உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், விவேகமான விஷயங்களையும் நினைவில் வையுங்கள்; 50 திண்ணமாக, அல்லாஹ் நுண்மையானவனாகவும் 51 யாவும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். 52 ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும்,53 நம்பிக்கையாளர்களாகவும்,54 கீழ்ப்படிபவர்களாகவும், 55 வாய்மையாளர்களாகவும், 56 பொறுமையுடையோராகவும்,அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள் : 34 35
50. மூலத்தில் வஃத்குர்ணா என்கிற சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, ‘நினைவில் வைத்திருங்கள்’, ‘எடுத்துரையுங்கள்’ என இரண்டு பொருள்கள் உண்டு. முதல் பொருளைக் கருத்தில் கொள்ளும்போது ‘நபிகளாரின் மனைவியரே! உங்களுடைய இல்லத்திலிருந்துதான் உலகம் முழுவதற்கும் இறை வசனங்களும் விவேகம் நிறைந்த போதனைகளும் போதிக்கப்படுகின்றன என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இந்த அடிப்படையில் உங்கள் மீதான பொறுப்பு மிகவும் பெரிதாகும். மக்கள் இந்த இல்லத்திலிருந்து அறியாமையின் மாதிரிகளைப் பார்க்க நேரிடுவதாய் உங்களின் நடத்தைகள் அமைந்துவிடக்கூடாது’ என்று இதற்குப் பொருளாகும். இரண்டாவது பொருளைக் கருத்தில் கொள்ளும்போது ‘நபிகளாரின் மனைவியரே! இந்த இல்லத்தில் நீங்கள் கேட்கின்றவற்றையெல்லாம், பார்த்து அறிகின்றவற்றையெல்லாம் உலக மக்களுக்கு முன்னால் எடுத்துரையுங்கள். ஏனெனில் நபிகளாருடன் எந்நேரமும் பழகுவதால் உங்களைத் தவிர மற்ற எவரிடமிருந்தும் மக்களால் அறிந்து கொள்ள முடியாத வழிகாட்டுதல்கள் ஏராளமான அளவில் உங்களுக்கு நேரடியாகக் கிடைத்துள்ளன’ என்று இதற்குப் பொருளாகும்.
இந்த வசனத்தில் இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று ஆயாத்துல்லாஹ் இறைவனின் வசனங்கள். இரண்டாவது ஹிக்மத் விவேகம். ஆயாத்துல்லாஹ் என்பது இறைவனின் வசனங்களைத்தான் குறிக்கும். ஆனால் ஹிக்மத் என்கிற சொல்லோ மிகவும் பரந்த, விரிந்த பொருளைக் கொண்டதாகும். நபிகளார்(ஸல்) மக்களுக்குக் கற்பித்த அத்துணை விஷயங்களும் இதில் வந்து விடும். இறைவேதத்தின் போதனைகளைக் கூட இந்தச் சொல் உணர்த்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் இறைவேதத்தின் போதனைகள் வரையில் இதனைச் சுருக்கிவிடுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. குர்ஆனின் வசனங்களை ஓதிக் காண்பிப்பதோடு நபிகளார்(ஸல்) தம்முடைய அழகிய நடத்தைகள் மூலமாகவும், தம்முடைய போதனைகள் வாயிலாகவும் போதித்த அனைத்தும் இதில் அடங்கும் என்பதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமில்லை.
இந்த நிலையில் இந்த வசனத்தில் மா யுத்லா (ஓதப்படுகின்ற) என்கிற சொல்லை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஆயாத்துல்லாஹ், ஹிக்மத் ஆகிய இரண்டுமே குர்ஆனை மட்டுமே சுட்டுகின்றன என்றும், ஏனெனில் திலாவத் ஓதுவது என்பது குர்ஆன் ஓதப்படுவதற்கு மட்டுமே ஆளப்படுகின்ற சொல் என்றும் சிலர் வாதிடுகின்றார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க தவறான வாதமும் சான்றுமாகும். திலாவத் என்கிற சொல்லை குர்ஆனை அல்லது இறை
வேதத்தை ஓதுவதோடு சுருக்கிக் கொண்டது பிற்காலத்தில் வந்த மக்கள் உருவாக்கிய நடைமுறையாகும். குர்ஆனில் இந்தச் சொல் தனிச் சிறப்பைக் கொண்ட ஆதாரச் சொல்லாக ஆளப்படவில்லை என்பதுதான் உண்மை.
அத்தியாயம் அல்பகறாவில் 102ஆவது வசனத்தில் சுலைமான்(அலை) அவர்களின் பெயரைச் சாற்றிக் கொண்டு ஷைத்தான்கள் சூனியச் சொற்களை எடுத்தோதி வந்ததற்கும் இதே சொல் தான் ஆளப்பட்டுள்ளது. ‘இன்னும் சுலைமானின் ஆட்சிக் காலத்தில் ஷைத்தான்கள் (அவர் மீது சாற்றியவாறு புனைந்துரைத்து) எடுத்தோதி வந்த (சூனியத்)தை அவர்கள் பின்பற்றலானார்கள்’ (திருக்குர்ஆன் 2:102). இதிலிருந்து குர்ஆன் இந்தச் சொல்லை அதன் அகராதிப் பொருளில்தான் ஆண்டு வந்திருக்கின்றது என்பதும், இறைவேதத்தின் வசனங்கள் என்கிற தனிப் பொருளில் ஆதாரச் சொல்லாக அது இதனை ஆள்வதில்லை என்பதும் தெளிவாகின்றது.
51. அல்லாஹ் நுண்மையானவன். அதாவது மிக மிக நுட்பமான, பரம இரகசியமான விஷயங்களைக் கூட, மறைவான விஷயங்களைக் கூட அவன் அறிந்தவன். அவனுக்குத் தெரியாத வகையில் எந்தவொரு விஷயத்தையும் மறைத்து வைக்கவே இயலாது.
52. முந்தைய பத்திக்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக இந்த உரை அருளப்பட்டதன் மூலமாக, ‘மேலே நபிகளாரின் தூய்மையான மனைவியருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அனைத்தும் அவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமான வழிகாட்டுதல்கள் அல்ல. அதற்கு மாறாக முஸ்லிம் சமுதாயம் முழுவதுமே தம்முடைய நடத்தையை இந்த வழிகாட்டுதல்களைக் கொண்டு செம்மைப்
படுத்திக் கொள்ள வேண்டும்’ என நுட்பமான தொனியில் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கின்றது.
53. இஸ்லாத்தைத் தங்களுக்கான வாழ்க்கைத் திட்டமாக ஏற்றுக் கொண்டவர்கள்; மேலும் இனி இஸ்லாத்தைப் பின்பற்றியே தங்களின் வாழ்வை அமைத்துக்கொள்வோம் எனத் திட்டவட்டமாக தீர்மானித்தவர்கள். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் இஸ்லாம் வழங்குகின்ற வாழ்க்கைத் திட்டத்துக்கும், சிந்தனைப் பாங்குக்கும் எதிரான எந்த வøகயான ஆட்சேபமோ எதிர்ப்பு உணர்வோ இம்மியளவுகூட தங்களுக்குள் வைத்திராதவர்கள். அதற்கும் மேலாக அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றியும் அதன் கட்டளை
களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற பாதையை மேற்கொண்டிருந்தார்கள்.
54. அவர்களின் இந்தக் கீழ்ப்படிதலும் பின்பற்றுதலும் வெறுமனே மேம்போக்கானøவயாய் இருக்கவில்லை. வேண்டாவெறுப்பாகவும் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக முழு மனத்துடனும் மனப்பூர்வமாகவும் அவர்கள் இஸ்லாமிய வழிகாட்டுதல்தான் சத்தியமானது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். நபிகளாரும் குர்ஆனும் காண்பித்துத் தந்திருக்கின்ற சிந்தனை, செயல் ஆகியவற்றுக்கான வழிதான் நேரான, சரியான வழியாகும்; அதனைப் பின்பற்றி நடப்பதில்தான் நம்முடைய வெற்றி அடங்கி இருக்கின்றது என்பதுதான் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதனைத் தவறு என்று சொல்லி இருக்கின்றார்களோ அது திண்ணமாக தவறுதான் என்பதுதான் அவர்களின் சொந்தக் கருத்தாகவும் இருந்தது.
மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதனைச் சரியானது, சத்தியமானது என்று அறிவித்துவிட்டார்களோ அதனையே அவர்களும் சரியானதாக, சத்தியமானதாக அழுத்தம்திருத்தமாக இதயப்பூர்வமாக நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். குர்ஆனும் நபிவழியும் உறுதிப்படுத்திய சட்டம் யாதொன்றையும் பொருத்தமற்றதாக அவர்கள் மனதளவிலும் நினைத்ததில்லை; அந்தக் கோணத்தில் அவர்களின் சிந்தனையும் ஒருபோதும் அலை பாய்ந்ததுமில்லை. இறைச் சட்டத்தை எப்பாடுபட்டாவது தம்முடைய விருப்பத்தின்படியோ உலகத்தில் நடைமுறையில் இருக்கின்ற வழக்கங்களின் வார்ப்பிலோ வார்த்தெடுத்துவிட வேண்டும்; இறைவனும் இறைத்தூதரும் தந்த சட்டத்தைத் திருத்திவிட்டார்கள் என்கிற பழியையும் தம் தலையில் விழாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துக்கும் சிந்தனை மயக்கத்துக்கும் தடுமாற்றத்துக்கும் அவர்கள் ஒருபோதும் ஆளானதுமில்லை. ஈமான் எனும் இறைநம்பிக்கையின் உண்மையான இயல்பை நபிகளாரே நபிமொழி ஒன்றில் மிக அழகாக விவரித்திருக்கின்றார்கள்:
‘எவர் அல்லாஹ்தான் தன்னுடைய அதிபதி என்பதிலும், இஸ்லாம்தான் தம்முடைய வாழ்க்கைத்திட்டம் (மார்க்கம்) என்பதிலும், முஹம்மத்(ஸல்) தாம் தம்முடைய இறைத்தூதர் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றாரோ அவர் ஈமானின் சுவையை ருசித்தவர் ஆவார்.’ (முஸ்லிம்)
மற்றுமோர் நபிமொழியில் நபிகளார்(ஸல்) இதனைப் பின்வருமாறு விளக்கி இருக்கின்றார்கள்:
‘நான் கொண்டு வந்துள்ள மார்க்கத்துக்கும் சட்டதிட்டத்துக்கும் கட்டுப்பட்டதாக, அவற்றையே பின்பற்றி நடப்பதாக உங்களின் மனம் மாறாத வரையில் உங்களில் எவரும் இறைநம்பிக்கையாளர் ஆக மாட்டார்.’ (ஷரஹ் சுன்னாஹ்)
55. அவர்கள் வெறுமனே ஏற்றுக்கொண்டு சும்மா கிடப்பவர்களும் அல்லர். அதற்கு மாறாக, இறைச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் ஆவர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வகுத்துத் தந்தவைதாம்
சத்தியம் என உளமார, வாய்மையோடு ஏற்றுக் கொண்டாலும் தம்முடைய அன்றாட வாழ்வில் அவற்றுக்கு எதிராக நடப்பவர்களாக அவர்கள் இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவை அனைத்தும் தீமைகள் தாம் என உளமார, வாய்மையோடு கருதினாலும், தம்முடைய அன்றாட வாழ்வில் அந்தத் தீமைகளிலேயே உழன்று கொண்டிருப்பவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.
56. அவர்கள் தங்களின் பேச்சிலும் வாய்மையாளர்களாய் இருக்கின்றார்கள். மேலும் தம்முடைய கொடுக்கல்வாங்கலிலும் விவகாரங்களிலும் கூட உண்மையாளர்களாய் மிளிர்கின்றார்கள். பொய், மோசடி, துரோகம், கெட்ட எண்ணம், வஞ்சகம், ஏமாற்று, ஏய்த்துப் பிழைத்தல், போலி பகட்டு போன்றவை அவர்களின் வாழ்வில் அறவே இருக்காது. அவர்களின் மனசாட்சிக்குச் சரி எனப்படுவது மட்டுமே அவர்களின் நாவிலிருந்து வெளி வரும். சத்தியத்துக்கும் உண்மைக்கும் இயைந்து போவதாக தாம் உண்மையிலேயே உணர்கின்றவற்றை மட்டுமே அவர்கள் செய் கின்றார்கள். மற்றவர்களுடனான கொடுக்கல் வாங்கலிலும் விவகாரங்களிலும் அவர்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்கின்றார்கள்.
(தொடரும்)