நகரின் நாற்புறங்களிலிருந்தும் எதிரிகள் ஊடுருவி, பிறகு குழப்பம் விளைவிக்குமாறு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தால்26 அதற்கு இவர்கள் தயாராய் இருந்திருப்பார்கள். குழப்பத்தில் பங்கு பெறுவதில் அவர்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்காது, சிறிதளவே தவிர! இதற்கு முன்னரோ ‘புறங்காட்டி ஓட மாட்டோம்’ என்று அல்லாஹ்விடம் இவர்கள் வாக்குறுதி தந்திருந்தார்கள். மேலும், அல்லாஹ்விடம் அளித்திருந்த வாக்குறுதி விசாரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது.27
(நபியே!) நீர் இவர்களிடம் கூறும்: ‘நீங்கள் மரணத்திலிருந்து அல்லது கொல்லப்படுவதிலிருந்து ஓடினால் அவ்வாறு ஓடுவது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. அதன் பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க சிறிதளவு சந்தர்ப்பமே உங்ளுக்குக் கிடைக்கும்.28 மேலும், இவர்களிடம் கேளும்: ‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்களிக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? அவன் உங்கள் மீது கருணை பொழிய நாடினால் அவனுடைய கருணையைத் தடுக்க யாரால் முடியும்?’ அல்லாஹ்வுக்கு எதிராக எந்த ஆதரவாளரையும் உதவியாளரையும் இவர்கள் காணமாட்டார்கள்.
உங்களில் எவர்கள் (போர்ப் பணிகளில்) இடையூறு விளைவிக்கின்றார்களோ அவர்களையும், மேலும், ‘எங்களிடம் வந்துவிடுங்கள்’ என்று தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்றவர்களையும் அல்லாஹ் நன்கறிவான்.29 மேலும், அவர்கள் போரில் பங்கு கொண்டாலும், பெயரளவுக்குத்தான் பங்கு பெறுவார்கள். உங்களுக்கு உதவுவதில் அவர்கள் கடும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருப்பார்கள்.30 ஆபத்தான நேரம் வந்துவிட்டாலோ, மரணத் தருவாயில் இருப்பவனுக்கு மயக்கம் வருவது போன்று கண்களைச் சுழற்றியவாறு உம் பக்கம் பார்ப்பார்கள். ஆனால், ஆபத்து நீங்கிவிட்டாலோ, இதே மக்கள் ஆதாயங்களின் மீது பேராசை கொண்டவர்களாய் (கத்தரிக்கோலைப் போன்று) கூர்மையான நாவுகளோடு உங்களை வரவேற்க வந்து விடுகின்றார்கள்.31 இத்தகையவர்கள் அறவே நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அல்லாஹ் இவர்களுடைய செயல்கள் அனைத்தையும் வீணாக்கிவிட்டான். மேலும், இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்து மிகவும் எளிதானதாகும்.
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் திருவசனங்கள் : 14-19
26. ஒரு வேளை வெற்றி வாகை சூடிய பிறகு இறைமறுப்பாளர்கள் நகரத்துக்குள் நுழைந்த பிறகு, ‘வாருங்கள். எங்களுடன் சேர்ந்து இந்த முஸ்லிம்களை தீர்த்துக் கட்டுங்கள்’ என்று அழைப்பு விடுத்திருந்தால்..
27. உஹதுப் போரின் போது இவர்கள் தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்திய பிறகு வெட்கப்பட்டும் மனம் நொந்தும் இவர்கள், ‘இனி வருங்காலத்தில் சோதனைக்கான ஏதேனும் சந்தர்ப்பம் கிடைக்குமேயானால் எங்களின் இந்தப் பிழையை அப்போது ஈடு செய்வோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால் வெற்று வார்த்தைகளால் அல்லாஹ்வை ஏமாற்றி விட முடியாது. அல்லாஹ்விடம் எந்த மனிதர் எந்தவொரு வாக்குறுதி அளித்தாலும் அந்த மனிதர் உண்மையாளரா, பொய்யரா என்பது அம்பலமாகின்ற வகையில் அல்லாஹ் ஏதேனுமொரு வகையான சோதனைக்கு ஆளாவதற்கான சந்தர்ப்பத்தை அவசியம் ஏற்படுத்துகின்றான்.
இதனால்தான் உஹதுப் போர் நடந்த இரண்டே ஆண்டுகளில் அதனைவிட பெரும் ஆபத்துகளுக்கு அவர்களை ஆட்படுத்தினான். அதனைக் கொண்டு அவர்கள் எந்த வகையான உண்மையான வாக்குறுதி அளித்தவர்கள் என்பதை அவன் ஆய்ந்து அறிந்து கொண்டான்.
28. இந்த ஓட்டத்தால் உங்களின் ஆயுள் சிறிதும் கூடிவிடப் போவதில்லை. இதன் விளைவாக நீர் ஒருபோதும் மறுமைநாள் வரை வாழப் போவதுமில்லை; உலகத்தின் அத்துணை வளங்களையும் சம்பாதித்துக் கொள்ளப் போவதுமில்லை. போர்க்களத்திலிருந்து ஓட்டம் எடுத்த பிறகும் மிதமிஞ்சிப் போனால் ஒரு சில ஆண்டுகள் மட்டும்தாம் உயிர் வாழ்வீர்கள். மேலும், உம்முடைய விதியில் எந்த அளவுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த அளவுக்கே உலக இன்பங்களைச் சுவைப்பீர்கள்.
29. இந்த இறைத்தூதருக்கு ஆதரவளிப்பதை விட்டுவிடுங்கள். மார்க்கம், ஈமான், சத்தியம், உண்மை போன்ற சர்ச்சைகளில் எதற்காக விழுந்து கிடக்கின்றீர்? உங்களை நீங்களே ஆபத்துகளிலும் துன்பங்களிலும் ஆட்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக எங்களைப் போன்று நலங்களுக்கும் ஆதாயங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
30. தம்முடைய நேரத்தையோ, தம்முடைய உழைப்பையோ, தம்முடைய பணத்தையோ, தம்முடைய சிந்தனையையோ இன்னும் சொல்லப் போனால் தமக்குரிய எதனையும் இந்த வழியில் - இறைநம்பிக்கையாளர்களும் உண்மையாளர்களும் தம்மிடம் இருக்கின்ற அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற வழியில் - செலவிடுவதற்கு அவர்கள் ஒருபோதும் மன மகிழ்வோடு ஆயத்தமாகவில்லை. உயிரை அர்ப்பணிப்பதும், ஆபத்துகளோடு விளையாடுவதும் மிகப் பெரும் விஷயங்கள். அவர்களோ எந்தவொரு பணியிலும் திறந்த மனத்துடன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கவும் விரும்பவில்லை.
31. அகராதிப் பொருளின் படி இந்த வசனத்திற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று, போர்க்களத்திலிருந்து நீங்கள் வெற்றி வாகை சூடி திரும்புகின்ற போது அவர்கள் உங்களை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள். வாய் இனிக்கப் பேசி தம்மையும் பெரும் நம்பிக்கையாளர்களாய்க் காட்டிக் கொண்டும், இஸ்லாத்தைச் செழித்தோங்கச் செய்கின்ற அறப்பணியில் தாமும் பங்கேற்றதாக சாதித்தும் போர்க்களத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்களில் தமக்கும் பங்கு இருப்பதாக வாதிடுகின்றார்கள்.
இரண்டாவது, போரில் வெற்றி கிடைக்கின்ற போது போர்க்களத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் விநியோகிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவர்கள் நாவன்மையை வெளிப்படுத்தி அதட்டிஉருட்டி பேசுகின்றார்கள். எங்களின் பங்கை கொடுத்துவிடுங்கள்; நாங்களும்தாம் மிகப் பெரும் சேவையாற்றி இருக்கின்றோம்; எல்லாவற்றையும் நீங்களே கொள்ளை யடித்துக் கொண்டு போய் விடுகிறீர்களா, என்ன என்று மிரட்டுகின்ற தொனியில்
பெரும் பெரும் கோரிக்கைகளை வைக் கின்றார்கள்.
(தொடரும்)