மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

எதுவும் உங்களுக்குப் புலப்படவில்லையா?
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 1 - 15 டிசம்பர் 2023


எதுவும் உங்களுக்குப் புலப்படவில்லையா?

(இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்) தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த விஷயங்களில் திண்ணமாக உம் இறைவனே மறுமைநாளில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.38

இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்ற எத்தனையோ பல சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம் (எனும் வரலாற்று நிகழ்ச்சியில்) இவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் கிடைக்கவில்லையா, என்ன? அவர்கள் வசித்த அதே இடங்களில் இன்று இவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்!39 திண்ணமாக, இவற்றில் பெரும் சான்றுகள் உள்ளன. என்ன, இவர்கள் செவியுறுவதில்லையா?

மேலும், இவர்கள் (இக்காட்சியை ஒருபோதும்) பார்க்கவில்லையா, என்ன? வறண்டுபோன தரிசு பூமியின் பக்கமாக நாம் நீரை ஒலித்தோடச் செய்கின்றோம். அதே பூமியிலிருந்து பயிர்களை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களுடைய கால்நடைகளுக்கும் தீனி கிடைக்கின்றது; இவர்களும் உண்ணுகின்றார்கள்! இவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லையா, என்ன?40

மேலும், இந்த மக்கள் கேட்கின்றனர்: ‘இந்தத் தீர்ப்பு எப்போது ஏற்படும்? நீங்கள் உண்மை கூறுபவர்களாயிருந்தால்!’41 இவர்களிடம் நீர் கூறும்: ‘தீர்ப்பு நாளன்று நம்பிக்கை கொள்வது, நிராகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது. மேலும், அவர்களுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்கப்படாது!’42 எனவே, இவர்கள் போக்கிலேயே இவர்களை விட்டுவிடும்; மேலும், எதிர்பார்த்திரும்; இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும்!

அத்தியாயம் 32 அஸ்ஸஜ்தா · திருவசனங்கள் : 25 - 30

தஃப்ஹீமுல் குர்ஆன் · மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

38. பனூ இஸ்ராயீல்கள் மத்தியில், அவர்கள் ஈமானிய செல்வத்தைப் பறி கொடுத்துவிட்டதாலும், நேர்வழியில் நின்ற நல்லடியார்களின் தலைமையைப் பின்பற்றி நடப்பதிலிருந்து விலகிச் சென்றதாலும், அற்ப உலக இலாபங்களின் மோகத்தில் வீழ்ந்து விட்டதாலும் உருவாகியிருந்த கருத்து வேறுபாடுகள், பிளவுகள், பிரிவுகள் குறித்தும் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் விளைவாக அவர்கள் எந்தக் கதிக்கு ஆளானார்கள் என்பதன் ஒரு பரிமாணத்தை உலகம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இரண்டாவது பரிமாணம் உலகம் அறியாத ஒன்று. அது மறுமை நாளன்று வெளிப்படும்.

39. வரலாற்றின் இந்தத் தொடர் அனுபவத்திலிருந்து இம்மக்கள் எந்தப் பாடமும் பெறவில்லை. எந்தவொரு சமூகத்திடமும் இறைவனின் தூதர் வருகின்றபோது, அந்த சமூகத்தின் விதியைப் பற்றிய தீர்மானம்; அந்த சமூகம் தம்மிடம் வந்த தூதருடன் நடந்துகொள்கின்ற விதத்தோடு பிணைந்திருக்கும். இறைத்தூதரை நிராகரித்துவிட்ட பிறகு எந்தவொரு சமூகமும் தப்பிக்கவே முடியாது. அவர்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் தான் அதிலிருந்து தப்பித்திருக்கின்றார்கள். நிராகரிப்பாளர்கள் உலகம் உள்ளவரை படிப்பினைக்குஉரியவர்களாக ஆகித் தேங்கிவிடுகின்றார்கள்.

40. இதற்கு முந்தைய வசனங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது பொதுவாக திருக்குர்ஆனில் விவரிக்கப்படுவதைப்போன்று மரணத்துக்குப் பிந்தைய வாழ்வை நிறுவுவதற்காக இங்கு இந்த விவரம் சொல்லப்படவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக உணரலாம். அதற்கு மாறாக இந்த உரைத் தொடரில் இந்த விவரம் வேறொரு நோக்கத்துக்காகத்தான் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் சொல்லப் போனால் ‘காய்ந்து, வறண்டு கிடக்கின்ற இந்த நிலமும் ஒருநாள் பசுமையாகப் பூத்துக் குலுங்குகின்ற செழிப்பான நிலமாக மாறும் என்று கற்பனை செய்தும் பார்க்க முடியாத அளவுக்கு வறண்டு கிடக்கின்ற நிலம் இறைவன் பொழியச் செய்கின்ற ஒற்றை மழை அதனை அடியோடு, முற்றாக மாற்றிவிடுகிறது. அதுபோல தற்போது இஸ்லாத்தின் அழைப்பும் ஒன்றும் தேறாத விஷயமாகவே தோன்றலாம்; ஆனால் அல்லாஹ்வின் பேராற்றலின் ஒரே ஓர் அற்புத வீச்சு இதனை எந்த அளவுக்கு செழித்தோங்கச் செய்து விடுமெனில், நீங்கள் அதனைப் பார்த்து விக்கித்துப்போய் நின்றுவிடுவீர்கள்’ என்கிற நுட்பமான சமிக்ஞை இதில் பதிந்திருக்கின்றது.

41. அல்லாஹ்வின் உதவி எப்போதுதான் வரப்போகின்றது? எங்களைப் போன்ற இறைமறுப்பாளர்கள் மீது அவனுடைய தண்டனையும் வேதனையும் சூழ்ந்துகொள்ளும் எனில், அந்த நாள் எப்போதுதான் வரும், சொல்லுங்களேன்! எங்கள் மீதான தீர்ப்பு எப்போதுதான் வரும்?

42. எப்போது வரும், எப்போது வரும் என நீங்கள் பதறுகின்ற அளவுக்கான விஷயமா அது? இறைவனின் தண்டனையும் வேதனையும் இறங்கி விட்டதெனில் அதன் பிறகு தம்மைச் சீர் செய்துகொள்வதற்கான அவகாசம் இம்மியளவுகூட கிடைக்காது.

அந்த வேதனை வந்து உங்களைச் சூழ்ந்து கொள்வதற்கு முன்னால் உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கின்ற இந்த அவகாசத்தைத் தவறவிடக் கூடாத நற்பேறாகக் கருதுங்கள். வேதனை கண் முன்னால் இறங்கிவிட்ட பிறகு இறைவன் மீது நம்பிக்கை கொண்டீர்களெனில் அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

 

(இந்த அத்தியாயம் நிறைவுற்றது)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்