நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் வெளிப்படையான, மானக்கேடான செயலைச் செய்தால் அவருக்கு இருமடங்கு வேதனை அளிக்கப்படும்.43இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதான காரியமாகும்.44 மேலும், உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், மேலும் நற்செயல் புரிந்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு கூலி வழங்குவோம்.45 மேலும் நாம் அவர்களுக்காக கண்ணியமான நற்பேறுகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்.
நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரண பெண்களைப் போன்றவர்களல்லர்.46 நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாயிருந்தால், மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில், உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும்! ஆகவே, தெளிவாய் - நேர்த்தியாய்ப் பேசுங்கள்.
· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள் : 30 32
43. அல்லாஹ் காப்பாற்றுவானாக! நபி களாரின் தூய்மைமிக்க மனைவியர் ஏதேனுமோர் தகாத செயலில் ஈடுபட்டுவிடுவார்களோ என்கிற அச்சுறுத்தல் இருந்ததாக இதற்குப் பொருள் அல்ல. அதற்கு மாறாக இஸ்லாமிய சமுதாயத்தில் நபிகளாரின் தூய்மைமிக்க மனைவியரின் அந்தஸ்தும் தகுதி நிலையும் எந்த அளவுக்கு உயர்வானதாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அவர்கள் மீதான பொறுப்புகளும் மிகக் கடுமையானவையாய் இருக்கின்றன; எனவே அவர்களின் ஒழுக்க நடத்தையும் மிக மிக தூய்மையானதாய் இருந்தாக வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதுதான் நோக்கமாகும்.
நபிகளாரை விளித்து, ‘நீர் இறைவனுக்கு இணை வைத்தால், உம்முடைய செயல் வீணாகிப் போய்விடும்’ (அத்தியாயம் 39:65) என்று அல்லாஹ் சொல்வதைப் போன்றதுதான் இதுவும். அல்லாஹ் காப்பாற்றுவானாக! நபிகளார்(ஸல்) இறைவனுக்கு இணைவைத்து விடுவார்களோ என்கிற அச்சுறுத்தல் இருந்ததால் இவ்வாறு அறிவுறுத்தப்படுகின்றது என்று இதற்குப் பொருள் அல்ல. அதற்கு மாறாக இறைவனுக்கு இணைவைத்தல் எத்துணை கடுமையான குற்றம் என்பதை உணர்த்தி அதிலிருந்து முற்றாக விலகியிருப்பது கட்டாயம் என்பதை முஸ்லிம் சமுதாயத்துக்கு அறிவுறுத்துவதுதான் இதன் நோக்கமாகும்.
44. இறைத்தூதரின் மனைவியராக இருப்பதால் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்கிற தவறான நம்பிக்கை யில் நீங்கள் இருந்து விட வேண்டாம். அல்லது இந்த உலகத்தில் நீர் பெற்றிருக்கின்ற மிக மிக உயர்வான அந்தஸ்து காரணமாக உம்மைப் பிடிப்பது அல்லாஹ்வுக்குச் சிரமமான காரிய மாகும் என்று நினைத்துக் கொண்டீரா?
45. பாவச் செயல்களுக்கு இரட்டை தண்டனையும் நல்லறங்களுக்கு இரட்டை நற்கூலியும் ஏன் தரப்படுகின்றன எனில், பொதுவாக அல்லாஹ் எந்த மனிதர்களுக்கெல்லாம் மனித சமூகத்தில் மிக மிக உயர்ந்த அந்தஸ்தையும் தனிச் சிறப்பையும் அருள்கின்றானோ அவர்கள் மக்களின் வழிகாட்டிகளாகவே ஆகி விடுகின்றார்கள். மேலும் மனிதர்களில் மிகப் பெரும் எண்ணிக்கையினர் நன்மையிலும் தீமையிலும் அவர்களைப் பின்பற்றி நடக்கத் தொடங்கி விடுகின்றார்கள். அவர்கள் செய்கின்ற தீமை வெறுமனே அவர்களின் தீமையாக மட்டும் இருப்பதில்லை. அதற்கும் மேலாக பெரும் மக்கள் திரள் தீமையில் உழல்வதற்குக் காரணமாக அமைகின்றது. மேலும் அவர்கள் செய்கின்ற நன்மை வெறுமனே அவர்களின் நன்மையாக மட்டும் இருப்பதில்லை. அதற்கும் மேலாக பெரும் மக்கள் நன்மையில் ஈடுபடுவதற்கான காரணமாகவும் அமைகின்றது. இதனால் அவர்கள் ஒரு தீய செயலில் ஈடுபடுகின்ற போது அவர்கள் தங்களின் வழிகேட்டுக்கான தண்டனையுடன் பிற மக்களின் வழிகேட்டுக்கான தண்டனையையும் சேர்த்துப் பெறுகின்றனர். மேலும் அவர்கள் தாம் செய்த நற்செயலுக்கான நற்கூலியைப் பெறுவதுடன் பிற மக்களுக்கும் நல் வழிக்கான பாதையைக் காண்பித்ததற்கான நற்கூலியையும் சேர்த்தே பெறுகின்றனர்.
இந்த வசனத்திலிருந்து பொதுவான விதி ஒன்றையும் உய்த்துணர்ந்து கொள்ள முடியும். அதாவது எந்தவொரு குற்றமாக இருந்தாலும் அது இழைக்கப்படுகிற இடத்தையும், சூழலையும் பொருத்து அதன் கடுமையும் அந்தக் குற்றத்திற்கான தண்டனையும் அதிகரிக்கும். எந்த இடத்தில் அமானிதத்தைப் பேணி நடப்பது மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றதோ அந்த இடத்தில் அமானிதத்தில் மோசடி செய்வது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படும். எடுத்துக்காட்டாக, வீட்டில் மது அருந்துவதைக் காட்டிலும் பள்ளிவாசலில் மது அருந்துவது மிகக் கடுமையான குற்றமாகும். மேலும் அதற்கான தண்டனையும் இன்னும் கடுமையாக இருக்கும். அந்நியப் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுவதைக் காட்டிலும் மஹ்ரம் ஆக்கப்பட்ட பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும். மேலும் அதற்கான தண்டனையும் இன்னும் கடுமையாக இருக்கும்.
46. இங்கிருந்து இறுதிப் பத்தி வரையிலான வசனங்களில்தான் இஸ்லாத்தில் பர்தா தொடர்பான சட்டங்கள் முதன்முதலாக அருளப்படத் தொடங்கின. இந்த வசனங்களில் அன்பு நபிகளாரின் அருமை மனைவியரை விளித்து கருத்துரை நல்கப்பட்டிருக்கின்றது என்றாலும் முஸ்லிம் இல்லங்கள் அனைத்திலும் இந்தச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதுதான் நோக்கமாகும். நபிகளாரின் தூய்மை நிறைந்த மனைவியரை விளித்து கருத்துரை நல்கப்பட்டதற்கு ஒரே நோக்கம்தான். அதாவது நபிகளாரின் இல்லத்திலிருந்து இந்தத் தூய்மையான வாழ்க்கை நெறிகளின் தொடக்கம் அமையுமேயானால் முஸ்லிம் இல்லங்களின் பெண்கள் தாமாக முன் வந்து இவற்றைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஏனெனில் நபிகளாரின் இல்லம்தான் அவர்களுக்கு முன்மாதிரியான இல்லம் என்கிற அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது. நபிகளாரின் தூய்மை நிறைந்த மனைவியரை விளித்து கருத்துரை நல்கப்பட்டிருக்கின்ற ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு இந்தச் சட்டங்களும் நெறிமுøறகளும் அவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட சிறப்புச் சட்டங்களாகும் எனச் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இதன் பிறகு இந்த வசனங்களில் என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவற்றை சற்றே ஆய்ந்து பாருங்கள். அவற்றில் நபிகளாரின் தூய்மை நிறைந்த மனைவியருக்கு மட்டுமே உரித்தானது என்றும் பொதுவான முஸ்லிம் பெண்களுக்குப் பொருந்தாது என்றும் சொல்லத்தக்கதாக ஏதேனும் இருக்கின்றதா, என்ன? நபிகளாரின் தூய்மைமிக்க மனைவியர் மட்டுமே தூய்மையின்மை அகற்றப்பட்டவர்களாய், முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்; அவர்கள் மட்டுமே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; அவர்கள் மட்டுமே தொழுகையை நிலைநாட்ட வேண்டும். ஜகாத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாக இருக்க முடியுமா என்ன?
அல்லாஹ்வின் நோக்கம் அதுவாக இருக்க முடியாது எனும் போது உங்களுடைய வீடுகளிலேயே தங்கியிருங்கள்; அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்; அந்நிய ஆண்களுடன் மென்மையாகப் பேசாதீர் ஆகிய கட்டளைகள் நபிகளாரின் தூய்மை நிறைந்த மனைவியருக்கு மட்டுமே உரித்தானவையாய் எப்படி ஆகிவிடும்? பொதுவான முஸ்லிம் பெண்களை அந்தக் கட்டளைகளிலிருந்து விதிவிலக்கானவர்களாய் எப்படிச் சொல்ல முடியும்? ஒரே உரைத்தொடரின் ஒட்டுமொத்த சட்டங்களிலிருந்து சிலவற்றைப் பொதுவான சட்டங்களாகவும் இன்னும் சிலவற்றைக் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் பிரித்து அறிவிப்பதற்கு ஏதேனும் அறிவார்ந்த ஆதாரம் எதுவும்
இருக்கின்றதா, என்ன?
‘நீங்கள் ஏனைய சாதாரண பெண்களைப் போன்றவர்களல்லர்’ என்கிற வாசகத்தைப் பொறுத்தவரை அதற்கும் ‘சாதாரண பெண்கள் வேண்டுமானால் ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக் கொண்டு வெளியே நடமாடலாம்; அந்நிய ஆண்களுடன் ஈர்ப்பு ஏற்படுகின்ற வகையில் குழைந்து பேசலாம்; ஆனால் நீங்கள் இப்படிப்பட்ட நடத்தையை மேற்கொள்ளக் கூடாது’ என்று பொருள் அல்ல. அதற்கு மாறாக கண்ணியவான் ஒருவர் தன்னுடைய மகனைப் பார்த்து, ‘நீ தெருவில் திரிகின்ற பையன்களைப் போன்றவன் அல்லன்; நீ இப்படியெல்லாம் திட்டக்கூடாது’ என்று சொல்வதைப் போன்ற தொனியில் தான் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது. அவருடைய இந்த அறிவுரையைக் கொண்டு ‘அந்தக் கண்ணியவான் தன்னுடைய பிள்ளை கெட்ட வார்த்øதகளைச் சொல்வதைத்தான் கெட்ட நடத்தையாக நினைக்கிறார்’ என்றும் ‘மற்ற குழந்தைகளிடம் இந்தக் குறை இருந்தாலும் அவருக்கு அதைப் பற்றிய கவலை இல்லை’ என்றும் எந்தவொரு அறிவார்ந்த மனிதரும் விளங்கிக் கொள்ள மாட்டார்.
(தொடரும்)