நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஹலால் எது என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. ஹராம் எது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. இந்த இரண்டுக்குமிடையே ஐயத்திற்குரிய பொருள்களும் இருக்கின்றன. எவர் ஐயத்திற்குரிய பொருள்களை விட்டுத் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றாரோ அவர் தம்முடைய மார்க்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாத்துக் கொண்டவராகின்றார். எவர் ஐயத்திற்குரிய பொருள்களின் மீது மோகம் கொண்டு அவற்றில் மூழ்கி விடுகின்றாரோ அவர் ஹராமில் விழுந்தே தீருவார். தடை செய்யப்பட்ட புல்வெளியின் எல்லைக்கருகே ஆட்டிடையர் தன்னுடைய பிராணிகளை மேய விடுகின்ற போது. அந்தப் பிராணிகள் எந்த நேரத்திலும் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்துவிடலாம் என்கிற ஆபத்து இருப்பதைப் போன்றது தான் (ஐயத்துக்குரிய பொருள்களை விரும்புகின்ற மனிதனின் நிலையும்).
எச்சரிக்கை! மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பிறர் மேய்வதற்குத் தடை செய்யப்பட்ட புல்வெளிகள் இருக்கத்தான் செய்யும். எச்சரிக்கை! இறைவனின் மஹாரிம் (அவனால் ஹராம் ஆக்கப்பட்ட பொருள்கள்) அவனுடைய தடை செய்யப்பட்ட புல்வெளி ஆகும். இதனையும் கேட்டுக்கொள்ளுங்கள். மனிதனின் உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கின்றது. அது சரியாக இருக்கின்ற வரை ஒட்டுமொத்த உடலும் நல்ல நிலையில் இருக்கும். அது சீர்கெடும்போது ஒட்டுமொத்த உடலிலும் சீர்கேடு வந்துவிடும். நினைவில் கொள்ளுங்கள்! அந்த (சதைத் துண்டு) இதயம் ஆகும் ’.
அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்
ஹலாலானவை எவை, ஹராமானவை எவை என்பதை ஷரீஅத்தில் மிக மிகத் தெளிவாக, தீர்க்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தானதர்மங்கள் செய்வது, திருமணம் செய்துகொள்வது ஆகியவை அனுமதிக்கப்பட்டவை - ஹலாலானவை என்பதை அனைவரும் அறிவர். இதேபோன்று மது அருந்துதல், திருடுதல், தகாத உறவில் ஈடுபடுதல், பொய் சொல்லுதல் ஆகியவை தடுக்கப்பட்டவை - ஹராமானவை என்பதையும் அறிவர்.
ஆனால் ஹலாலானது அல்லது ஹராமானது என்பது தீர்க்கமாக அறிவிக்கப்படாத சில விஷயங்களும் வாழ்வில் எதிர்ப்படலாம். இதனால் அவற்றை ஹலாலானது என எடுத்துக்கொள்வதா, ஹராமானது என ஒதுக்கித் தள்ளுவதா என்கிற குழப்பம் வரலாம். ஐயம் மனதைத் தைக்கலாம். அவற்றைக் குறித்து திட்டவட்டமான, தீர்க்கமானதோர் முடிவுக்கு வருவது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். இதனால்தான் பெரும்பாலான சமயங்களில் மக்கள் இவற்றின் உண்மை நிலையைக் குறித்து எதுவும் தெரியாதவர்களாய் இருக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப்போனால் சில விஷயங்கள் குறித்து மார்க்க அறிஞர்கள் திட்டவட்டமான முடிவுக்கு வர முடியாமல் ஐயத்தில் இருக்கின்றார்கள். இதுபோன்ற விஷயங்கள் எதிர்ப்படும்போது மிகுந்த விழிப்புடன் அவற்றைத் தவிர்த்து விடுவது தான் அறிவார்ந்த செயல்.
ஐயத்திற்குரிய பொருள்களில் உழல்வது தடை செய்யப்பட்ட புல்வெளியின் கடைக்கோடி எல்லை வரை தனது கால்நடைகளை மேய விடுவதற்கு ஒப்பாகும் என இங்கு உவமானமாகச் சொல்லப்பட்டுள்ளது. தன்னுடைய ஆடுகளைத் தடை செய்யப்பட்ட புல்வெளியை விட்டு வெகு தொலைவில் மேய விடுபவன் தான் அறிவார்ந்த, விழிப்பு உணர்வு மிக்க இடையன் ஆவான். இதனால் தன்னுடைய ஆடுகள் திடீரென்று தடை செய்யப்பட்ட புல்வெளிகளுக்குள் நுழைந்துவிடுகின்ற ஆபத்திலிருந்து அவன் தப்பிவிடுகின்றான்.
ஐயத்திற்குரிய பொருளின் கீழ் ஐயத்திற்குரிய வருமான வழியில் ஈட்டப்பட்ட பணமும் அடங்கும். அதனை விட்டு அறவே விலகி இருப்பதும் அதனைத் தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் கைகழுவி விடுவதும் தான் சரி.
நபிமொழியின் இறுதிப் பகுதியில் இதயத்தின் நலன் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்குமேயானால் இறைமறுப்பு, பேராசை, பணமோகம் போன்ற நோய்கள் அதனைத் தொற்றியிருக்குமேயானால், அதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன் அவனது ஆளுமையும் இருப்பும் அவனுடைய முழு வாழ்வும் பாதிக்கப்படும்.
அந்தச் சீர்கேடு இதயத்தைப் பாதிப்ப தோடு நின்றுவிடாது. எனவே ஒவ்வொரு மனிதரும் தத்தமது இதயத்தின் தூய்மையைக் குறித்தும், அதன் நலன் குறித்தும் அதிகக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
மன இச்சைகளுக்கு அடிமையாகின்ற நிலையிலிருந்து அதனைப் பாதுகாப்பதும் அவசியம். ஐயத்துக்குரிய விஷயங்களை மோகம் கொள்வதிலிருந்தும் அதனைப் பாதுகாப்பதும் அவசியம். மனிதனின் உடலின் ஒவ்வொரு உறுப்புகள் மூலமாகவும் நல்ல செயல்கள் நடந்தேறுவதற்கு அவனுடைய இதயம் அனைத்து வகையான கேடுகளிலிருந்தும் அப்பாற்பட்டதாய் இருப்பது அவசியம். ‘ஹலால் எது என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. ஹராம் எது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.’
என்கிற இந்த நபிமொழிக்கு உலமா பெருமக்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள். இதேபோன்று இன்னும் இரண்டு நபிமொழிகளுக்கு மார்க்கத்திலும் ஷரீஅத்திலும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 1) ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே கருத்தில் கொள்ளப்படும்’ (புகாரி) 2) ‘பயனில்லாதவற்றைத் தவிர்த்து அவற்றைக் கைவிடுவது தான் மனிதனுடைய இஸ்லாத்தின் நல்ல அம்சமாகும்’.
(பைஹகி, மாலிக், அஹ்மத், இப்னு மாஜா, திர்மிதி)