மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஒழுக்க வாழ்வின் முன்மாதிரி
மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் , தமிழில் : அபூ ஹானியா, செப்டம்பர் 1-15, 2024


 


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சிறந்த ஒழுக்கங்களையும் நன்மைகளையும், அழகிய நற்செயல்களையும் நிறைவு செய்வற்காகத்தான் இறைவன் என்னை அனுப்பினான்’.
அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி) நூல் : ஷரஹ் அல்சுன்னா


இமாம் மாலிக்கின் முஅத்தா நூலில் நன்னடத்தையை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டேன் என்கிற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. அஹ்மத் நூலில் இந்த நபிமொழி அபூஹுரைரா(ரலி)யின் அறிவிப்புகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.


இந்த நபிமொழிகளில் நபி(ஸல்) அவர்கள் ஒரு மிகப் பெரும் உண்மையை எடுத்துரைத்துள்ளார்கள். ஒழுக்கம், நன்னடத்தை ஆகியவற்றின் மகத்துவத்தையும், உன்னதத்தையும், அழகையும் நிறைவு செய்வதும் முழுமைப்படுத்துவதும்தான் தம்முடைய வருகையின் முதன்மை நோக்கமும் இலட்சியமும் என அன்பு நபிகளார்(ஸல்) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


இயல்பான உணர்வுகள், மனநிலைகள், மன எழுச்சிகள் ஆகியவற்றின் மறுபெயர்தான் ஒழுக்கமும் நடத்தையும். உண்மையில் ஒழுக்கம் என்பது கண்களுக்குப் புலப்படாத ஒன்று ஆகும். மனிதனின் பல்வேறு செயல்கள், நடவடிக்கைகள் வழியாக அவனுடைய ‘ஒழுக்கம்’ வெளிப்படும்.எண்ணங்கள், தீர்மானங்கள், அதிகாரங்கள், உணர்ச்சிகள், மனஎழுச்சிகள் ஆகியவற்றைச் சரி யாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தும் போதுதான் வாழ்வு உன்னதமாக அமையும். அத்தகைய வாழ்வுதான் முன்மாதிரியானதாக, விரும்பத்தக்கதாக எல்லாராலும் கொண்டாடப்படும்.


வாழ்க்கையைப் பல்வேறு கூறுகளாகப் பகுக்காமல் ஒட்டுமொத்த வாழ்வும் ஒன்றே என அறிவித்தார்கள், நபி(ஸல்) அவர்கள். அது மட்டுமல்ல சமூகம், அரசியல், பொருளாதாரம், ஆட்சியதிகாரம் என வாழ்வின் எல்லாக் களங்களுக்கும் சரியான ஒழுக்க நெறிமுறைகளையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுத்துத் தந்தார்கள். அத்துடன் நின்று விடாமல் அவற்றை நடைமுறை வாழ்வில் செயல்படுத்தி, அந்தக் கொள்கை, கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் கட்டமைத்து, அரசை நிறுவினார்கள்.


நபி(ஸல்) அவர்களின் மிகப்பெரும் சாதனையே இதுதான். ‘நன்னடத்தையை நிறைவுசெய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்’ என்கிற நபிமொழியில் மனித வாழ்வு பற்றிய சரியான, சிறப்பான விளக்கம் பொதிந்துள்ளது.ஒழுக்கம் பற்றிய காலாவதியாகி விட்ட, குறுகிய கருத்தோட்டத்தை உடைத்தெறிந்து ஒழுக்கத்துக்கு விரிவான, அனைத்தையும் தழுவிய பொருளைக் கொடுத்து அதன் வீச்சையும்தாக்கத்தையும் வானளாவியதாக ஆக்கி விட்டார்கள், நபி(ஸல்) அவர்கள். எதுவரையெனில் மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் சரி, கூட்டு வாழ்விலும் சரி அவற்றின் யாதொரு பகுதியும் ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டதாக, ஒழுக்க நெறிமுறைகளை விட்டு சுதந்திரமானதாக எஞ்சி இருக்கவில்லை.


இந்தப் பேரண்டத்தை எத்தகைய நெறிமுறைகளும் விதிமுறைகளும் இயக்கி வருகின்றனவோ அந்த நெறிமுறைகளோடு இயைந்து போனதாக மனித வாழ்வு ஆகி விட்டது. இந்த உண்மையைத்தான் திருக்குர்ஆன் பின்வருமாறு அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது:
அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றது வானங்களில் உள்ள, பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியதாகும். மேலும், அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றலுடையவன். (திருக்குர்ஆன் 64:1)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்