நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மூன்று நாள்களுக்கும் மேலாக தன்னுடைய சகோதரனைச் சந்திப் பதையும் அவனுடன் பழகுவதையும் துறப்பதற்கு எந்தவொரு மனிதருக்கும் அனுமதி இல்லை. மேலும் அவர்களில் ஒருவர் மற்றவருக்கு முன்னால் செல்ல நேர்கின்ற போது ஒருவர் தம்முடைய முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, இரண்டாமவரும் தம்முடைய முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கின்ற அளவுக்கு நிலைமை இருக்கலாகாது.1 அவர்களிருவரில் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர்தான் சிறந்தவர்.’2
அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அன்சாரி(ரலி)
நூல் : முஸ்லிம்
1. மனிதனின் இயல்பிலேயே ரோஷம், கோபம், வைராக்கியம், துவேஷம் ஆகிய உணர்வுகள் பதிந்துள்ளன. இவை எப்படிப்பட்ட சூழலிலும் தம்முடைய தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. இதனால் மூன்று நாள்கள் வரை என்கிற கால அவகாசம் சலுகையாகத் தரப்பட்டிருக்கின்றது. இது ரோஷமும் கோபமும் உந்தித் தள்ள உறவை உதறிவிடுகின்ற அளவுக்குச் செல்கின்ற மனிதனுக்குத் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த உதவும். அல்லது குறைந்தபட்சம் இந்தக் கால இடைவெளியில் தன்னுடைய சகோதரர் மீதான அதிருப்தியும் ஆத்திரமும் தணிந்து சமாதானமாகி இணங்கிப் போவதற்கான சாத்தியங்கள் உருவாவதற்கும் இந்தக் கால அவகாசம் உதவும்.
அதே சமயம் சந்திப்பதால் ஏதேனுமோர் மிகப் பெரும் கேடோ குழப்பமோ விளைவதற்கான ஆபத்து இருக்கிற சூழல், மகத்தான மார்க்க நலன்களை முன்வைத்து விலகி இருந்தாக வேண்டிய கட்டாயத்தின் போதும் சந்திக்காமல் விலகி இருப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்று அறிஞர்கள் கருத்துரைத்துள்ளார்கள்.
2. ‘ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர் கர்வம், ஆணவம் போன்றவற்றிலிருந்து தூய்மையானவராக இருக்கின்றார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர், இவ்வாறாகக் கோபத்தையும் அதிருப்தியையும் அகற்றுவதற்காகச் சமாதானம் செய்து கொள்வதற்காக முன்வருபவரும் தம்முடைய செயலால் பரந்த உள்ளத்தைக் கொண்டிருப்பதை நிறுவுகின்றார். பரந்து விரிந்ததாய், விசாலமானதாய் இருக்கின்ற உள்ளத்திலும் இதயத்திலும் ஆணவத்துக்கும் கர்வத்துக்கும் இடம் இருப்பதில்லை.
மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் - தமிழில்: அபூ ஹானியா