கைபர் செல்வதென நான் தீர்மானித்து விட்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அண்ணல் நபிகளாருக்கு ஸலாம் சொன்னேன். கைபர் போகவிருக்கின்ற என்னுடைய எண்ணத்தையும்திட்டத்தையும் அண்ணல் நபிகளாருக்குத் தெரிவித்தேன்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அங்கு என்னுடைய பிரதிநிதியைச் சந்திப்பீர்களாயின் அவரிடம் பதினைந்து வஸக் அளவுக்குப் பேரீச்சம் பழங்களை வாங்கி வாருங்கள். அவர் ஏதாவது அடையாளம்கேட்டால் உம்முடைய கையை அவருடைய தொண்டையில் வைக்கவும்.’
அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி)
நூல் : அபூதாவூத்
‘உம்முடைய கையை அவருடைய தொண்டையில் வைக்கவும்’
என்பதற்குப் பதிலாக ‘உம்முடைய கையை உம்முடைய தொண்டையில் வைக்கவும்’ என்கிற சொற்களும் சில அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளன.
ஒருவர் இன்ன நகரத்தில் இன்னார் என்கிற ரீதியில் மற்றவர்களைத் தன்னுடைய பிரதிநிதிகளாய் நியமித்துச் செயல்படலாம் என இந்த நபிமொழியிலிருந்து தெரிகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கைபர் நகரத்தில் எந்த மனிதரைத் தனது பிரதிநிதியாக நியமித்திருந்தார்களோ அவருக்குத் தெளிவான வழிகாட்டுதல்களைத் தந்திருக்க வேண்டும்.
என் சார்பாக வருவதாகச் சொல்லிக் கொண்டு எவரேனும் ஒருவர் வந்து உம்மிடம் எதையாவது கேட்பாரேயானால் அவர் என்னிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்தானா என்பதற்கான சான்றினைக் காட்டுமாறு அவருக்குச் சொல்ல வேண்டும்; அவர் தன்னுடைய கையை தனது தொண்டையில் வைப்பாரேயானால் என்னால் அனுப்பப்பட்டவர்தான்
அவர் எனப் புரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே அண்ணல் நபிகளார்(ஸல்) அந்தப் பிரதிநிதியிடம் தெளிவாக வழிகாட்டுதல்களைத் தந்திருக்க வேண்டும்.
கைபருக்குக் கிளம்பிய ஜாபிர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தன் கைபர் நகரத்து பிரதிநிதியிடமிருந்து பதினைந்து
வஸக் அளவுக்குப் பேரீச்சம் பழங்களைத் தருவிப்பதற்காகத் தக்க அடையாளக் குறிப்பினையும் ஜாபிருக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்பினார்கள்.