நபியே! நீர் உம்முடைய மனைவியரிடம் கூறிவிடும்: ‘நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகின்றீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) - உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயார் செய்து வைத்துள்ளான்42
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் திருவசனங்கள் : 28, 29
42. கடந்த இதழில் வெளியான அடிக் குறிப்பு எண் 42இல் ‘தஃப்வீஸ் ஏ தலாக்’ குறித்து பிக்ஹு வல்லுநர்கள் அளித்த சட்ட விவரங்கள் பின்வருமாறு :
1. பெண்ணுக்கு இந்த உரிமையை ஒரு முறை கொடுத்துவிட்ட பிறகு கணவன் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது. மேலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று தனது மனைவியைத் தடுப்பதற்கும் அவருக்கு உரிமை இல்லை. அதே சமயம் இந்த உரிமையைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் பெண்ணுக்கு இல்லை. அவள் விரும்பினால் கணவனோடு சேர்ந்து வாழ்வதற்கே விரும்புவதாக அறிவித்து விடலாம் அல்லது விரும்பினால் தனித்து, பிரிந்து போவதாகச் சொல்லிவிடலாம். மேலும் அவள் விரும்பினால் எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தாமல் அந்த உரிமையை ஒரு முறை கூட பயன்படுத்தாமலேயே அதனை வீணடித்துவிடலாம்.
2. இந்த அதிகாரத்தைப் பெண் வசம் மாற்றுவதற்கு இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. முதலாவதாக கணவன் தெள்ளத்தெளிவான, திட்டவட்டமான சொற்களில் தன்னுடைய மனைவிக்கு இந்த உரிமையை தந்திருக்க வேண்டும். அல்லது தெள்ளத்தெளிவாக, திட்டவட்டமாக தலாக் குறித்து குறிப்பிடாமல் இருந்தாலும் அதுவே அவரு டைய எண்ணமாக இருந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘உனக்கு அந்த அதிகாரம் உண்டு’ என்று அவர் சொல்லி இருந்தாலோ ‘உன்னுடைய விவகாரம் உன்னுடைய கையில் இருக்கின்றது’ என்று சொல்லியிருந்தாலோ அத்தகைய நிலையில் ‘தலாக் செய்கின்ற உரிமை’ மனைவி வசம் மாற்றலாகாது. அவன் அப்படித்தான் சொன்னான் என்று மனைவி வாதிட, ‘தலாக் செய்கின்ற உரிமையை’ மனைவிக்குத் தருவது தன்னுடைய எண்ணமாக இருக்கவில்லை என்று கணவன் சொல்வானேயானால் கணவனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். மோதலும் பிணக்கும் உச்சத்தில் இருந்த வேளையிலோ தலாக் பற்றிய பேச்சின் போதோ அதனைச் சொன்னதாக - ஏனெனில் பேசுபொருளே அதுவாக இருக்கின்ற போது ‘அந்த அதிகாரம் உண்டு’ என்று சொன்னதற்கு தலாக் செய்கின்ற உரிமையைத் தருவதுதான் கணவனின் எண்ணமாக இருந்தது என்றே பொருள் கொள்ளப்படும்.
இரண்டாவது நிபந்தனை என்னவெனில் தமக்கு இந்த அதிகாரம் தரப்படுவதை மனைவி அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்ட போது அவள் அந்த இடத்தில் இருக்கவில்லையெனில் பிற்பாடு அவளுக்கு அது பற்றிய தகவல் கிடைக்க வேண்டும். மேலும் அவள் அந்த இடத்தில் இருந்தாலோ இந்தச் சொற்கள் அவளுடைய காதுகளில் விழ வேண்டும். அவள் அந்தச் சொற்களைக் கேட்காத வரையில் அல்லது அது பற்றிய தகவல் அவளுக்குக் கிடைக்காத வரையில் அந்த அதிகாரம் அவள் வசம் மாறாது.
3. கணவன் எந்தவொரு காலக்கெடுவையும் நிர்ணயிக்காமல் வரையறை இன்றி அந்த அதிகாரத்தை மனைவிக்கு வழங்கியிருந்தால் அவள் அதனை எந்த நாள் வரையில் பயன்படுத்த முடியும்? இந்த விவகாரத்தில் ஃபிக்ஹு அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஒரு குழுவினர் கணவன் எந்த அமர்வில் மனைவிக்கு இந்த அதிகாரத்தைத் தருகின்றானோ அந்த அமர்வில் மட்டுமே அவளால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்; அவள் எந்தவொரு பதிலும் கூறாமல் அந்த அமர்வை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டாலோ அதன் பிறகு வேறு ஏதேனுமோர் வேலையில் மூழ்கிவிட்டாலோ அதுவே அவள் இந்த விவகாரத்தில் எந்தவொரு பதிலையும் தர விரும்பவில்லை என்பதற்கான சான்றாகிவிடும்; மேலும் அந்த அதிகாரமும் நீங்கிவிடும் என்று அறிவித்திருக்கின்றார்கள்.
உமர்(ரலி), உஸ்மான்(ரலி), இப்னு மஸ்ஊத்(ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), ஜாபிர் பின் ஜைத்(ரலி), அதா, முஜாஹித், ஷாபி, நக்யீ, இமாம் மாலிக், இமாம் அபூஹனீஃபா, இமாம் ஷாஃபி, இமாம் அவ்ஸாயி, சுஃப்யான் சௌரி, அபூ ஸவ்ர் ஆகியோர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இரண்டாவது குழுவினரோ இந்த அதிகாரம் அந்த அமர்வு வரையில் குறுக்கப்பட்டதாக இராது; அதற்கு மாறாக ஒரு பெண் அந்த அமர்வுக்குப் பிறகும்கூட இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என அறிவித்திருக்கின்றார்கள். ஹஸன் பஸரி, கதாதா, ஜுஹ்ரி ஆகியோர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
4. கணவன் காலக்கெடுவை நிர்ணயித்துவிட்டாலோ, எடுத்துக்காட்டாக ஒரு மாதம் வரையில் அல்லது ஓராண்டு வரையில் உனக்கு இந்த அதிகாரம் உண்டு அல்லது இன்ன காலகட்டம் வரையில் உன்னுடைய விவகாரம் உன் வசம் இருக்கும் என்று சொல்லிவிட்டால் பெண்ணுக்கு அந்தக் குறிப்பிட்ட காலகட்டம் வரையில் மட்டுமே அந்த அதிகாரம் இருக்கும். அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள உமக்கு உரிமை உண்டு என்று அவன் சொல்லியிருந்தாலோ இந்த அதிகாரம் எந்தவிதமான கால வரையறையுமின்றி பெண் வசம் இருக்கும்.
5. திருமண பந்தத்தை விட்டு வெளியேறி தனித்துச் செல்ல பெண் விரும்பினால் அவள் தன்னுடைய விருப்பத்தை தெள்ளத்தெளிவாகவும் திட்டவட்டமான சொற்களிலும் வெளிப்படுத்த வேண்டும். தெளிவற்ற, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுக்கு இடம் தரக்கூடிய சொற்களில் - நோக்கத்தைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தாத, தீர்க்கமானதாக அல்லாத சொற்களில் சொல்லக் கூடாது.
6. கணவன் தரப்பிலிருந்து பெண்ணுக்கு அதிகாரத்தை சட்டரீதியாக மூன்று வடிவங்களில் வழங்க முடியும். ஒன்று, ‘உன்னுடைய விவகாரம் உன்னுடைய கைகளில் இருக்கின்றது’ என்று கணவன் சொல்லிவிடுதல். இரண்டாவதாக, ‘உனக்கு அதிகாரம் இருக்கின்றது’ என்று அவன் சொல்லுதல். மூன்றாவதாக, ‘நீ நாடினால் உனக்கு தலாக் ஆகிவிடும் (மணமுறிவு நிகழ்ந்துவிடும்)’ என்று சொல்லுதல். இவற்றில் ஒவ்வொன்றின் சட்டரீதியான விளைவுகளும் தனித்தனியாகவே அமைந்திருக்கும்:
அ. ‘உன்னுடைய விவகாரம் உன்னுடைய கைகளில் இருக்கின்றது’ என்கிற வாசகங்களை கணவன் சொல்லியிருந்தாலோ, மேலும் அதற்குப் பதில் தருகின்ற போது மணமுறிவை, பிரிவை தாம் மேற்கொள்வதை உணர்த்துகின்ற விதத்தில் பெண் திட்டவட்டமாக, அழுத்தம் திருத்தமாக எதை யேனும் சொல்லியிருந்தாலோ - அத்தகையச் சூழலில் ஹனஃபிகளைப் பொறுத்தவரை பாயின் வகை தலாக் நிகழ்ந்துவிடும். (அதாவது அதன் பிறகு மீண்டும் ஒன்று சேர்வதற்கான உரிமை கணவனுக்கு இருக்காது. ஆனால் இத்தத் தவணைக் காலம் நிறைவடைந்த பிறகு இந்த இருவரும் விரும்பினால் மீண்டும் நிக்காஹ் செய்து கொள்வது கூடும்).
‘ஒரு தலாக் என்கிற அளவுக்கு உன்னுடைய விவகாரம் உன்னுடைய கையில் இருக்கின்றது’ என்று கணவன் சொல்லியிருந்தாலோ - அத்தகைய சூழலில் ஒற்றை தலாக் ரஜயீ நிகழ்ந்துவிடும். (அதாவது இந்தத் தவணைக் காலம் நிறைவடைவதற்குள்ளாக மீண்டும் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கான உரிமை கணவனுக்கு உண்டு). ஆனால் விவகாரத்தைத் தீர்மானிப்பதற்கான உரிமையை பெண்ணுக்கு வழங்குகின்ற போது மூன்று தலாக்குகளுக்கான எண்ணம் கொண்டிருந்தாலோ, அதனைத் தெள்ளத்தெளிவாக, அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியிருந்தாலோ அத்தகைய சூழலில் பெண் அந்தத் தலாக்கை மேற்கொள்கின்ற போது - அவள் தெள்ளத்தெளிவாக தன் மீது முத்தலாக்கை நிறைவேற்றிக் கொள்வதாகச் சொன்னாலும் சரி, நான் பிரிவை மேற்கொள்கின்றேன் அல்லது நான் எனக்கு நானே தலாக் கொடுத்துவிட்டேன் என்று ஒரே ஒரு முறை சொன்னாலும் சரி - அது நிலையான பிரிவை மேற்கொள்வதாகவே பொருள் கொள்ளப்படும்.
ஆ. ‘உனக்கு அதிகாரம் இருக்கின்றது’ என்கிற வாசகங்களைச் சொல்லி உறவை முறித்துக் கொள்வதற்கான உரிமையை கணவன் பெண்ணுக்கு வழங்கிவிட பெண்ணும் பிரிவை மேற்கொள்வதாகத் திட்டவட்டமாக அறிவித்துவிட அத்தகைய சூழலில் ஹனஃபிகளைப் பொறுத்தவரை பாயின் வகை தலாக் நிகழ்ந்துவிடும். முத்தலாக் தருவதற்கான உரிமையைக் கொடுப்பதுதான் கணவனின் நிய்யத்தாக - எண்ணமாக இருந்தாலும் அது பாயின் வகை தலாக்காகத்தான் கருத்தில் கொள்ளப்படும்.
அதே சமயம் முத்தலாக்கை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரத்தைத் தருவதாக வெளிப்படையாக, தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருந்தாலோ பெண் அதனை மேற் கொள்வதாகத் தெள்ளத்தெளிவாக அறிவிக்கின்ற போது முத்தலாக் நிறைவேறும். இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களைப் பொறுத்தவரை, கணவன் அந்த அதிகாரத்தைக் கொடுக்கின்ற போது ஒற்றை தலாக் செய்வதற்கான நிய்யத் - எண்ணம் கொண்டிருந்தால், மேலும் பெண்ணும் பிரிந்து போவதாக அறிவித்தால் ஒற்றை தலாக் - தலாக் ரஜயீ நிறைவேறி விடும். இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் கூற்றுப் படி இன்பம் துய்க்கப்பட்ட மனைவியாக இருந்தால் அவள் மீது முத்தலாக் நிறைவேறிவிடும். ஆனால் இன்பம் துய்க்கப் படாத மனைவியாக இருந்தால் ஒரு தலாக் கொடுக்கின்ற அதிகாரத்தைத்தான் தந்தேன் என்று கணவன் வாதிட்டால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இ. ‘நீ நாடினால் உனக்கு தலாக் ஆகிவிடும் (மணமுறிவு நிகழ்ந்துவிடும்)’ என்று கணவன் சொல்லிவிட, மனைவியும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றார் எனில் அது தலாக் ரஜயீ - ஆகக் கருதப்படுமே தவிர அது பாயின் வகை தலாக் ஆகாது.
7. பிரிந்து செல்வதற்கான இந்த அதிகாரம் கணவன் தரப்பிலிருந்து மனைவிக்குத் தரப்பட்டுவிட்ட பிறகு பெண் அவனுடைய மனைவியாகவே நீடிப்பதற்குத் தன்னுடைய ஒப்புதலை வெளிப்படுத்திவிடுவாளேயானால் எந்த வகையான தலாக்கும் நிறைவேறாது. இதே கருத்தை உமர்(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), அன்னை ஆயிஷா(ரலி), அபூதர்தா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோரும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்தக் கருத்தையே பெரும்பான்மையான ஃபிக்ஹு வல்லுநர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
மஸ்ரூக் அவர்கள் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் இந்தப் பிரச்னை குறித்து வினவிய போது அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் விடையளித்தார்கள்: ‘நபிகளார்(ஸல்) தம்முடைய மனைவியருக்கு இந்த அதிகாரத் தைத் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் நபிகளாருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பினார்கள். இந்த நிலையில் அதனை தலாக்கின் கீழ் எடுத்துக்கொள்வோமா, என்ன?’ இந்த விவகாரத்தில் அலீ(ரலி), ஜைத் பின் ஸாபித்(ரலி) ஆகியோர் ‘ஒரு தலாக்கே ரஜயீ நிறைவேறிவிடும்’ என்று கருத்துரைத்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் இவ்விரு பெரியார் களுமே, ‘இத்தகைய நிலையில் எந்த வகையான தலாக்கும் நிறைவேறாது’ என்கிற கருத்து கொண்டிருந்தார்கள் என வேறோர் அறிவிப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.
(தொடரும்)