கற்றோரின் சிறப்பு
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் செல்கின்றார் எனில் இறைவன் அவருடைய அந்தச் செயலுக்காக அவரை சுவனத்திற்கான ஒரு பாதையில் போக வைக்கின்றான். அறிவைத் தேடிக் கிளம்பிய அந்த மாணவரின் மகிழ்ச்சிக்காக வானவர்கள் தங்களின் சிறகுகளை விரிக்கின்றார்கள். திண்ணமாக வானங்களிலும் பூமியிலும் இருக்கின்ற அனைத்தும் அறிஞரின் ஈடேற்றத்திற்காகப் பிரார்த்திக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தண்ணீரில் இருக்கின்ற மீன்களும் (அவருக்காகப் பிரார்த்திக்கின்றன).
மற்ற இரவுகளை விட பௌர்ணமி இரவு தனிச்சிறப்பு மிக்கதாய் இருப்பதைப் போல வணக்கசாலியை விட அறிஞர் சிறப்புவாய்ந்தவர் ஆவார்.1 ஐயத்திற்கிடமின்றி அறிஞர்கள் தாம் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். இறைத்தூதர்கள் தீனார்கள், திர்ஹம்கள் ஆகியவற்றின் வாரிசுகளாய் எவரையும் ஆக்கியதில்லை. அவர்கள் அறிவைத்தான் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். எவர் அறிவை ஈட்டிக்கொள்கின்றாரோ அவர்தான் முழுமையான பங்கினை அடைந்தவர் ஆவார்’.2
அறிவிப்பாளர் : அபூதர்தா(ரலி) நூல் : ரஜீன்
1. அபூஉமாமா(ரலி) அவர்களின் அறிவிப்பில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன: ‘உங்களில் ஒருவரை விட எனக்கு எந்த அளவுக்குச் சிறப்பு இருக்கின்றதோ அந்த அளவுக்கு வணக்கசாலியை விட அறிஞர் சிறப்பு வாய்ந்தவர் ஆவார்.’(திர்மிதி)
2. இஸ்லாத்தில் கல்விக்கு எந்த அளவு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது என்பதை எளிதாக கணித்துக் கொள்ளலாம். இறைத்தூதர்கள் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட போது அவர்கள் கொண்டு வந்த ஒரே செல்வம் மார்க்க அறிவு மட்டுமே. அதனைத்தான் அவர்கள் தமக்குப் பின்னால் பங்கிட்டுக்கொள்ளப்பட வேண்டிய சொத்தாக (டூஞுஞ்ச்ஞிதூ) விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
இந்தச் சொத்து எல்லோருக்கும் பொதுவானதாய் விட்டுச் செல்லப்பட்டிருக்க, அதிலிருந்து பயன்பெறத் தவறுவதை விட வாய்ப்புக்கேடு வேறு எதுவும் இல்லை. எவர் அந்த அறிவை வளர்த்துக்கொள்கின்றாரோ அவர்தான் உண்மையில் இறைத்தூதர்கள் விட்டுச் சென்ற சொத்தின் முழுமையான பங்கை அடைந்தவர் ஆவார். எண்ணிக்கையில் குறைவானவற்றுக்குப் பதிலாக அதிக எண்ணிக்கை கொண்டவற்றுக்கும், மதிப்பில்லாதவற்றுக்குப் பதிலாக மதிப்புள்ளவற்றுக்கும் அவர் முன்னுரிமை கொடுத்து விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
பேரண்டத்தில் இருக்கின்ற படைப்புகள் அனைத்துமே கற்றறிந்த அறிஞரை நேசிக்கின்றன. பேரண்டம் முழுவதிலும் அந்த அன்பின் வாசத்தை எடுப்பாக உணர முடியும். இன்னும் சொல்லப் போனால் வானவர்களும் இத்தகைய மனிதர் மீது அளவிலா அன்பு கொள்கின்றனர்.