மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அத்தியாயம் 33 அல்அஹ்ஸாப் முன்னுரை
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 1 - 15 பிப்ரவரி 2024


மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

கடந்த இதழ் தொடர்ச்சி...

அதே சமயத்தில் கத்ஃபான் கோத்திரத்தின் அஷ்ஜஹ் கிளையைச் சேர்ந்த நயீம் பின் மஸ்ஊத் என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். நபிகளாரிடம் வந்து ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தி இதுவரையில் எவருக்கும் தெரியவில்லை. நீங்கள் என்னிடம் எந்த வேலையைச் சொன்னாலும் அதனைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு நான் தயார்’ என்று சொன்னார். நபிகளார்(ஸல்) அவரிடம் ‘நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைக் குறித்து எவரிடமும் சொல்லாமல் எதிரிகளிடம் சென்று அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக ஏதேனுமோர் உத்தியை மேற்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள். (இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ‘போரில் ஏமாற்றுவது ஆகுமானதாகும்’ என்கிற நபிமொழியை அருளினார்கள்).

ஏற்கனவே பனூ குறைளாக்களிடம் நயீம் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களுக்கு நெருக்கமான பழக்கம் இருந்ததனால் முதலில் அவர்களிடம் சென்று ‘முற்றுகையால் சோர்ந்து போய் இந்தக் குறைஷிகளும் கத்ஃபான் கோத்திரத்தாரும் திரும்பிச் சென்றுவிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அதன் பிறகு அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் நீங்களோ முஸ்லிம்களுக்கு அருகில் வசித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றீர்கள். இவர்கள் களத்தை விட்டு ஓடிவிட்டால் உங்களின் நிலை என்ன ஆகும்? வெளியிலிருந்து படையெடுத்து வந்திருக்கின்ற கோத்திரத்தாரிடம் அவர்களின் முக்கியமான ஆளுமைகள் சிலரைப் பணயக் கைதிகளாய் ஒப்படைத்தாலே தவிர நாங்கள் போரில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்து விடுங்கள்’ என்று சொன்னார். இந்த அச்சமும் கருத்தும் பனூ குறைளாவினரின் நெஞ்சில் நன்றாகப் பதிந்து விட்டன. அவர்கள் உடனே ஒன்றுபட்ட அரபு கோத்திரத்தாரிடமிருந்து பணயக் கைதிகளைக் கேட்பது எனத் தீர்மானித்தார்கள்.

அதன் பிறகு இந்தத் தோழர் குறைஷிகளின் தலைவர்களிடமும் கத்ஃபான் கோத்திரத் தலைவர்களிடமும் சென்று ‘இந்த பனூ குறைளாவினர் இப்போது சற்றே தளர்ந்து போய்விட்டிருப்பதாகத் தோன்றுகின்றது. உங்களிடமிருந்து பணயக் கைதிகளாய் ஒரு சில ஆளுமைகளைப் பெற்று அவர்களை முஹம்மத் நபியிடம் கொடுத்து அவருடனான தங்களின் விவகாரத்தைச் சரிப்படுத்திக் கொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றது. எனவே அவர்களுடன் கொஞ்சம் விழிப்பாகவே நடந்து கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை கூறினார்.

இதனைக் கேட்டதும் ஒருங்கிணைந்த அரபுலகக் கூட்டணியினருக்கு பனூ குறைளாவினர் மீது ஐயம் தோன்றி பெருத்துவிட்டது. உடனே அவர்கள் பனூ குறைளாவினருக்கு செய்தி அனுப்பினார்கள்: ‘நீண்டுகொண்டே போகின்ற இந்த முற்றுகையால் நாங்கள் வெறுத்துப் போய்விட்டோம். எனவே தீர்க்கமான, அதிரடியான போரை மேற்கொண்டுவிடவே தீர்மானித்துள்ளோம்.

நாளை நீங்கள் அந்தத் திசையிலிருந்து தாக்குதலைத் தொடுத்துவிடுங்கள். நாங்களும் ஒரே சமயத்தில் இந்தத் திசையிலிருந்து முஸ்லிம்கள் மீது பாய்கின்றோம்’. இதற்கு, ‘உங்களிடமிருந்து முக்கியமான சில ஆளுமைகளை எங்களிடம் பணயக் கைதிகளாய் ஒப்படைக்காத வரையில் நாங்கள் போரில் ஈடுபடுகின்ற ஆபத்தை எதிர்கொள்ள மாட்டோம்’ என்று பனூ குறைளாவினர் பதில் அனுப்பினார்கள். அவர்களின் இந்தப் பதிலைக் கேட்டதும் நயீம் பின் மஸ்ஊத் சொன்னது உண்மைதான் என ஒட்டுமொத்த அரபுலகக் கூட்டுப் படையினர் உணர்ந்தனர். எனவே பணயக் கைதிகளாக எவரையும் அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள். 

அவர்களின் மறுப்பைக் கேட்டதும் ‘நயீம் பின் மஸ்ஊத் சொன்னது சரிதான்’ என்று பனூ குறைளாக்கள் உணர்ந்து கொண்டார்கள். இவ்வாறாக நயீம் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களின் இந்தப் போர்த் தந்திரம் மிகப் பெரும் வெற்றி பெற்று எதிரிகளின் அணி பிளவுபட்டது.

முற்றுகை தொடங்கி இருபத்தைந்து நாள்களாகிவிட்டிருந்தன. கடுமையான பனிக்காலம் வேறு. இத்துணை பெரும் இராணுவத்தினருக்கான தண்ணீர், உணவு, தீனிக்கான ஏற்பாடுகளைச் செய்வது நாளுக்கு நாள் சிரமமாகி வந்தது. மேலும் அணியில் பிளவு வெடித்ததால் முற்றுகையாளர்களின் மன உறுதி குலைந்துவிட்டது. 

இந்த நிலையில் திடீரென்று ஓர் இரவில் மிகக் கடுமையான சூறாவளி சுழன்றடிக்கத் தொடங்கியது. வெடவெடத்துக் கொண்டிருந்த குளிரும் இடியும் மின்னலும், கூடவே கையைக் கூடப் பார்த்துணர முடியாத அளவுக்கான கும்மிருட்டும் சூழலின் உக்கிரத்தைக் கூட்டிவிட்டன. சூறாவளியில் எதிரிப் படையினரின் கூடாரங்கள் தலைகீழாகப் புரண்டு கவிழ்ந்தன. அவர்கள் அல்லோலக் கல்லோலப்பட்டு இங்குமங்கும் பதறியடித்து ஓடினார்கள். அவர்களால் இறைவனின் இந்த மிகப் பெரும் அடியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஒவ்வொருவரும் அப்போதே அந்தக் கணமே இரவோடு இரவாகத் தத்தமது வீடுகளுக்குக் கிளம்பி விட்டார்கள். காலையில் முஸ்லிம்கள் விழித்தெழுந்த போது மைதானத்தில் ஒரு எதிரியும் இருக்கவில்லை காலி மைதானத்தைப் பார்த்ததும் நபி(ஸல்) சொன்னார்கள்: ‘இனிமேல் குறைஷிகளால் உங்கள்மீது எக்காலத்தும் படையெடுத்து வர இயலாது. இனி நீங்கள்தாம் அவர்கள் மீது படையெடுத்துச் செல்வீர்கள்’. 

அதுதான் நிலைமைகளைப் பற்றிய சரியான மதிப்பீடாக இருந்தது  குறைஷிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரபுலகின் சக்திகளும் ஒன்றுபட்டு இஸ்லாத்துக்கு எதிராகத் தம்முடைய கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்தி முடித்திருந்தார்கள். இந்த முறை தோல்வியடைந்து விட்ட பிறகு மதீனா மீது மீண்டும் ஒரு முறை படையெடுத்து வருவதற்கான தெம்போ, திராணியோ அவர்களிடம் கொஞ்சங்கூட எஞ்சியிருக்கவில்லை. இப்போது தாக்குதல் தொடுக்கின்ற சக்தியும் வலிமையும் எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களின் பக்கம் வந்திருந்தது.

பனூ குறைளா போர்

அகழியிலிருந்து திரும்பிய நபி(ஸல்) அவர்கள் தம்முடைய இல்லத்தை அடைந்த லுஹர் வேளையில் அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) ‘இப்போதே ஆயுதங்களைக் கழற்றிவிட வேண்டாம். பனூ குறைளாக்களின் விவகாரம் மீதமிருக்கின்றது. அவர்களையும் இப்போதே ஒடுக்கி விட வேண்டும்’ எனும் ஆணையைச் சமர்ப்பித்தார். இந்த ஆணை கிடைத்ததும் நபிகளார்(ஸல்) உடனே பொது அறிவிப்பு செய்தார்கள்: ‘எவரெல்லாம் தலைமைக்குக் கீழ்ப்படிந்து நடத்தலில் நிலைத்திருக்கின்றாரோ அவர் பனூ குறைளாக்களின் கோட்டைகளை அடைகின்ற வரை அஸர் தொழ வேண்டாம்’.

உடனே சூட்டோடு சூடாக அலீ பின் அபூதாலிப்(ரலி) அவர்களுடன் ஒரு படையை முன்னணிப் படையாக அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்றடைந்த போது யூதர்கள் தங்களின் கோட்டைகளின் மீது ஏறி நபிகளார்(ஸல்) மீதும் முஸ்லிம்கள் மீதும் வசை மாரியைப் பொழியத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் போர் நடந்து கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில் ஒப்பந்தத்தை முறித்துவிட்டு எதிரிகளுடன் சேர்ந்து மதீனாவின் ஒட்டுமொத்த மக்களையும் மிகப்பெரும் ஆபத்தில் தள்ளிய கடுமையான குற்றத்தின் விளைவிலிருந்து இந்த வசைகளும் தடித்த வார்த்தைகளும் அவர்களைக் காப்பாற்றிவிடுமா, என்ன?

அலீ பின் அபூதாலிப்(ரலி) அவர்களின் தலைமையில் வந்த சிறிய படையைப் பார்த்து, ‘இவர்கள் வெறுமனே மிரட்டுவதற்காகத்தான் வந்திருக்கின்றார்கள்’ என்று நினைத்தார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் தலைமையில் முழு இராணுவமே திரண்டுவந்து, பனூ குறைளாவினரின் குடியிருப்புப் பகுதி முழுவதையும் முற்றுகையிடுகையில் அவர்கள் மிகவும் வெடவெடத்துப் போனார்கள். அவர்களால் அந்த உக்கிரத்தை இரண்டு மூன்று வாரங்களுக்கு மேலாகத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இறுதியில் தங்களின் விவகாரம் குறித்து அவ்ஸ் கோத்திரத் தலைவர் சஅத் பின் முஆத்(ரலி) தருகின்ற தீர்ப்பு எதுவானாலும் அதனை இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனையுடன் அவர்கள் நபிகளாரிடம் சரணடைந்தார்கள். அறியாமைக் காலத்தில் அவ்ஸ் கோத்திரத்தாருக்கும் பனூ குறைளாவினருக்கும் நெருங்கிய தோழமையும் பந்தமும் இருந்தன. நட்புறவு ஒப்பந்தத்தால் பிணைந்திருந்தார்கள்.

பல்லாண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாக அந்தக் கடந்த காலத் தோழமையையெல்லாம் சஅத் பின் முஆத்(ரலி) கருத்தில் கொள்வார்கள். இதற்கு முன்பு பனூ நஜீர், பனூ கைனுகா கோத்திரத்தார் மதீனாவை விட்டுப் பத்திரமாக வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டதைப் போன்று தங்களையும் எந்தச் சேதாரமும் இன்றி வெளியேற அனுமதி வழங்குவார் என்றே அவர்கள் நம்பினர் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் கூட தம்முடன் நட்புறவு ஒப்பந்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள் என்கிற வகையில் அவர்களுடன் பரிவோடு நடந்து கொள்ளும்படி சஅத்(ரலி) அவர்களிடம் கோரினார்கள்.

ஆனால் இதற்கு முன்பு இரண்டு யூதக் கோத்திரங்களுக்கு மதீனாவை விட்டு எந்தச் சேதாரமும் இல்லாமல் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கியபோது, அவர்கள் எவ்வாறேல்லாம் சுற்றுப்புறங்களில் இருக்கின்ற கோத்திரங்களை உசுப்பிவிட்டு பத்து, பன்னிரண்டாயிரம் வீரர்களைத் திரட்டி வந்து மதீனாவின் மீது படையெடுத்தார்கள் என்பதை சஅத்(ரலி) கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். மேலும் இவர்களும் எப்படிச் சரியாகப் போர் மூண்டிருந்த நேரத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து, ஒப்பந்தத்தை முறித்து மதீனாவாசிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்தனர் என்பதையும் அவர்கள் பார்த்திருந்தார்கள்.

எனவே பனூ குறைளா கோத்திரத்தாரின் ஆண்கள் அனைவரையும் கொன்று விட வேண்டும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாய் ஆக்கிட வேண்டும், அவர்களின் சொத்துகள் அனைத்தும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டுத் தரப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை நிறைவேற்ற முஸ்லிம்கள் அந்த யூதர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த போது அகழ்ப் போரில் பங்கேற்பதற்காக அந்தத் துரோகிகள் 1500 போர் வாள்களையும், போர்க் கவச ஆடைகளையும், 2000 ஈட்டிகளையும், 1500 கேடயங்களையும் சேகரித்து வைத்திருந்ததைக் கண்டார்கள்.

அல்லாஹ்வின் உதவி மட்டும் முஸ்லிம்களுக்குக் கிடைத்து இருக்கவில்லையெனில், அரபு ஐக்கியப் படையினர் முழு பலத்தையும் ஒருசேரப் பயன்படுத்தி முழுவீச்சில் தாக்கி, அரண்களாய் இருந்த அகழிகளைத் தாண்டிச் சென்று மதீனாவுக்குள் நுழைந்து முஸ்லிம்களைத் தாக்கும் நிலையில், அதே நேரத்தில் இந்தத் துரோகிகள் பின்புறமாக முஸ்லிம்களைத் தாக்க இப்போர்த் தளவாடங்கள் அனைத்தையும் பயன்படுத்தி இருப்பார்கள் என்பது தெளிவானது. இவையெல்லாம் தெரிந்தபிறகு சஅத்(ரலி) அளித்த தீர்ப்பு முழுக்க முழுக்கச் சத்தியமானது என்பதில் எந்தவிதமான ஐயமும் எஞ்சி இருக்கவில்லை. 

 

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்