மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அழகிய முன்மாதிரி
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், ஜூலை 01-15, 2024



உங்களுக்கு உதவுவதில் அவர்கள் கடும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருப்பார்கள். ஆபத்தான நேரம் வந்துவிட்டாலோ, மரணத் தருவாயில் இருப்பவனுக்கு மயக்கம் வருவது போன்று கண்களைச் சுழற்றியவாறு உம் பக்கம் பார்ப்பார்கள். ஆனால், ஆபத்து நீங்கிவிட்டாலோ, இதே மக்கள் ஆதாயங்களின் மீது பேராசை கொண்டவர்களாய் (கத்தரிக்கோலைப் போன்று) கூர்மையான நாவுகளோடு உங்களை வரவேற்க வந்துவிடுகின்றார்கள். இத்தகையவர்கள் அறவே நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அல்லாஹ் இவர்களுடைய செயல்கள் அனைத்தையும் வீணாக்கிவிட்டான்.32 மேலும், இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்து மிகவும் எளிதானதாகும்.33

இவர்கள் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்; தாக்க வந்த கூட்டத்தார் இன்னும் திரும்பிச் செல்லவில்லை என்று! அவர்கள் மீண்டும் தாக்க வந்துவிட்டாலோ, அப்போது எங்கேனும் (பாலைவனத்தில்) நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட வேண்டும். மேலும், அங்கிருந்தவாறு உம்முடைய நிலைமையைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். ஒரு வேளை இவர்கள் உங்கள் மத்தியில் இருந்தாலும் போரில் குறைவாகவே பங்கு பெறுவார்கள்.

உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது34 - உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!35

Ž அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் Ž திருவசனங்கள் : 19-21


32. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட திலிருந்து அவர்கள் தொழுத தொழுகைகள், அவர்கள் நோற்ற நோன்புகள், அவர்கள் கொடுத்த ஜகாத் தொகை, அவர்கள் வெளிப்படையாக மேற்கொண்ட நல்லறங்கள் அனைத்தையும் செல்லாது என அல்லாஹ் அறிவித்து விடுவான். மேலும் அவர்களுக்கு எந்தவிதமான நற்கூலியையும் தர மாட்டான். ஏனெனில் அல்லாஹ் அறங்களின் புறத்தோற்ற வடிவங்களைப் பார்த்து தீர்ப்பளிப்பதில்லை. அதற்கு மாறாக அந்தப் புறத்தோற்ற வடிவங்களின் பின்புலத்தில் ஈமானும் இக்லாஸ் என்கிற உளத்தூய்மையும் இருக்கின்றனவா இல்லையா என்று ஆய்ந்து பார்த்தே தீர்ப்பளிக்கின்றான். இவ்விரண்டும் அறவே இல்லாமல் போகின்ற போது வெளிப் பகட்டுக்கான இந்த அறங்கள் முழுக்க முழுக்க அர்த்தமற்றவையே.

எந்த மக்கள் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதரின்மீதும் நம்பிக்கை கொண்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்து வந்தார்களோ, எவர்கள் தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்களோ, நோன்புகளை நோற்று வந்தார்களோ, ஜகாத்தும் கொடுத்து வந்தார்களோ, முஸ்லிம்களுடன் சேர்ந்து அவர்கள் செய்து வந்த நல்லறங்களிலும் நன்மையான செயல்களிலும் பங்கேற்று வந்தார்களோ அவர்களைக் குறித்து, ‘இந்த மக்கள் இம்மியளவுகூட நம்பிக்கை கொள்ளவே இல்லை’ என அழுத்தம் திருத்தமாக அறிவிக்கப்படுவது இங்கு ஆழ்ந்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.

இறைமறுப்புக்கும் இறைநம்பிக்கைக்கும் இடையிலான போராட்டத்தில் கடுமையான சோதனைக்கான நேரம் வந்த போது இரட்டை வேடத்துடன் நடந்து கொண்டவர்களா இவர்கள் என்கிற அடிப்படையிலும், மார்க்கத்தின் நலன்களா, சுய இலாபங்களா என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வந்த போது சுய ஆதாயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் இஸ்லாத்தின் பாதுகாப்புக்காக தம்முடைய உயிர், உடைமை, உழைப்பு ஆகியவற்றை செலவிடுவதைத் தவிர்த்துக் கொண்டவர்களா, இவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டும்தாம் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆக தீர்ப்புகளை உண்மையிலேயே தீர்மானிப்பது ஒருவரின் விசுவாசங்கள் எந்தப் பக்கம் இருக்கின்றன என்கிற விவரம்தானே தவிர, நல்லறங்களின் புறத்தோற்ற வடிவங்களைக் கருத்தில் கொண்டு தீர்ப்புகள் வழங்கப்பட மாட்டாது என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. ஒருவரிடம் இறைவன் மீதான விசுவாசமோ, அவனுடைய மார்க்கத்தின் மீதான விசுவாசமோ இல்லாத போது அவருடைய இறைநம்பிக்கைக்கும் வழிபாடுகளுக்கும் மற்ற நல்லறங்களுக்கும் எந்த மதிப்பும் இருக்காது.

33. அவர்களின் நல்லறங்களை வீணாக்கி விடுவது இறைவனுக்கு பாரமாகத் தோன்றுகின்ற அளவுக்கு அவர்களின் அறங்களுக்கு எந்தவிதமான மதிப்போ கனமோ இல்லை. இவர்களின் அறங்களை வீணாக்குவது அவனுக்குச் சிரமமாகி விடுகின்ற அளவுக்கு இவர்கள் வலிமை பெற்றவர்களும் அல்லர்.

34. இதற்கு முந்தைய வசனங்களின் விவாதப்பொருளைக் கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது நபிகளாரின் நடைமுறையை இந்த இடத்தில் அழகிய முன்மாதிரி யாக அறிவிப்பதற்கான நோக்கம் அகழ்ப்போரின் போது சொந்த ஆதாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தவாறும் உடம்பு நோகாமலும் நடந்து கொண்ட மக்களுக்குப் பாடம் புகட்டுவதுதான் என்பது தெளிவாகின்றது.

அவ்வாறு நடந்து கொண்ட மக்களை விளித்து, ‘நீங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களாய், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களாய், நபிகளாரைப் பின்பற்றி நடப்பவர்களாய் உங்களை நீங்களே சொல்லிக் கொண்டீர்கள். எந்த இறைத்தூதரைப் பின்பற்றுபவர்களின் வரிசையில் நீங்கள் சேர்ந்திருந்தீர்களோ அந்த இறைத்தூதர்(ஸல்) அந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டாமா?

ஓர் அமைப்பின் தலைவரே சொகுசை விரும்புபவராக, உடம்பு நோகாமல் இயங்குபவராக, உடல் வருத்தங்களையும் சிரமங்களையும் தவிர்ப்பவராக, எந்நேரமும் தம்முடைய ஆதாயங்களைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவராக, ஆபத்துகள் சூழ்கின்ற போது களத்தை விட்டு ஓடிச் செல்வதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக இறங்கி விடுபவராக இருந்தால் அவரைப் பின்பற்றி நடப்பவர்களிடம் இது மாதிரியான பலவீனங்கள் வெளிப்படுவது அறிவுக்குப் பொருத்தமானதாய் இருந்திருக்கும்.

ஆனால் இங்கோ நபிகளாரின் நிலைமை எத்தகையதாய் இருந்ததெனில் மற்ற தோழர்களிடம் என்னென்ன சிரமங்களைச் சகித்துக்கொள்ள முன்வருமாறு அழைப்பு விடுத்தார்களோ அவற்றை மற்ற தோழர்களுடன் தோளோடு தோளாக நின்று சகித்துக் கொண்டார்கள். இன்னும் ஒரு படி மேலாக மற்றவர்களை விட அதிகமாக சிரமங்களை எடுத்துக்கொண்டார்கள். மற்றவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் நபிகளாரும் அனுபவித்தார்கள். அகழிகளைத் தோண்டுகின்ற பணியிலும் நபிகளார்(ஸல்) பங்கேற்றார்கள். பசியையும், சிரமங்களையும் அனுபவிப்பதில் ஒரு சாதாரண முஸ்லிமுக்கு சரி சமமாக நபிகளாரும் இருந்தார்கள்.

முற்றுகையின் போது எல்லாத் தருணங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நபிகளார்(ஸல்) போர்க் களத்தில்தான் இருந்தார்கள். ஒரே ஒரு நிமிடம் கூட எதிரிகளுக்கு எதிராக மல்லுக் கட்டி நிற்பதிலிருந்து விலகிச் செல்லவில்லை. பனூ குறைழா கோத்திரத் தாரின் நம்பிக்கைத் துரோகத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வீட்டாரும் குழந்தைகளும் எந்த அச்சுறுத்தலுக்கு ஆளானார்களோ அதே அச்சுறுத்தலுக்கு நபிகளாரின் வீட்டாரும் குழந்தைகளும் ஆளானார்கள். நபிகளார்(ஸல்) தம்முடைய குடும்பத்தாரின், குழந்தைகளின் பாதுகாப்புக்காக மற்ற முஸ்லிகளுக்கு இல்லாத எந்தவொரு விசேஷமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ததில்லை.

எந்த மகத்தான இலட்சியத்துக்காக தியாகங்களைச் செய்யுமாறு நபிகளார்(ஸல்) மற்றவர்களிடம் கோரினார்களோ அதற்காக தியாகங்களைச் செய்வதில் முதலாமவராக, மற்ற அனைவரையும் விட அதிகமான அளவில், தம்மிடம் இருந்த அனைத்தையும் தியாகங்களைச் செய்வதற்கும் ஆயத்தமானவர்களாகத்தாம் நபிகளார்(ஸல்) இருந்தார்கள். எனவே நபிகளாரைப் பின்பற்றி நடப்பதாகச் சொல்லிக் கொள்கின்றவர்கள் அனைவரும் நபிகளாரின் இந்த முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பது அவசியமாகும்.

முந்தைய வசனங்களின் விவாதப்பொருளைக் கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது இதுதான் இந்த வசனத்திற்கான பொருளாகும். ஆனால் இங்கு பொதுவான சொற்கள்தாம் ஆளப்பட்டிருக்கின்றன. எனவே இந்தச் சொற்களின் பொருளை வெறுமனே முந்தைய வசனங்களின் விவாதப்பொருளோடு மட்டும் குறுக்கி வைத்துக் கொள்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்தக் கோணத்தில் தான் நபிகளாரின் வாழ்க்கை முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக இருக்கின்றது என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக நபிகளாரை அழகிய முன்மாதிரியாக அறுதியிட்டும் அழுத்தம் திருத்தமாகவும் அறிவித்திருக்கின்றான். எனவே ஒவ்வொரு முஸ்லிமும் தம்முடைய வாழ்வின் எல்லா விவகாரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நபிகளாரை தமக்கான முன்மாதிரியாகக் கருதுவதும், மேலும் நபிகளாரின் அழகிய முன்மாதிரிக்கேற்ப தம்முடைய நடத்தையையும் வாழ்வையும் வார்த்தெடுத்துக் கொள்வதும் அவசியமாகும்.

35. அல்லாஹ்வை மறந்து அலட்சியமாக வாழ்பவர்களுக்கு நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரியாக இல்லை. அதற்கு மாறாக எப்போதாவது எங்கேயாவது ஏதேனுமோர் தருணத்தில் தற்செயலாக அல்லாஹ்வை நினைவுகூர்பவராக அல்லாமல் மிக அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூர்பவராக, நினைவில் வைத்திருப்பவராக இருக்கின்றவருக்கு அழகிய முன்மாதிரி ஆகும்.

இதே போன்று அல்லாஹ்விடம் எந்தவொரு எதிர்பார்ப்பையும் வைத்திராத, மேலும் மறுமை நிகழப் போகின்றது என்கிற எந்தவொரு நம்பிக்கையும் கொண்டிராத மக்களுக்கு நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரியாக இல்லை. அதற்கு மாறாக அல்லாஹ்விடமிருந்து அருட்கொடைகளையும் வெகுமதிகளையும் நன்மைகளையும் எதிர்பார்க்கின்ற, மறுமை நாள் என்று ஒன்று வரப் போகின்றது என்பதை நம்புகின்ற, இந்த உலக வாழ்வில் தம்முடைய நடத்தையும் வாழ்வும் நபிகளாரின் வாழ்வுக்கும் நடத்தைக்கும் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கின்றது என்பதைப் பொருத்தே அந்த மறுமையின் நன்மைகள் அமையும் என்று நம்புகின்ற மனிதர்களுக்கு நபிகளாரின் வாழ்க்கை நிச்சயமாக ஓர் அழகிய முன்மாதிரியாகும்.

(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்