மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அத்தியாயம் 33 அல்அஹ்ஸாப் - முன்னுரை
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 1 - 15 ஜனவரி 2024


அத்தியாயம் 33 அல்அஹ்ஸாப் - முன்னுரை

 

கடந்த இதழ் தொடர்ச்சி

அதன் பிறகு பனூ நஜீர் கோத்திரத்தாரின் முறை வந்தது. நபிகளாரைக் கொல்வதற்காக அவர்கள் சூழ்ச்சி செய்த அதே நாளில் அவர்களின் அந்த இரகசியம் அம்பலமாகிவிட நபி(ஸல்) அந்தக் கோத்திரத்தாரை பத்து நாள்களுக்குள் வெளியேறிவிடுங்கள்; இல்லையேல் அதன் பிறகு உங்களில் எவர் இங்கு காணப்பட்டாலும் அவர் கொல்லப்படுவார் என்று பத்து நாள்கள் அவகாசம் கொடுத்து எச்சரித்துவிட்டார்கள்.

மதீனத்து நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை அவர்களிடம் ‘உறுதியாக இங்கேயே நிலைத்து இருங்கள். மதீனாவை விட்டு வெளியேறாதீர். நான் இரண்டாயிரம் பேருடன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன். பனூ குறைளா கோத்திரத்தாரும் உங்களுக்கு உதவுவார்கள். மேலும் நஜத் பகுதியிலிருந்து பனூ அத்ஃபான் கோத்திரத்தாரும் உங்களின் உதவிக்காக ஓடோடி வருவார்கள்’ என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைச் சொல்லி போக விடாமல் தடுத்தான். அவனுடைய பேச்சில் மயங்கிய பனூ நஜீர் கோத்திரத்தார், ‘நாங்கள் எங்களுடைய இடங்களை விட்டுச் செல்வதாக இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று நபிகளாருக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

பத்து நாள்கள் அவகாசம் முடிந்த கணத்திலேயே நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோத்திரத்தாரை முற்றுகையிட்டார்கள். மேலும் பனூ நஜீர் கோத்திரத்தாருக்கு ஆதரவாகக் களம் இறங்குவதற்கு அவர்களின் ஆதரவாளர்களில் எவருக்குமே தைரியம் இருக்கவில்லை. இறுதியில் ஒவ்வொரு மூன்று பேருக்கும் ஓர் ஒட்டகம் என்கிற கணக்கில் ஒட்டகங்களில் தம்மால் இயன்றவற்றையெல்லாம் எடுத்ததுக் கொண்டு எஞ்சிய பொருள்களை விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்றுக் கொண்டு அவர்கள் வெளியேறிச் சென்றார்கள்.

இவ்வாறாக மதீனா மாநகரின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும், பனூ நஜீர் கோத்திரத்தார் வசித்து வந்த பகுதிகள், அவர்களின் தோப்புகள், கோட்டை கொத்தளங்கள், சொத்து பத்துகள் எல்லாமும் முஸ்லிம்கள் வசமாகிவிட்டன. நம்பிக்கைத் துரோகம் செய்த இந்தக் கோத்திரதைச் சேர்ந்தவர்கள் கைபர், வாதியே குரா, சிரியா என வெவ்வேறு பகுதிகளில் சிதறிப் போனார்கள்.

அடுத்து நபி(ஸல்) அவர்கள் பனூ அத்ஃபான் கோத்திரத்தின் பக்கம் தம்முடைய கவனத்தைத் திருப்பினார்கள். மதீனா மீது படையெடுக்க வேண்டும் என்று இவர்கள்தான் துள்ளிக் கொண்டிருந்தார்கள். 400 வீரர்களுடன் கிளம்பிச் சென்ற நபி(ஸல்) அவர்கள் இந்தக் கோத்திரத்தாரை தாத் அர் ரிகாஹ் என்கிற இடத்தில் எதிர்கொண்டார்கள். திடீர் தாக்குதலால் அந்தக் கோத்திரத்தார் மிகவும் நிலைகுலைந்து போனார்கள். எதிர்த்துப் போரிடாமல் தம்முடைய வீடு வாசல், சொத்து பத்து என அனைத்தையும் கைவிட்டுவிட்டு மலைக்குன்றுகளுக்குள் ஓடிச் சிதறிப் போனார்கள்.

இதன் பிறகு உஹதுப் போரின் முடிவில் உஹதிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த போது அபூசுஃப்யான் விடுத்த சவாலை எதிர் கொள்வதற்காக ஹிஜ்ரி 4, ஷஅபான் மாதத்தில் நபி(ஸல்) ஆயத்தமானார்கள். போர் முடிவுற்ற பிறகு நபிகளாரை நோக்கியும், முஸ்லிம்களை நோக்கியும் திரும்பிப் பார்த்த அபூசுஃப்யான் ‘அடுத்த ஆண்டு பத்ர் என்கிற இடத்தில் நாங்கள் உங்களை எதிர்கொள்வோம்’ என்று சவால் விட்டிருந்தார். நபிகளாரும் ஒரு தோழர் மூலமாக ‘சரி. இது உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தீர்மானம் ஆகிவிட்டது’ என அறிவித்தார்கள்.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் அன்று 1500 தோழர்களுடன் நபி(ஸல்) பத்ர் சென்றடைந்தார்கள். அங்கு மக்காவிலிருந்து 2000 வீரர்களைக் கொண்ட படையுடன் அபூசுஃப்யான் கிளம்பினார். ஆனால் முர்ரத் தெஹ்ரான் (தற்போதைய வாதியே ஃபாத்திமா) என்கிற இடத்தை அடைந்தபோது அங்கிருந்து ஓரடி கூட முன்னேறிச் செல்வதற்கு அந்தப் படையினருக்குத் தைரியம் வரவில்லை.

நபிகளாரோ பத்ரில் எட்டு நாள்கள் வரை மக்கத்து வீரர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பாக வணிகம் செய்து ஒரு திர்ஹமுக்கு இரண்டு திர்ஹம்களாக இலாபம் சம்பாதித்தார்கள். இதற்கு முன்பு உஹதுப் போரின் போது சரிந்திருந்த முஸ்லிம்களின் செல்வாக்கு இப்போது இந்த நிகழ்வின் காரணமாக மறுபடியும் உயர்ந்தோங்கியது. அது மட்டுமின்றி இனி மற்றவர்களுடன் கூட்டு சேராமல் தனியாக முஹம்மத் நபிகளாரை எதிர்கொள்கின்ற திராணி, வலிமை எந்தக் குறைஷிக்கும் இல்லை என்கிற விவரத்தை ஒட்டுமொத்த அரபுலகமும் உணர்ந்து கொண்டது.

இந்த செல்வாக்கும் மதிப்பும் மற்றுமோர் நிகழ்வால் இன்னும் அதிகமாகக் கூடியது. அரபுலகத்துக்கும் சிரியாவுக்கும் இடையில் தூமதுல் ஜந்தல் (தற்போதைய அல்ஜோஃப்) என்கிற அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடம் இருந்தது. ஈராக், சிரியா, எகிப்து ஆகியவற்றுக்கு இடையில் செல்லும் அரபு வணிகக் கூட்டங்கள் இந்தப் பகுதியைக் கடந்து செல்லும். இந்த இடத்தைச் சேர்ந்த மக்கள் வணிகக் கூட்டத்தாருக்கு அடிக்கடி தொல்லை தந்தனர்; அல்லது கொள்ளையடித்து வந்தார்கள்.

அந்த மக்களைத் தண்டிக்கின்ற நோக்கத்துடன் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஐந்தாவது ஆண்டு ரபியுல் அவ்வல் மாதத்தில் ஆயிரம் போர் வீரர்களுடன் கிளம்பிச் சென்றார்கள். நபிகளாருக்கு எதிராகக் களம் இறங்குவதற்கு அந்த மக்களுக்குத் துணிவு வரவில்லை. அந்த ஊரை விட்டே ஓடத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிகழ்வால் ஒட்டுமொத்த வட அரபுலகமும் இஸ்லாத்தின் எழுச்சியையும் வலிமையையும் நன்றாக உணர்ந்துகொண்டது. மதீனாவில் தோன்றி பேருருவம் எடுத்திருக்கின்ற இந்த மாபெரும் சக்தியை எதிர்கொள்வது இனி ஒன்று, இரண்டு கோத்திரங்களால் சாத்தியப்படாது என்பதை அனைத்து கோத்திரங்களும் உணர்ந்து கொண்டன.

அகழ்ப் போர்: இந்தச் சூழலின் பின்னணியில்தான் அகழ்ப் போர் நடந்தது. உண்மையில் மதீனாவில் எழுச்சி பெற்றிருந்த இந்த சக்தியை அடக்கி ஒடுக்குவதற்காக அரபுலகின் ஏராளமான கோத்திரங்கள் அணி திரண்டு மேற்கொண்ட கூட்டுத் தாக்குதல்தான் இந்தப் போர். மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டு கைபர் பகுதியில் வசிக்கத் தொடங்கியிருந்த பனூ நஜீர் கோத்திரத்தாரின் தலைவர்களின் தூண்டுதலில் தான் இந்தக் கூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து குறைஷிகளையும் கல்தஃபான், ஹுஸைல் கோத்திரத்தாரையும் இன்னும் ஏராளமான பிற கோத்திரத்தாரையும் சந்தித்து எல்லோரும் ஒன்று சேர்ந்து மிகப் பெரும் கூட்டுப் படை ஒன்றை அமைத்து மதீனா மீது பாய்வோம் என்கிற திட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக அரபு உலகம் இதுவரை கண்டிராத அளவு ஏராளமான அரபு கோத்திரங்கள் ஒன்றிணைந்து மிகப் பெரும் கூட்டுப் படை ஒன்றை அமைத்து ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்தச் சின்னஞ்சிறு நகரத்தின் மீது பாய்ந்தன. இந்தக் கூட்டணியில் வடக்கிலிருந்து பனூ நஜீர், பனூ கைனுகா கோத்திரங்களைச் சேர்ந்த யூதர்கள் (மதீனாவிலிருந்து வெளியற்றப்பட்ட பிறகு வடக்கே கைபர், வாதியே குறா போன்ற இடங்களில் வசிக்கத் தொடங்கியிருந்த யூதர்கள்) வந்து சேர்ந்தார்கள். கத்ஃபான் பகுதியைச் சேர்ந்த கோத்திரத்தார் (பனூ சுலைம், ஃபஸாரா, முர்ராஹ், சஆத், அஸத் ஆகிய கோத்திரத்தார்) கிழக்கிலிருந்து கிளம்பி வந்து சேர்ந்தார்கள். தெற்கிலிருந்து குறைஷிகள் தங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த கோத்திரத்தாரையும் அழைத்துக் கொண்டு மிகப் பெரும் பட்டாளத்துடன் முன்னேறி வந்தார்கள். இவர்கள் அனைவருடைய ஒட்டுமொத்த எண்ணிக்கை பத்து, பன்னிரண்டு ஆயிரமாக இருந்தது.

இந்தத் தாக்குதல் திடீரென்று நிகழ்ந்திருக்குமேயானால் மிக மிக மோசமான, நாசகரமான தாக்குதலாக முடிந்திருக்கும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் ஏதும் அறியாதவர்களாக முடங்கி இருக்கவில்லை. நபிகளாரின் ஒற்றர்களும், இஸ்லாமிய இயக்கத்தின் மீது அபிமானம் கொண்டவர்களும், இஸ்லாத்தின் தூதுச் செய்தியினால் மனம் கவரப்பட்டவர்களும் எல்லாக் கோத்திரங்களிலும் இருந்தார்கள். இவர்கள் எதிரிகளின் போக்குவரத்து, திட்டங்கள் குறித்து நபிகளாருக்கு அவ்வப்போது தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். (இனவாத, கோத்திர, குறுங்குழுவாத கூட்டத்தாரோடு ஒப்பிடுகின்ற போது ஒரு சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட இலட்சியக் குழு மேலாதிக்கம் பெறுவதற்கான முக்கியமான காரணமாக இதுதான் இருந்து வந்துள்ளது.

குலம், கோத்திரம், இனம் போன்றவற்றால் ஒருங்கிணைகின்ற இனவாதக் குழுக்கள் முழுக்க முழுக்க தத்தமது இனத்தை, குலத்தை, கோத்திரத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் சார்ந்தவர்களாக இருந்தன. ஆனால் கோட்பாடு, சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாகின்ற இயக்கமோ தன்னுடைய அழைப்பின் மூலமாக எல்லாத் திசைகளிலும் பரவிக்கொண்டே செல்கின்றது. மேலும் அந்த இனவாதக் குழுமங்களுக்குள்ளும் தமக்கான ஆதரவாளர்களை உருவாக்கிக் கொள்கின்றது). 

இந்த மிகப்பெரும் பட்டாளம் நபிகளாரின் நகரத்தைச் சென்றடைவதற்குள்ளாக நபி(ஸல்) அவர்கள் ஆறே நாள்களுக்குள் மதீனாவின் வட மேற்கு எல்லையில் அகழ் ஒன்றைத் தோண்டிவிட்டார்கள். மேலும் தமக்குப் பின்னால் சலா மலை இருக்க, மூவாயிரம் வீரர்களுடன் அகழியின் பாதுகாப்பு, தற்காப்புக்காக ஆயத்தமாகிவிட்டார்கள். மதீனாவுக்குத் தெற்கில் தோப்புகளும் தோட்டங்களும் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தன எனில் (இப்போதும் அப்படித்தான் நெருக்கமாக உள்ளன) அந்தத் திசையிலிருந்து எந்தத் தாக்குதலையும் மேற்கொள்வதற்கான சாத்தியமே இருக்கவில்லை. கிழக்கிலோ எரிமலைக் கற்கள் நிறைந்திருக்க, அந்தத் திசையிலும் எந்தவொரு இராணுவப் படையெடுப்பும் எளிதாக மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியம் இருக்கவில்லை. தென் மேற்கு எல்லையிலும் இதே நிலைமை தான் இருந்தது.

இதனால் உஹது மலையின் கிழக்கு, மேற்கு ஓரங்கள் வழியாகத்தான் தாக்குதல் தொடுக்கப்படுவதற்கான சாத்தியம் இருந்தது. மேலும் அந்த எல்லையில் தான் நபி(ஸல்) அவர்கள் மிகப்பெரும் அகழிகளைத் தோண்டி பாதுகாப்பை வலுப்படுத்தி இருந்தார்கள். மதீனாவுக்கு வெளியே அகழிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற சாத்தியமே இறைமறுப்பாளர்களின் இராணுவத் திட்டத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் அரபுகள் இப்படிப்பட்ட இராணுவ உத்திகளை அறிந்திருக்கவில்லை. வேறு கதியின்றி அவர்கள் அந்தக் குளிர்காலத்தில் ஒரு நீண்ட கால முற்றுகையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். அதற்கான எந்தத் தயாரிப்பும் இல்லாமல்தான் அவர்கள் கிளம்பி வந்திருந்தார்கள்.

 

(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்