மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

இலாபத்திற்கு உரியவர் நபிமொழி விளக்கம்
* மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, 1-15 மார்ச் 2024


இலாபத்திற்கு உரியவர்   நபிமொழி விளக்கம்

 

ஒருவர் இன்னொருவரிடம் ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார். இறைவன் நாடிய காலம் வரை அவர் அந்த அடிமையைத் தம்மிடம் வைத்திருந்தார். பின் அந்த அடிமையிடம் உள்ள குறையின் விவரம் அவருக்குத் தெரிய வந்தது. அவர் இந்த வழக்கை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு போனார். நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை (அவரின் குறையின் காரணமாக) மறுபடியும் விற்றவரிடமே திரும்பக் கொடுத்துவிடும்படிச் சொன்னார்கள். அடிமையை விற்றவர் இதனைக் கேட்டு ‘இறைத்தூதரே! இத்தனை நாள்கள் அவர் என்னுடைய அடிமையை வைத்து வேலை வாங்கியிருக்கின்றார். (எனவே எனக்கு அவர் அந்த அடிமையை வேலை வாங்கிய அளவுக்கு இழப்பீடு தர வேண்டும் எனக் கோரினார்). அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள்: ‘இழப்பை யார் ஏற்றுக்கொள்கின்றாரோ அவரே இலாபத்திற்கு உரியவர்.’ 

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி)

நூல் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா

ஒருவர் இன்னொருவரிடம் விலை கொடுத்து ஒரு பொருளை வாங்குகின்றார். அந்தப் பொருளில் ஏதாவது குறை இருக்கின்றது. அந்தக் குறை பற்றிய விவரத்தைப் பொருளை விற்றவர் பொருளை வாங்குகின்றவரிடம் சொல்லாமல் மறைத்து விடுகின்றார். பிற்பாடு பொருளை வாங்கியவருக்கு அந்தப் பொருளில் இருக்கின்ற குறை தெரிய வருமேயானால் அந்த வியாபாரத்தையே ரத்து செய்துவிடுகின்ற உரிமை அவருக்கு உண்டு. இதனை (கியாரே அய்ப்) குறை தொடர்பான உரிமை என்றும் சொல்வார்கள்.

‘இழப்பை ஏற்றுக்கொள்பவரே இலாபத்திற்கு உரியவர்’ எனும் நபிகளாரின் கூற்று கனமானது, ஆழமானது, கருத்துச் செறிவுமிக்கது. இதனை அடிப்படை விதியாகக் கொண்டு மார்க்கச் சட்ட வல்லுநர்கள் நூற்றுக்கணக்கான பிரச்னைகளுக்கு ஷரீஅத்தில் தீர்வு கண்டிருக்கின்றார்கள்.

இதன் உட்பொருள்: ‘அந்த அடிமையை விலை கொடுத்து வாங்கிச் சென்றவரின் பராமரிப்பில் விற்கப்பட்ட அடிமை இறந்திருந்தாலோ, ஏதாவதொரு விபத்தில் ஊனமுற்றிருந்தாலோ வாங்கியவர்தான் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும். எனவே அந்த அடிமை அவரிடம் இருந்த நாள்களில் அவர் அந்த அடிமையை வைத்து வேலை வாங்கியிருந்தால் இலாபம் ஈட்டியிருந்தால் அந்த இலாபமும் நன்மையும் அவருக்குரியதாகும். எனவே இழப்பீடு தருவதற்கான பேச்சுக்கே இடம் இல்லை.’


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்