மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

கூட்டு வியாபார ஒழுங்குகள்
* மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, ஜூலை 01-15, 2024நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ‘நான் இரண்டு பங்குதாரர்களுடன் அவர்களில் ஒருவர் மற்றவரை மோசடி செய்யாத வரையில் மூன்றாமவனாக இருக்கின்றேன். அவர்கள் ஒருவர் மற்றவரை ஏமாற்றத் தொடங்கி விடுகின்றபோது நான் அவர்களிடமிருந்து அகன்று விடுகின்றேன்.’

ரஜீன்(ரலி) அவர்கள் இந்த அறிவிப்பின் இறுதியில் வஹயாஅஷ் ஷைத்தான் ‘அதன் பிறகு ஷைத்தான் அவர்கள் மத்தியில் வந்துவிடுகின்றான்’ என்கிற வாசகத்தையும் பதிவு செய்திருக்கின்றார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) நூல் : அபூதாவூத்


கூட்டு வியாபாரத்தில் பங்கேற்பது கூடும் என்பற்கான ஆதாரம் இந்த நபிமொழியிலிருந்து நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. இவ்வாறு வியாபாரத்தில் கூட்டுச் சேர்கின்ற பங்குதாரர்கள் நேர்மையுடனும் வாய்மையுடனும் செயல்படுதல் வேண்டும்; எந்தவிதமான மோசடியிலும் ஈடுபடாதவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள் நேர்மையாகவும் அமானிதத்தைப் பேணியும் நடக்கின்ற வரை இறைவனின் உதவி அவர்
களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறைவன் அவர்களின் வியாபாரத்தைச் செழித் தோங்கச் செய்கின்றான்; அவர்கள் இழப்புக்கு ஆளாவதிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றான்.

ஆனால் வியாபாரப் பங்குதாரர்கள் ஒருவர் மற்றவரை ஏமாற்றத் தொடங்குகின்றபோது இறைவனின் உதவி அவர்களுக்குக் கிடைக்காமல் போகின்றது. போதாக்குறைக்கு ஷைத்தானும் அவர்களின் மத்தியில் வந்துவிடுகின்றான். இது எங்கு போய் முடியும்? அழிவிலும் இழப்பிலும்தான் போய் முடியும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் தங்களுடைய முதலீட்டை ஒன்று சேர்த்து அதனைக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டால் அல்லது ஏதேனும் தொழிலில் முதலீடு செய்தால் அதனைக் கூட்டு வியாபாரம் எனச் சொல்கின்றோம். இது பல்வேறு வடிவங்களில் நடக்கலாம்.

எடுத்துக்காட்டாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் தம்முடைய பொருளை முதலீடு செய்து வணிகம் செய்கின்றார்கள். தாம் போட்ட முதலீட்டின் விகிதத்திற்கேற்ப ஒவ்வொரு வரும் தமக்குரிய இலாபத்தை ஈட்டிக் கொள்கின்றார்கள். இழப்பையும் அதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றார்கள். இந்த வகையான கூட்டு வியாபாரத்தை ஷிர்கத் அனான் என்று சொல்வார்கள்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், தேர்ச்சி பெற்ற தொழில் முனைவர்கள் ‘கிடைக்கின்ற கூலியை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் பங்கிட்டுக்கொள்வது’ என்கிற நிபந்தனையின் கீழ் ஒன்றுசேர்ந்து செயலாற்றுவது. இதனை ஷிர்கத்தே அஃமால், ஷிர்கத் ஸாயிஃ, ஷிர்கத் தகப்புல் என்று சொல்வார்கள்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து வியாபாரிகளிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்து எடுத்துக் கொண்டு வருவார்கள். அதனைச் சந்தையில் விற்பார்கள். கிடைக்கின்ற இலாபத்தையும் இழப்பையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விகிதத்தில் பங்கிட்டுக் கொள்வார்கள். இந்த வகையான கூட்டு வியாபாரத்தை ஷிர்கத் வஜூஹ் என்று சொல்வார்கள்.

இதுபோன்ற கூட்டு வியாபாரங்கள் அனைத்தும் பொருத்தமானவையே. ஒரே ஒரு நிபந்தனை. ஷரீஅத் விதிக்கின்ற விதிமுறைகள், நடைமுறைகள் ஆகியவற்றில் எந்தவொரு அம்சமும் விட்டுவிடப் படக்கூடாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்