேலும் இங்கே நீங்கள் பார்த்தவற்றைப் பற்றிய நினைவுகளையெல்லாம் முற்றாகத் துடைத் தழித்துவிட்டு யதார்த்தத்தைப் பற்றிய பேருண்மையை மறுபடியும் உங்களால் நேரடியாகப் பார்த்துணர முடியாத அளவுக்கும், உங்களின் உணர்வுகளால் உணர்ந்துகொள்ள இயலாத அளவுக்கும் மறைவாகவே வைத்திருந்து உங்களை மீண்டுமொரு முறை சோதனைக்கு ஆட்படுத்தினால் அதன் முடிவு முந்தைய சோதனையின் முடிவைக் காட்டிலும் மாறுபட்டதாய் இருப்பதற்கான சாத்தியமும் இல்லையே. (கூடுதல் விளக்கங்களுக்குப் பார்க்க; 2:210; 6:7-9; 6:27-28; 6:158; 10:19; 23:99-100)
24. ஆதம்(அலை) அவர்களைப் படைக்கின்ற சந்தர்ப்பத்தில் இப்லீஸை நோக்கி மாண்பும் வல்லமையும் நிறைந்த அல்லாஹ் அருளிய கூற்று குறித்துத்தான் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றது. 38-ஆவது அத்தியாயத்தின் 69 முதல் 88 வரையிலான வசனங்களில் அந்தச் சந்தர்ப்பத்தில் நடந்தவை பற்றிய முழுமையான விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஆதம்(அலை) அவர்களுக்கு முன்னால் சிரம் பணிய இப்லீஸ் மறுத்துவிட்டான்.
மேலும் ஆதம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களை வழிகெடுப்பதற்காக மறுமை நாள் வரையிலான அவகாசத்தைக் கேட்டான். அவனுக்குப் பதில் தருகின்ற போது இறைவன் கூறினான்: ‘அவ்வாறாயின், உண்மை இதுதான்: உண்மையைத்தான் நான் கூறுகின்றேன். உன்னைக் கொண்டும் மனிதர்களில் யார் யார் உன்னைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அனைவரைக் கொண்டும் நான் நிச்சயம் நரகத்தை நிரப்புவேன்’.
(38 : 84-85)
அஜ்மயீன் என்கிற சொல் இங்கு மனிதர்களும் ஜின்களும் ஆகிய அனைவரும் நரகத்தில் வீசப்படுவார்கள் எனும் பொருளில் ஆளப்படவில்லை. அதற்கு மாறாக, சைத்தான்களும், அந்த சைத்தான்களைப் பின்பற்றி நடக்கின்ற மனிதர்களும் ஒருசேர நரகத்தில் வீசப்படுவார்கள் என்கிற பொருளில்தான் இங்கு அந்தச் சொல் ஆளப்பட்டுள்ளது. (தொடரும்)
தஃப்ஹீமுல் குர்ஆன் - மௌலானா மௌதூதி (ரஹ்) - தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்