நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரண பெண்களைப் போன்றவர்களல்லர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாயிருந்தால், மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில், உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும்! ஆகவே, தெளிவாய் நேர்த்தியாய்ப் பேசுங்கள்.47 மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள்.48 தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நபியினுடைய குடும்பத்தினராகிய உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான்.
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள் : 32, 33
47. தேவைப்படும் போது எவரேனும் ஓர் ஆணுடன் பேசுவதில் பாதகமில்லை. ஆனால் இத்தகையச் சந்தர்ப்பங்களிலும் உரையாடுகின்ற ஆணின் உள்ளத்தில் ‘இந்தப் பெண் குறித்து வேறுமாதிரியான எதிர்பார்ப்பையும் வளர்த்துக்கொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றது’ என்கிற எண்ணம் இம்மியளவு கூட ஒருபோதும் தோன்றாத வகையில் அதற்கு இடம் தராத வகையில் பெண்ணின் பேச்சுத் தொனியும், உரையாடும் பாணியும் இருக்க வேண்டும். அவள் பேசும்போது அவளுடன் உரையாடுகின்ற ஆணின் உள்ளத்தில் உணர்ச்சிகளைக் கிளறச் செய்கின்ற விதத்திலும், அடுத்த அடி எடுத்து வைக்கலாம் என்கிற சபலத்தை உண்டாக்குகின்ற விதத்திலும் அவளுடைய உச்சரிக்கும் தொனியில் குழைவும் மென்மையும் இருக்கலாகாது; அவளுடைய பேச்சில் மனத்தை ஈர்க்கும் வாசம் இருக்கலாகாது.
இந்த மாதிரியான பேச்சு தொடர்பாக இது இதயத்தில் இறைவனைப் பற்றிய அச்சத் தையும் தீமையிலிருந்து முற்றாக விலகி இருத்தல் வேண்டும் என்கிற பேரார்வம் கொண்ட எந்தவொரு பெண்ணுக்கும் இது அழகு அல்ல என்றே இறைவன் கூறுகின்றான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் இது ஃபாசிக்கான (இறைவனுக்கு எதிராகக்
கலகம் செய்கின்ற), ஃபாஜிரான (பெரும் பாவங்களில் உழல்கின்ற) பெண்களின் பேச்சுதானே தவிர இறைநம்பிகையும் இறையச்சமும் கொண்ட பெண்களின்
பேச்சு அல்ல.
இதனோடு அத்தியாயம் அந்நூரின் அந்த வசனத்தையும் ‘..தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்
காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம்’ (திருக்குர்ஆன் 24:31) கருத்தில் கொள்வோமேயானால், ‘பெண்கள் தேவையின்றி தம்முடைய குரலோசைøயயும் சலங்கை ஒலி, மெட்டி ஒலி, வளையல்கள் எழுப்பும் ஒலி போன்ற நகைகளின் ஒலியையும் அந்நிய ஆண்கள் கேட்கச் செய்யக் கூடாது; அப்படியே அந்நிய ஆண்களுடன் பேச வேண்டிய தேவை ஏற்படுகின்ற போது முழுமையான கவனத்தோடும் விழிப்போடும் பேச வேண்டும்’ என்பதுதான் அகிலங்களின் அதிபதியான இறைவனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது.
இதனால்தான் ஜமாஅத்தாக தொழுகின்ற போது பெண்களும் பங்கேற்பார்களேயானால், தொழுகையின் போது இமாம் பிழையாக எதனையும் செய்துவிட்டாலோ ஆண்களைப் போன்று சுப்ஹானல்லாஹ் என்று உரத்துச் சொல்வதற்குப் பதிலாக தங்களின் கைகளைத் தட்டி ஓசையை எழுப்ப வேண்டும் என்றே பெண்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.
இங்கு சற்றே யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பெண் ஒருத்தி அந்நிய ஆணுடன் இனிமையான குரலில் குழைந்து பேசுவதற்கு அனுமதி மறுக்கின்ற ஒரு மார்க்கம் அந்நிய ஆண்களுக்கு முன்னால் மேடையில் ஏறி பாடுவதையும் ஆடுவதையும் வானொலியில் காதல் உணர்வு பொங்கப் பாடுவதையும் இனிமையான பாடல்களைப் பாடியவாறு ஆபாசக் கட்டுரைகளை ஏற்ற இறக்கத்துடன் வாசித்து வாசித்து கேட்பவர்களின் மனங்களில் காமத்தீயை மூட்டுவதற்கும் அனுமதிக்குமா, என்ன? பெண்கள் சில சமயம் ஒருத்தனின் மனைவியாக, வேறு சமயம் இன்னொருவனின் காதலியாக, சகோதரியாக என்று விதவிதமாக நாடகங்களில் நடிப்பது கூடும் என்று அது அறிவிக்குமா, என்ன?
கிளப்களிலும் மன மகிழ்வு மன்றங்களிலும் கூட்டு விழாக்களிலும் இருபாலரும் கலந்து பங்கேற்கிற அவைகளில் புத்தாடை அணிந்து முகமுலாம்
பூசிக்கொண்டு வந்து பங்கேற்று ஆண்களுடன் இரண்டறக் கலந்து இனிக்க, சிரிக்கப் பேசி, கிண்டல் செய்வதற்கு அது அனுமதிக்குமா, என்ன? திருக்குர்ஆனில் எங்கேனும் இந்த மாதிரியான கலாச்சாரத்துக்கானசாத்தியம் தென்படுகின்றதெனில் அதனை அடையாளம் காட்டுங்களேன்.
48. இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான சொற்கள் ஆளப்பட்டுள்ளன. வசனத்தின் பொருளையும் நோக்கத்தையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்வதற்கு இந்த இரண்டு சொற்களையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒன்று, தபர்ரூஜ், இரண்டாவது, ஜாஹிலிய்யத்தே ஊலா.
தபர்ரூஜ் என்கிற சொல்லுக்கு அரபி மொழியில் எடுப்பாகத் தெரிகின்ற, வெளிப்படையாகத் தோன்றுகின்ற என்று பொருள். வெளிப்படையாகத் தெரிகிற, உயரமான பொருளைக் குறிப்பதற்கு அரபுகள் ‘பரஜ்’ என்கிற சொல்லை ஆள்கின்றார்கள். உயரமாகவும் எடுப்பாகத் தெரிவதாகவும் இருப்பதால்தான் கோபுரங்கள் ‘புரூஜ்’ என்று அழைக்கப்படுகின்றன. பாய்மரக் கப்பலின் பாய்கள் வெகுதொலைவிலிருந்தே தென்பட்டுவிடுகின்ற அளவுக்கு எடுப்பாகவும் உயரமாகவும் இருப்பதால்தான் அது ‘பாரிஜா’ என்று அழைக்கப்படுகின்றது.
பெண் விஷயத்தில் தபர்ரூஜ் என்கிற சொல் ஆளப்படுகின்ற போது அதற்கு மூன்று பொருள்கள் இருக்கும். ஒன்று, அவள் தன்னுடைய உடலழகை மக்களுக்குக் காண்பித்தல்; இரண்டாவதாக அவள் தன்னுடைய ஆடை, அணிகலன்கள், நகை நட்டுகளின் மேன்மையை மற்றவர்களுக்கு முன்னால் எடுப்பாக வெளிப்படுத்துதல்; மூன்றாவதாக, அவள் தன்னுடைய ஒப்பனையாலும் ஒய்யாரத்தாலும் தன்னை மற்றவர்களுக்கு முன்னால் வெளிப்படுத்துதல். அகராதி வல்லுநர்களும் குர்ஆன் விரிவுரையாளர்களும் இந்தச் சொல்லுக்கு இந்த விளக்கத்தைத்தான் தந்திருக்கின்றார்கள்.
முஜாஹித், கத்தாதா, இப்னு அபி நஹீஹ் ஆகியோர் கூறுகின்றார்கள்: ‘தபர்ரூஜ் என்பதற்கு இச்சையைத் தூண்டுகின்ற விதத்தில் ஒய்யாரமாக நடந்து
செல்லுதல்’. முகாதில் கூறுகின்றார்: ‘பெண் தன்னுடைய கழுத்தில் அணிந்திருக்கும் நகையையும் காதணிகளையும் தன்னுடைய கழுத்தையும் எடுப்பாக வெளிப்படுத்துதல்.’ அல்முபர்ரத் கூறுகின்றார்: ‘பெண் தாம் மறைக்க வேண்டிய அழகுகளையும் வனப்புகளையும் வெளிப்படுத்துதல்.’ அபூ உபைதா அவர்களின் விளக்கம் வருமாறு: ‘ஆண்கள் தன் மீது மோகம் கொள்கின்ற வகையில் தன்னுடைய உடல், உடை ஆகியவற்றின் வடிவத்தை அப்படியே எடுப்பாக வெளிப்படுத்துதல்.’
ஜாஹிலிய்யத் என்கிற சொல் குர்ஆனில் இந்த இடத்தைத் தவிர இன்னும் மூன்று இடங்களில் ஆளப்பட்டுள்ளது. முதலாவதாக, அத்தியாயம் ஆலு இம்ரானில் 154ஆம் வசனத்தில் இறைவனின் வழியில் ஜிஹாத் செய்ய முன் வராதவர்களைக் குறித்து, ‘அல்லாஹ்வைப் பற்றி ஜாஹிலிய்யத் நிறைந்த (அறியாமை மிக்க) யூகங்களைக் கொண்டிருந்தார்கள்’ என்று கூறப்பட்டது. இரண்டாவதாக, அத்தியாயம் அல்மாயிதாவில் 50 ஆவது வசனத்தில் இறைவனின் சட்டத்துக்குப் பதிலாக வேறு ஏதோ சட்டத்தின்படி தங்களின் வழக்குகளைத் தீர்த்துக் கொண்டிருந்தவர்கள் குறித்து, ‘(அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக் கின்றார் களென்றால்) பிறகு ஜாஹிலிய்யத்தின் தீர்ப்பினையா அவர்கள் விரும்புகின்றார்கள்?’ என்று சொல்லப்பட்டது.
மூன்றாவதாக, அத்தியாயம் அல்ஃபத்ஹில் 26ஆவது வசனத்தில் வெறுமனே பகையாலும் வெறுப்பாலும் உந்தப்பட்டு முஸ்லிம்களை உம்ரா செய்ய விடாமல் தடுத்த மக்கத்து இறைமறுப்பாளர்களின் செயலை ‘ஜாஹிலிய்யத் தனமான வெறுப்பும் பகையும் நிறைந்த வைராக்கியம் (மூட வைராக்கியம்)’ என்கிற சொற்களுடன் உருவகித்துச் சொல்லப்பட்டது.
நபிமொழி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: ‘ஒரு முறை அபூதர்தா(ரலி) அவர்கள் எவருடனோ சண்டையிட்ட போது அவருடைய தாயைப் பழித்துவிட்டார். நபிகளாருக்கு இது பற்றிய தகவல் தெரிய வந்த போது நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘உமக்குள் இன்னும் ஜாஹிலிய்யத் (தனமான சிந்தனைப்போக்கு) எஞ்சி இருக்கின்றது’. இன்னொரு நபிமொழியில் நபிகளார்(ஸல்), ‘மூன்று செயல்கள் ஜாஹிலிய்யத்தனமானவை. மற்றவர்களின் வம்சத்தைப் பழித்தல். நட்சத்திரங்களின் அசைவுகளைக் கொண்டு குறி பார்த்தல். இறந்து போனவர்களுக்காக ஒப்பாரி வைத்து அழுதல்.’ என்று சொன்ன விவரம் பதிவாகியிருக்கின்றது.
பல்வேறு சந்தர்ப்பச் சூழல்களிலும் தருணங்களிலும் ஜாஹிலிய்யத் எனும் சொல் எவ்வாறு எல்லாம் ஆளப்பட்டுள்ளது என்பது பற்றிய மேலே கூறப்பட்ட விவரங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது இஸ்லாமிய பண்பாட்டுக்கும், இஸ்லாமிய ஒழுக்கத்துக்கும் நேர் முரணான நடத்தைகளும் செயல்பாடுகளும்தாம் இஸ்லாமிய மரபில் ஜாஹிலிய்யத் எனும் சொல்லால் உணர்த்தப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. ‘முந்தைய ஜாஹிலிய்யத் (அஞ்ஞானக்) காலத்திய’ என்பது இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் அரபு மக்களும் உலகத்தின் பிற பகுதி வாழ் மக்களும் உழன்று கொண்டிருந்த தீமைகளைக் குறிக்கும்.
பெண்கள் தங்களின் அழகையும் வனப்பையும் வெளிப்படுத்தியவாறு வீடுகளை விட்டு வெளியேறுகின்ற நடத்தையையும் போக்கையும்தான் இறைவன் தடுக்க விரும்புகின்றான் என்பது இந்த விளக்கத்திலிருந்து தெளிவாகி விடுகின்றது. மேலும், உங்களின் இல்லங்களிலேயே தங்கியிருங்கள்; ஏனெனில் உங்களின் அசல் வேலை இல்லங்களில்தான் இருக்கின்றதே தவிர, வெளியில் அல்ல. என்றாலும் வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படுமேயானால் முந்தைய ஜாஹிலிய்யத் காலத்திய பெண்கள் கடைப்பிடித்த தோரணையோடு வெளியே செல்லாதீர்கள்.
இந்த நிலையில் இன்று நம்முடைய சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பண்பாடு குர்ஆன் காண்பிக்கின்ற இஸ்லாமியப் பண்பாட்டில் சேருமா அல்லது ஜாஹிலிய்யத்திய பண்பாட்டில் சேருமா என்பதை எவரும் எளிதாகக் கணித்துவிடலாம்.
(தொடரும்)