மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வளர்ப்பு மகன்கள் சொந்த மகன்களாக மாட்டார்கள்!
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், ஏப்ரல் 16-30, 2024
வளர்ப்பு மகன்கள் சொந்த மகன்களாக மாட்டார்கள்!

அல்லாஹ் எந்த மனிதனுக்குள்ளும் இரு இதயங்களை அமைத்திடவில்லை.5 நீங்கள் ‘ளிஹார்’ செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்களுடைய அன்னையராய் அவன் ஆக்கவுமில்லை;6 மேலும் அவன் உங்களுடைய வளர்ப்பு மகன்களை உங்களின் சொந்த மகன்களாய் ஆக்கவுமில்லை.7 இவை நீங்களே உங்கள் வாய்களிலிருந்து வெளிப்படுத்தும் வெறும் வார்த்தைகளாகும். ஆனால், அல்லாஹ் சத்தியத்(தின் அடிப்படையிலான)தைக் கூறுகின்றான். மேலும் அவன் நேரிய வழியின் பக்கம் வழிகாட்டுகின்றான். வளர்ப்பு மகன்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இது அல்லாஹ்விடம் மிக்க நீதமானதாகும்.8 ஆனால் அவர்களுடைய தந்தையர் யார் என்று நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுடைய மார்க்கம் சார்ந்த சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் இருக்கின்றார்கள்.9 தெரியாமல் நீங்கள் ஏதேனும் பேசிவிட்டால், அதற்காக உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆயினும், மனப்பூர்வமாக நாடி நீங்கள் கூறினால் அது நிச்சயம் குற்றமாகும்.10 அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.11

Ž அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் Ž திருவசனங்கள் : 4 - 5


5. ஒரு மனிதர் ஒரே சமயத்தில் இறைநம்பிக்கையாளராகவும், நயவஞ்சகராகவும்; உண்மையாளராகவும் பொய்யராகவும்; நல்லவராகவும் தீயவராகவும் இருக்க முடியாது. உளத்தூய்மையுள்ள உள்ளம் ஒன்றுமாக, இறைவனைப் பற்றிய அச்சம் இல்லாத இதயம் ஒன்றுமாக அவருடைய நெஞ்சுக்குள் இரண்டு இதயங்கள் இருப்பதில்லை. எனவே ஒரு சமயத்தில் ஒரு மனிதரின் அந்தஸ்து ஒன்றாகத்தான் இருக்க முடியும். அவர் ஒன்று இறைநம்பிக்கையாளராக இருப்பார். அல்லது நயவஞ்சகராக இருப்பார். இந்த நிலையில் நீங்கள் இறைநம்பிக்கையாளர் ஒருவரைப் பார்த்து நயவஞ்சகர் என்று சொல்லிவிடுவதாலோ, ஒரு நயவஞ்சகரைப் பார்த்து இறைநம்பிக்கையாளர் என்று சொல்லிவிடுவதாலோ உண்மைநிலை மாறிவிடுவதில்லை. அந்த மனிதரின் உண்மையான அந்தஸ்து திண்ணமாக ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும்.

6. ‘ளிஹார்’ ஒரு தனித்துவம் மிக்க அரபுச் சொல் ஆகும். தொன்மைக் காலத்தில் அரபு மக்கள் தங்களின் மனைவியருடன் சண்டையிடுகின்ற போது சில சமயம் ஆத்திரப்பட்டு, ‘உன்னுடைய முதுகு என்னைப் பொறுத்தவரை என் தாயின் முதுகினைப் போன்றதாகும்’ என்று சொல்லிவிடுவார்கள். அவர்களின் வாயிலிருந்து இந்த வாசகங்கள் வெளியானதுமே அந்தப் பெண் அவருக்கு ஹராமானவளாக - தடுக்கப்பட்டவளாக ஆகிவிடுகின்றாள்; ஏனெனில் அவன் அவளை தன்னுடைய தாயாக ஒப்பிட்டுவிட்டான் என்கிற புரிதல் அவர்களிடம் இருந்தது. இது குறித்து மனைவியை தாய் என்று சொல்லிவிடுவதாலோ, அவளை அன்னையுடன் ஒப்பிடுவதாலோ அவள் தாய் ஆகிவிடுவதில்லை; உங்களைப் பெற்றெடுத்தவள்தான் உங்களின் தாய் ஆவாள்; வெறுமனே நாவால் அன்னை என்று சொல்லிவிடுவதாலேயே நேற்று வரை உங்களின் மனைவியாக இருந்தவள் இன்று உம்முடைய அறிவிப்பால் உமக்கு தாயாக ஆகிவிடுகின்ற அளவுக்கு உண்மைநிலை மாறிவிடாது என்று அல்லாஹ் அறிவித்திருக்கின்றான். (இங்கு ளிஹார் தொடர்பான ஷரீஅத் சட்டங்களை எடுத்துரைப்பது நோக்கம் அல்ல. அந்தச் சட்டங்கள் அத்தியாயம் 58 : 2-4 வரையில் விவரிக்கப்பட்டுள்ளன).

7. உரையின் உண்மையான நோக்கம் இதுதான். இந்த மூன்றாவது கருத்தை நெஞ்சங்களில் பதிய வைப்பதற்காகத்தான் இதற்கு முன்பு சொல்லப்பட்ட இரண்டும்
சான்றுகளாக முன் வைக்கப்பட்டன.

8. இந்த இறைக்கட்டளையைச் செயல்படுத்தும் விதத்தில் முதன்முதலாக நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தம் என்னவெனில், நபிகளாரின் தத்துப் பிள்ளையான ஜைத்(ரலி) அவர்களை ஜைத் பின் முஹம்மத்(ஸல்) என்று அழைப்பதற்குப் பதிலாக ஜைத் பின் ஹாரிஸா(ரலி) என்று மக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். புகாரி, திர்மிதி, நஸாயீ ஆகிய நூல்களில் பதிவாகி இருக்கின்ற அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களின் அறிவிப்பு ஒன்றில், ‘ஜைத் பின் ஹாரிஸா(ரலி) அவர்களை அதற்கு முன்பு மக்கள் அனைவருமே ஜைத் பின் முஹம்மத் என்றே அழைத்து வந்தார்கள். இந்த வசனம் அருளப்பட்டதும் எல்லோரும் அவரை ஜைத் பின் ஹாரிஸா(ரலி) என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த வசனம் அருளப்பட்ட பிறகு தம்முடைய சொந்தத் தந்தையைத் தவிர எந்தவொரு மனிதர் மீதும் தம்முடைய வம்ச வரிசையை சாற்றிவிடுவது எவருக்கும் ஆகுமானதல்ல என்று அறிவிக்கப்பட்டது. புகாரி, முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூல்களில் பதிவாகியிருக்கின்ற ஸஅத் பின் அபி வக்காஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பு ஒன்றில், ‘எவர் தம்மைத் தாமே தம்முடைய தந்தைக்குப் பதிலாக வேறு ஒருவரின் மகனாக தம்மை அறிவித்துக் கொள்கின்றாரோ, அந்த மனிதர் தம்முடைய தந்தை அல்லர் என்பதை நன்கு அறிந்திருந்த நிலையிலும் அந்த மனிதர்தாம் தம்முடைய தந்தை என எவர் அறிவிக்கின்றாரோ அவருக்கு சுவனம் ஹராமானதாகும்’.

இதே கருத்தைக் கொண்ட மேலும் சில அறிவிப்புகளும் ஹதீஸ் தொகுப்பு நூல்களில் கிடைக்கின்றன. அவற்றில் இந்தச் செயல் மிகவும் கடுமையான பாவச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9. அத்தகைய நிலைமையிலும் ஒருவருடைய பிறப்பை அவருடைய சொந்தத் தந்தைக்குப் பதிலாக வேறு ஒருவர் மீது சாற்றிச் சொல்வது பொருத்தமானதாகாது.

10. எவரையாவது அன்போடும் பாசத்தோடும் மகனே என்று விளிப்பது தவறாகாது. இதே போன்று அம்மா, மகள், தங்கச்சி, அண்ணன் போன்ற சொற்களையும் வேறு எவருக்காவது தார்மிக ரீதியில் பயன்படுத்துவதும் பாவம் ஆகாது. ஆனால் ஒருவருக்கு உண்மையிலேயே சொந்த உறவுக்குரிய அந்தஸ்தை முழுமையாகத் தருகின்ற நோக்கத்துடன், சொந்த உறவுக்குரிய அத்தனை உரிமைகளையும் கொண்டவராக அவரை அறிவிக்கின்ற எண்ணத்துடன்,
சொந்த உறவுகளுடனான வைக்கப்படுகின்ற தொடர்புக்கும் உறவுக்கும் சரிசமமான தொடர்பையும் உறவையும் அவருடன் பேணுகின்ற திட்டத்துடன் அவரை மகன், மகள் உள்ளிட்ட உறவுகளைச் சொல்லி அழைப்பது திண்ணமாக கண்டனத்துக்குரிய குற்றமாகும். அது குறித்து கண்டிப்பாக விசாரிக்கப்படும்.

11. ‘இது தொடர்பாக இதற்கு முன்பு நடந்த பிழைகளையும் தவறுகளையும் அல்லாஹ் மன்னித்துவிட்டான். அவற்றைக் குறித்து இப்போது எந்தவிதமான விசாரணையோ, தண்டனையோ இருக்காது’ என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். இரண்டாவதாக, ‘அடியான் அறியாமல் செய்த செயல்களுக்காக அவனை அல்லாஹ் தண்டிக்க மாட்டான். வெளிப்புறத் தோற்றமும் வடிவும் தடுக்கப்பட்ட செயலை ஒத்ததாக இருந்தாலும் தடுக்கப்பட்ட செயலைச் செய்கின்ற எண்ணம் அதற்குப் பின்புலத்தில் இருக்கவில்லையெனில் வெறுமனே செயலின் வெளிப்புறத் தோற்றத்தின் அடிப்படையில் அல்லாஹ் தண்டனை வழங்க மாட்டான்’ என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்