நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒருவர் இன்னொரு முஸ்லிமுடன் ‘இகாலா’ முறையில் நடந்துகொண்டால் (அதாவது தான் விற்ற அல்லது வாங்கிய பொருளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கோ, கொடுத்து விடுவதற்கோ உடன்பட்டுவிட்டால்) இறைவன் மறுமை நாளில் அவருடைய தவறையோ பாவத்தையோ மன்னித்து விடுகின்றான்’.
அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா(ரலி)
நூல் : அபூ தாவூத், இப்னு மாஜா
வியாபாரப் பேச்சுவார்த்தை முடிந்து, பொருளும் பணமும் கைமாறிய பிறகு, ஒருவர் தன்னுடைய வேறு ஏதோ நலனிற்காக வியாபாரத்தை ரத்து செய்ய விரும்புகின்றார் என வைத்துக்கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக ஒருவர் தாம் விற்ற பொருளைத் திரும்ப வாங்கிக் கொள்ளவோ அல்லது வாங்கிய பொருளைத் திரும்பக் கொடுத்துவிடவோ விரும்புகின்றார் என வைத்துக் கொள்ளுங்கள். இந்நிலையில் முடித்த பேரத்தை ரத்து செய்யுமாறு அவர் இரண்டாமவரை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ முடியாது. சட்டம் அதனைத் தடுக்கின்றது.
ஆனால் இத்தகைய இக்கட்டான நேரங்களில் கருணையுடன் நடந்துகொள்வீராக! உம்முடைய சகோதரருடன் நீர் செய்து கொண்ட வியாபாரத்தை ரத்து செய்து அவரிடம் வாங்கிய பொருளை அவருக்குத் திருப்பி அளித்துவிட்டாலோ அல்லது அவரிடம் விற்றுவிட்ட பொருளைத் திரும்ப வாங்கிக் கொண்டாலோ அது மிகப்பெரும் நன்மையான செயலாகும் என்பதனை நபிகளார்(ஸல்) இந்த நபிமொழியில் ஊக்குவித்துள்ளார்கள்.
இது எந்த அளவுக்கு நன்மை அளிக்கின்ற நற்செயல் எனில் ‘இறைவனும் இத்தகைய மனிதர் மீது மறுமை நாளில் கருணையுடன் நடந்துகொள்வான் அவருடைய பாவங்களை மன்னித்தருள்வான்’ என அறிவித்துள்ளார்கள்.