மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

நோன்பு எனும் கேடயம்
* மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஆதமின் மகனுடைய ஒவ்வொரு நல்லறத்துக்குமான நற்கூலி பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை அதிகரிக்கப்படுகின்றது. ‘ஆனால் நோன்பு அதற்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் இது எனக்கானது. எனவே அதற்கான நற்கூலியை நானே (எத்தனை மடங்கு வேண்டுமானாலும்) அளிப்பேன். மனிதன் தன்னுடைய பாலியல் இச்சையையும் தன்னுடைய உணவையும் எனக்காகத் துறந்து விடுகின்றான்.
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு. ஒன்று அவன் நோன்பு துறக்கின்ற நேரத்தில். இரண்டு அவன் தன்னுடைய அதிபதியைச் சந்திக்கின்ற நேரத்தில். மேலும் நோன்பாளியின் வாயிலிருந்து வருகின்ற நாற்றம் அல்லாஹ்வைப் பொறுத்தவரை கஸ்தூரியின் மணத்தை விடச் சிறப்பானதாகும்.
நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் எவரேனும் நோன்பு நோற்றிருக்கும் போது அவர் ஆபாசமாகப் பேசக் கூடாது. இரைந்தும் ஆவேசமாகவும் பேசக்கூடாது. குழப்பத்திலும் கலவரத்திலும் ஈடுபடக் கூடாது. எவரேனும் அவரைப் பார்த்து திட்டினால் அல்லது அவருடன் சண்டையிட வந்தால் ‘நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்’ என்று சொல்லிவிட வேண்டும் (என்னால் உம்முடன் இந்தச் சச்சரவில் பங்கேற்க முடியாது)
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி, முஸ்லிம்


இந்த நபிமொழியில் பல முக்கியமான அடிப்படை விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மக்கள் செய்கின்ற நல்லறங்களுக்கு மகத்துவமும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் அவர்களின் எண்ணத் தூய்மை, நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்குகள் வரை அதிகப்படுத்திக் கொடுக்கின்றான். ஆனால் நோன்பின் விவகாரம் இந்தப் பொதுவான விதிக்கு அப்பாற்பட்டதாகும்.
நோன்பு முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்காக நோற்கப்படுவதாகும். மற்ற வழிபாடுகளும் நல்லறங்களும் ஏதேனும் ஒரு வகையான வெளிப்படைத்தன்மையுடன் தான் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அவற்றை மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைப்பது மிகவும் சிரமமானதாய் ஆகிவிடுகின்றது.
ஆனால் நோன்பின் விவகாரமே தனி. அது எந்த அளவுக்கு ஆரவாரம் இல்லாமல், மௌனமாக, எவராலும் உணரப்படாத வகையில் நிறைவேற்றப் படுகின்றதெனில் அந்த வழிபாடு அல்லாஹ்வையும் அடியானையும் தவிர வேறு எவருக்கும் தெரிவதில்லை. இதனால் அதற்கான நற் கூலியை அல்லாஹ் கணக்கின்றி வழங்கு வான்.
அது மட்டுமின்றி ரமளான் மாதத்தில் நன்மைகளும் இறையச்சமும் நிறைந்த சமூகச் சூழல் உருவாகிவிடுகின்றது. அந்தச் சூழலில் நல்லறங்களும் நன்மைகளும் செழித்தோங்குவதற்கான சாத்தியங்களும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
மனிதன் எந்த அளவுக்கு உளத்தூய்மையுடனும் வாய்மையுடனும் நல்லெண்ணத்துடனும் இந்த மாதத்தில் அதிகமதிகமாக நல்லறங்களில் ஈடுபடுகின்றானோ, எந்த அளவுக்கு ரமளானின் அருள்வளங்களை ஈட்டிக்கொள்வதில் முனைப்புடன் மும்முர மாக இயங்குகின்றானோ, ஆண்டின் மற்றெல்லா மாதங்களிலும் ரமளானின் தாக் கங்களை நிலைத்திருக்கச் செய்கின்றானோ அந்த அளவுக்கு அவனுடைய வாழ்வில் நன்மைகளும் நல்லறங்களும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். அதற்கு எந்தவொரு முடிவும் இருக்காது. இந்தச் சிறப்புகள் சாதாரணமான நாள்களில் மேற்கொள்ளப்படுகின்ற பிற நல்லறங்களுக்கு ஒருபோதும் கிடைப்பதில்லை.
அடியான் நோன்பு நோற்றிருக்கின்ற போது தன்னுடைய பாலுறவு இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதில்லை. உணவு உண்பதும் இல்லை. இந்த நிலையில் இறைவனும் அந்த வெளிப்படையான அருள்வளங்களைக் காட்டிலும் கூடுதலான அருள்வளத்தை அருள்கின்றான்.
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் இருக்கின்றன. ஒன்று இந்த உலகில் நோன்பு துறக்கின்ற நேரத்தில் அவனுக்குக் கிடைக் கின்ற மகிழ்ச்சியும் உவகையும். நாள் முழுக்க பசியோடும் தாகத்தோடும் இருந்த பிறகு மாலையில் அவன் நோன்பு துறக்கின்ற போது அவனுக்குக் கிடைக்கின்ற மகிழ்வும் ஆனந்தமும் மனநிறைவும் இருக்கின்றனவே, அவை அவனுக்குச் சாதாரணமான நாள்களில் ஒருபோதும் கிடைப்பதில்லை. அவனுடைய பசியும் தாகமும் அகன்றுவிடுகின்றன.
கூடுதலாக அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி முடிக்கின்ற நற்பேறு கிடைத்த திருப்தியையும் ஆன்மிக இன்பத்தையும் இனிமையையும் அனுபவிக்கின்றான். மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் இறைவனைச் சந்திக்கின்ற போது கிடைக்கின்ற மகிழ்ச்சியும் பேருவகையும் இருக்கின்றதே, அதனை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அந்த மகிழ்ச்சிக்கு இணையாக வேறு எந்த மகிழ்ச்சியும் இல்லை.
நோன்பு நோற்றிருக்கின்ற போது வாயிலிருந்து வரும் வாசம் கெட்டுப் போய் விடுகின்றது. (இதனால் மீண்டும் மீண்டும் மிஸ்வாக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது). ஆனால் அல்லாஹ்விடமோ அந்த நாற்றம் கஸ்தூரியின் மணத்தைக் காட்டிலும் பல மடங்கு மதிப்பு மிக்கதாகும். ஏனெனில் இந்த நாற்றம் பசியினாலும் தாகத்தினாலும் - இறைவனின் உவப்பும் பொருத்தமும் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் உணர்வுடனும் அவனுடைய கட்டளையின் படி நடந்ததால் பசிக்கும் தாகத்துக்கும் ஆளானதால் ஏற்பட்டதாகும்.
நோன்பின் சிறப்பே அது கேடயமாக இருப்பதுதான். கேடயத்தைக் கொண்டு மனிதன் எதிரியின் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதைப் போன்றே நோன்பைக் கொண்டு ஷைத்தான் தொடுக்கின்ற தாக்குதல்களிலிருந்து, மன இச்சை தருகின்ற அழுத்தங்களிலிருந்து, மன இச்சையின் இழுப்புகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றான். நோன்பின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குமுறைகளை மனிதன் பேணி நடந்து கொள்கின்ற போது அதன் காரணமாக அவன் ஏராளமான பாவங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றான். மேலும் மறுமையில் நரக நெருப்பிலிருந்து விடுதலையையும் பெற்றுக் கொள்கின்றான்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்