மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நபிகளாரின் குடும்பத்தினர்
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், அக்டோபர் 01-15




‘மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நபியினுடைய குடும்பத்தினராகிய உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான்’.49

· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 33

 
49. இதற்கு முந்தைய பிந்தைய வசனங்களையும் இது வரையிலான உரையின் உள்ளடக்கத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது இங்கு அஹ்லே பைத் என்கிற
சொல் நபிகளாரின் அருமை மனைவியரைக் குறிக்கின்றது என்பது வெளிப்படை. ஏனெனில் உரையின் தொடக்கமே ‘நபியின் மனைவியரே!’ என்கிற சொற்களுடன் அமைந்துள்ளது. மேலும் இதற்கு முன்பும் பின்பும் ஒட்டுமொத்த உரையும் நபிகளாரின் மனைவியரை விளித்தே நிகழ்த்தப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி நாம் ‘நம் குடும்பத்தார்’ என்று எந்தப் பொருளில் சொல்கின்றோமோ அதே பொருளில்தான் அரபு மக்கள் அஹ்லே பைத் என்கிற சொல்லை ஆள்கின்றார்கள். மேலும் ஒருவரின் மனைவி, குழந்தைகள் என குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் குறிப்பதாக அந்தச் சொல் இருக்கின்றது. மனைவியை விலக்கி விட்டு ‘குடும்பத்தார்’ என்று எவரும் சொல்வதில்லை.

மகத்துவம் மிக்க குர்ஆனிலும்கூட இந்தச் சொல் இன்னும் இரண்டு இடங்களில் ஆளப்பட்டிருக்கின்றது. இரண்டு இடங்களிலும் மனைவியையும் உள்ளடக்கியதாகத்தான் இன்னும் சொல்லப் போனால் மனைவியை பிரதானமாகச் சுட்டுவதாகத்தான் இந்தச் சொல் ஆளப்பட்டுள்ளது. அத்தியாயம் ஹூதில் இப்ராஹீம் நபிக்கு மகன் பிறக்கப் போகின்றான் என்கிற நற்செய்தியை வானவர்கள் அறிவிக்கின்ற போது அதனைக் கேட்டு இப்ராஹீம் நபியின் மனைவி திகைத்துப் போய் இந்த முதிய வயதில் எங்களுக்கு எங்கே குழந்தை பிறக்கப் போகின்றது என்று சொல்கின்றார். அதற்கு வானவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் கட்டளை குறித்து வியப்புறுகின்றீரா? இப்ராஹீமின் குடும்பத்தாரே! உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய வாழ்த்துகளும் பொழிந்து கொண்டிருக்கின்றன’. (பார்க்க : திருக்குர்ஆன் 11:73)

இதே போன்று அத்தியாயம் அல் கஸஸில் மூஸா(அலை) அவர்கள் பால் குடிக்கும் கைப்பிள்ளையாக இருந்த நேரத்தில் ஃபிர்அவ்னின் வீட்டுக்குச் சென்றடை கின்றார்கள். எவரிடமும் பால் குடிக்க மறுக்கின்ற அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி பராமரிப்பதற்கான செவிலித்தாய் எவரேனும் கிடைத்துவிட மாட்டாரா என்று ஃபிர்அவ்னின் மனைவி தேடிக் கொண்டிருந்த வேளையில் மூஸா(அலை) அவர்களின் சகோதரி
அவரிடம் சென்று சொல்கின்றார்: ‘இக்குழந் தையைப் பரிபாலித்து வளர்க்கும் ஒரு வீட்டா ரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?’ (பார்க்க: திருக்குர்ஆன் 28:12)

அரபு மொழி வழக்காறுகள், குர்ஆனில் இந்தச் சொல் ஆளப்பட்டுள்ள விவரங்கள், அதற்கும் மேலாக நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தின் முந்தைய, பிந்தைய வசனங்கள், உரையின் உள்ளடக்கம் ஆகிய எல்லாமே நபிகளாரின் குடும்பத்தாரில் (அஹ்லே பைத்) நபிகளாரின் மனைவியரும் நபிகளாரின் பிள்ளைகளும் அடங்குவர் என்பதற்கே சான்றளிக்கின்றன. இந்தக் காரணத்தினால்தான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் உர்வா பின் சுபைர்(ரலி), இக்ரிமா(ரலி) போன்றோரும் இந்த வசனத்தில் ‘அஹ்லே பைத்’ என்கிற சொல் நபிகளாரின் மனைவியரைத்தான்
குறிக்கும் என்று கூறியிருக்கின்றார்கள்.

அதே சமயம் அஹ்லே பைத் என்கிற சொல் நபிகளாரின் மனைவியருக்காக மட்டுமே ஆளப்பட்டிருக்கின்றது; அவர்களைத் தவிர மற்றவர்களை அது குறிக்காது என்று ஒருவர் சொல்வாரேயானால் அதுவும் தவறான கருத்தே. ‘குடும்பத்தார்’ என்கிற சொல்லில் ஒருவரின் மனைவி, மக்கள் என அனைவருமே அடங்குவர்கள் என்பது ஒரு புறம் இருக்க, நபிகளாரே அதனைத் தெளிவுபடுத்தியும் இருக்கின்றார்கள்.
இப்னு அபி ஹாதிம்(ரலி) அறிவிக்கின்றார்கள்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஒரு முறை அலீ(ரலி) அவர்களைக் குறித்து வினவப்பட்ட போது அன்னை ஆயிஷா(ரலி) கூறினார்கள்: ‘நபிகளாரின் மிக மிக அன்புக்குரியவராக இருந்த மனிதரைக் குறித்து நீங்கள் வினவுகின்றீர். அவருடைய மனைவியாரோ நபிகளாரின் மகளாக மற்றெல்லோரைக் காட்டிலும் நபிகளாருக்கு மிகவும் விருப்பத்துக்குரியவராக இருந்தார்.’ அதன் பிறகு அன்னை ஆயிஷா(ரலி) நபிகளாரின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டார்கள்.

ஒரு முறை நபிகளார்(ஸல்) அலீ (ரலி), ஃபாத்திமா(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோரை தம்மிடம் அழைத்தார்கள். அவர்கள் மீது துணி ஒன்றைப் போர்த்தினார்கள். பிறகு ‘இறைவா! இவர்கள் என்னுடைய அஹ்லே பைத்தாக (குடும்பத்தாராக) இருக்கின்றார்கள். இவர்களிடமிருந்து அழுக்கை அகற்றி விடுவாயாக! இவர்களைத் தூய்மைப்படுத்திவிடுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அன்னை ஆயிஷா(ரலி) தொடர்ந்து கூறுகின்றார்கள்: ‘நான் நபிகளாரிடம் சொன்னேன்: ‘நானும் உங்களின் அஹ்லே பைத்தாக (குடும்பத்தாரில் ஒருவராக) இருக்கின்றேன். (அதாவது என்னையும் அந்தத் துணிக்குள் நுழைவித்து எனக்காகவும் பிரார்த்தியுங்கள்)’. நபிகளார்(ஸல்) கூறினார்கள்:

‘நீங்கள் விலகி இருங்கள். நீங்கள் mஏற்கனவே அஹ்லே பைத்தாக (குடும்பத்தாரில் ஒருவராக) இருக்கின்றீர்’. இதனோடு ஒட்டியிருக்கின்ற ஏராளமான நபிமொழிகளை முஸ்லிம், திர்மிதி, இப்னு ஜரீர், ஹாகிம், பைஹகி முதலிய நபிமொழியாளர்கள் அபூ ஸயீத் குத்ரி(ரலி), அன்னை ஆயிஷா(ரலி), அனஸ்(ரலி), உம்மு ஸல்மா(ரலி), வாஸிலா பின் அஸ்கா(ரலி) போன்றோரின் அறிவிப்புகளாகவும் இன்னும் பிறருடைய அறிவிப்புகளாகவும் பதிவு செய்திருக்கின்றார்கள். இவற்றிலிருந்து அலீ(ரலி), ஃபாத்திமா(ரலி) ஆகியோரையும் அவர்களின் இரண்டு மகனார்களையும் நபிகளார்(ஸல்) தம்முடைய அஹ்லே பைத்தாக (குடும்பத்தாரில் ஒருவராக) அறிவித்திருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. இவர்களை அஹ்லே பைத் (நபிகளாரின் குடும்பத்தாரின்) பட்டியலிலிருந்து விலக்கி வைக்கின்றவர்களின் நிலைப்பாடு முழுக்க முழுக்க தவறானதாகும்.

இதே போன்று மேலே குறிப்பிடப்பட்ட நபிமொழிகளை  அடிப்படையாகக் கொண்டு நபிகளாரின் மனைவியர் அஹ்லே பைத் (குடும்பத்தாரில் ஒருவர்) என்கிற சிறப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அறிவிப்பவர்களின் கருத்தும் தவறாகும். முதலாவதாக குர்ஆனில் திட்டவட்டமாகவும் தெள்ளத் தெளிவாகவும் சொல்லப்பட்ட ஒன்றை எந்தவொரு நபிமொழியை ஆதாரமாகக் கொண்டும் ரத்து செய்துவிட முடியாது. இரண்டாவதாக இந்த நபிமொழிகளும் கூட இவர்கள் கற்பிக்கின்ற பொருளைக் கொண்டவையாய் இல்லை. அவற்றில் சில அறிவிப்புகளில் நபிகளார்(ஸல்) அந்தக் குறிப்பிட்ட நால்வரை எந்தப் போர்வையின் கீழ் ஒன்றுதிரட்டினார்களோ அந்தப் போர்வையின் கீழ் அன்னை ஆயிஷா(ரலி), அன்னை உம்மு ஸல்மா(ரலி) ஆகியோரை சேர்த்துக் கொள்ளவில்லை என்கிற விவரம் வந்துள்ளது.
இதற்கு நபிகளார்(ஸல்) அஹ்லே பைத் (குடும்பத்தார்) என்கிற அந்தஸ்திலிருந்து அவ்விருவரையும் தகுதிநீக்கம் செய்து விட்டார்கள் என்று பொருள் அல்ல. அதற்கு மாறாக, அவர்கள் ஏற்கனவே ‘அஹ்லே பைத் (குடும்பத்தாரைச்) சேர்ந்தவராக இருக்கின்றார்கள். ஏனெனில் குர்ஆன் அவர்களை அஹ்லே பைத் என்று விளித்துத் தான் செய்தியை எடுத்துரைத்துள்ளது.

ஆனால் குர்ஆனின் இந்தத் தொனியை அடிப்படையாகக் கொண்டு மற்ற நால்வரை அஹ்லே பைத் (குடும்பத்தாருக்கு) அப்பாற்பட்டவர்கள் என்கிற தவறான கருத்துக்கு மக்கள் ஆளாகிவிடுவார்களோ என நபிகளார் (ஸல்) அஞ்சினார்கள். எனவே அஹ்லே பைத் (குடும்பத்தாரைச்) சேர்ந்தவர்கள் தாம் எனத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை அந்த நால்வருக்கு மட்டுமே அவசியமாயிற்று. நபிகளாரின் மனைவியர் குறித்து அவ்வாறு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்க வில்லை. ஒரு குழுவினர் இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கின்ற சாக்கில் என்ன கொடுமை செய்தார்கள் எனில் நபிகளாரின் மனைவியரை ‘அஹ்லே பைத் குடும் பத்தாரிலிருந்து’ நீக்கிவிட்டு அலீ பின் அபூதாலிப்(ரலி), ஃபாத்திமா(ரலி), அவர்களின் பிள்ளைகளை மட்டும் குறிக்கிற சொல்லாக அஹ்லே பைத் என்கிற சொல்லை ஆக்கிவிட்டார்கள். அது மட்டுமல்ல அதற்கும் ஒரு படி மேலாக ‘உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான்’ என்கிற வாசகங்களிலிருந்து ‘அலீ பின் அபூதாலிப்(ரலி), ஃபாத்திமா(ரலி)ஆகியோரும் அவர்களின் பிள்ளைகளும் இறைத்தூதர்களைப் போன்றே பாவக்கறை படியாத அப்பழுக்கற்றவர்கள் ஆவர் என்கிற தீர்மானத்துக்கு வந்துவிட்டார்கள்.

இங்கு ‘தூய்மையின்மை’ என்பது பாவங்களையும் குற்றங்களையும் குறிக்கும் என்றும் இறைவாக்கின் ஒளியில் அஹ்லே பைத் (குடும்பத்தார்கள்) பாவங்களிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் தூய்மைப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்றும் அவர்கள் வாதிட்டார்கள். இத்தனைக் கும் உங்களிலிருந்து தூய்மையின்மை அகற்றப் பட்டு விட்டது; மேலும் நீங்கள் முழுமையாகத் தூய்மையடைந்து விட்டீர்கள்’ என்பதாக இங்கு வாசகங்கள் இருக்கவில்லை. அதற்கு மாறாக ‘உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்தவே அல்லாஹ் விரும்புகின்றான்’ என்பதாகத்தான் வாசகங்கள் இருக்கின்றன.

இதற்கு முந்தைய, பிந்தைய வசனங்களை யும் உரையின் உள்ளடக்கத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கின்ற போதும் இங்கு அஹ்லே பைத் (குடும்பத்தாரின்) சிறப்புகளை விவரித்து புகழ்ந்துரைப்பது நோக்கமாக இருக்கவில்லை என்பதும் அதற்கு மாறாக ‘நீங்கள் இன்ன வேலையைச் செய்யுங்கள்; இன்னின்னவற்றைச் செய்யாதீர்கள்; ஏனெனில் அல்லாஹ் உங்களைத் தூய்மைப்படுத்தவே விரும்புகின்றான்’ என்று அஹ்லே பைத் (குடும்பத் தாருக்கு) அறிவுரைதான் தரப்பட்டிருக்கின்றது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் நீங்கள் இன்ன நடத்தையை மேற்கொண்டீர்களானால் உங்களுக்குத் தூய்மை எனும் நற்பேறு கிடைக்கும்; இல்லையேல் அது உங்களுக்குக் கிடைக்காது என்றும் அறிவுரைதான் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த வசனத்துக்கு அல்லாஹ் அவர்களைப் பாவக்கறை படியாத அப்பழுக்கற்றவர்களாய் ஆக்கிவிட்டான் என்று பொருள் கொள்வோமேயானால் தொழுகைக்காக ஒளு செய்கின்ற, பெருந்துடக்கு எனும் தூய்மையற்ற நிலையிலிருந்து மீள்வதற்காக குளிக்கின்ற, தயம்மும் செய்கின்ற முஸ்லிம்கள் எல்லோரையும் பாவக்கறை படியாத அப்பழுக்கற்றவர்களாய் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் அவர்களைக் குறித்தும் ‘ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அல்லாஹ் விரும்புகின்றான்’ (திருக்குர்ஆன் 5:6) என்றே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்